தாலியம்(I) குளோரைடு (Thallium(I) chloride) என்பது TlCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலசு குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. நிறமற்ற இந்த உப்பு தாலியத்தை அதன் தாதுக்களில் இருந்து தனிமைப்படுத்தி தயாரிக்கும் செயல்முறையில் ஓர் இடைநிலையாக உருவாகிறது. பொதுவாக, தாலியம்(I) சல்பேட்டின் அமிலக் கரைசலை ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் கரையாத தாலியம்(I) குளோரைடு உருவாகும். இந்த திண்மப் பொருளானது சீசியம் குளோரைடு என்ற சேர்மத்தின் படிக அமைப்பின் மையக்கருவில் படிகமாக்குகிறது.[5]
தாலியம்(I) குளோரைடின் குறைந்த கரைதிறன் இரசாயனங்கள் தயாரிக்கும் செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டுடன் உலோக குளோரைடு அணைவுச் சேர்மங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் தொடர்புடைய உலோக அறுபாசுப்பேட்டு வழிப்பெறுதிகள் உருவாகின்றன. இதன் விளைவாக வீழ்படிவாகும் தாலியம்(I) குளோரைடு வினை விளைபொருள் கலவையை வடிகட்டுவதன் மூலம் பிரிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்த வினையானது AgPF6 இன் பயன்பாட்டைப் போலவே உள்ளது. தவிர Tl+ இன் ஆக்சிசனேற்றம் இவ்வினையில் குறைவாக உள்ளது.
அறை வெப்பநிலையில் தாலியம்(I) குளோரைடின் படிக அமைப்பு கனசதுர சீசியம் குளோரைடு வகை படிக அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இது குளிர்விக்கப்படும்போது நேர்ச்சாய்சதுர தாலியம் அயோடைடு படிக வகைக்கு மாறுகிறது. இந்த நிலை மாறுதல் வெப்பநிலை கலந்துள்ள அசுத்தங்களால் பாதிக்கப்படலாம்.[6] KBr அடி மூலக்கூறுகளில் வளர்க்கப்படும் நானோமீட்டர் அளவிலான மெல்லிய தாலியம்(I) குளோரைடு படலங்கள் ஒரு பாறை உப்பு கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றன. அதே சமயம் மைக்கா அல்லது சோடியம் குளோரைடு மீது படியும் படலங்கள் வழக்கமான CsCl வகையைச் சேர்ந்தவையாக உள்ளன.[7]
மிகவும் அரிதான கனிமமான லாஃபோசைட்டு Tl(Cl,Br), தாலியம்(I) குளோரைடின் இயற்கையாகத் தோன்றும் கனிம வடிவமாகும்.[8]
அனைத்து தாலியம் சேர்மங்களைப் போலவே தாலியம்(I) குளோரைடும் மிகவும் நச்சுத்தன்மையுடையதாக காணப்படுகிறது. இருப்பினும் இதன் குறைந்த கரைதிறன் நச்சுத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது.[9]
↑Müürsepp, T.; Haav, A. (1974). "X-ray diffraction study of the systems TlI-CsI, TlI-RbI, and TlI-Tl Cl". Physica Status Solidi A21 (2): K81. doi:10.1002/pssa.2210210251. Bibcode: 1974PSSAR..21...81M.
↑Blackman, M; Khan, I H (1961). "The Polymorphism of Thallium and Other Halides at Low Temperatures". Proceedings of the Physical Society77 (2): 471. doi:10.1088/0370-1328/77/2/331. Bibcode: 1961PPS....77..471B.
↑Schulz, L. G. (1951). "Polymorphism of cesium and thallium halides". Acta Crystallographica4 (6): 487–489. doi:10.1107/S0365110X51001641.