தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (English: Tamil Nadu Agricultural University) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் பொது வேளாண்மை பல்கலைக்கழகமாகும். இதன் தலைமையகம் கோயமுத்தூரில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமே இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தால் (ICAR) அங்கீகரிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாறு
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் வேளாண் வளத்தை கருத்தில் கொண்டு மெட்ராஸ் மாகாணத்தில் 1868இல் சைதாப்பேட்டையில் மெட்ராஸ் வேளாண் பள்ளி தொடங்கப்பட்டது. பின்பு 1909இல் இக்கல்லூரி கோயமுத்தூருக்கு மாற்றப்பட்டு, சர் ஆர்தர் லாலி (Sir Arthur Lawley) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1928இல் மெட்ராஸ் பல்கலைகழகத்தின் இணைவு பெற்று மிகப்பெரிய கல்லூரியாக உயர்ந்தது.
1946 வரை தென் இந்தியாவில் ஒரே ஒரு வேளாண் கல்லூரி மட்டுமே இருந்து. அதுவும் கோயம்புத்தூரில் தான் இருந்தது. 1957 வரை வெறும் இளங்கலை படிப்புகள் மட்டுமே இருந்த நிலையில் 1958இல் முதுகலை படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் இணைக்கப்பட்டன. பின்பு 1965இல் கோவையை அடுத்து மதுரையில் இரண்டாவது வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த இரண்டு கல்லூரிகளே தமிழகத்தில் வேளாண் கல்வி செழிக்க அடித்தலமாய் அமைந்தது. 1971இல் இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற வேளாண் பல்கலைகழகம் என்ற பெருமை பெற்றது. 1972இல் வேளாண் இளங்கலை படிப்பை போலவே தோட்டக்கலை படிப்பும் வேளாண் பொறியியல் படிப்பும் தொடங்கப்பட்டது.
1976இல் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் இணைவு பெற்றது. 1977இல் தூத்துக்குடியில் முதல் மீன் வளக்கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் 1989இல் கால்நடை பல்கலைக்கழகம் தனி பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. அதுபோலவே 2012இல் மீன்வலக்கல்லுரியும் டாக்டர் ஜே ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் என்ற பெயரில் தனித்து செயல்பட துவங்கியது.[4]
1980இல் மதுரை வேளாண் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே உணவு அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்பு திருச்சி, பெரியகுளம், மேட்டுப்பாளையம், கிள்ளிகுளம், தஞ்சை, திருவன்னாமலை, நாகை, கரூர், செட்டிநாடு, பையூர், குமுலூர் போன்ற இடங்களில் என, மொத்தம் 19 அரசு கல்லூரிகளும் 28 இணைவுபெற்ற தனியார் வேளாண்மை கல்லூரிகளும் இணைத்து இன்று தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அரசு கல்லூரிகள்
டாக்டர் ம.சா. சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்.