தைட்டானியம் கார்பைடு
தைட்டானியம் கார்பைடு (Titanium carbide) என்பது TiC என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எளிதில் உருகாத மீக்கடினப் பீங்கான் பொருளான இதன் மோ மதிப்பு 9 முதல் 9.5 ஆக உள்ளது. தங்குதன் கார்பைடின் பண்புகளையே இதன் பண்புகளும் ஒத்துள்ளன. தோற்றத்தில் கருப்பு நிறத்தூளாகத் தெரியும் இது முகமையக் கனசதுரக் கட்டமைப்புடன் சோடியம் குளோரைடின் கட்டமைப்புடன் காணப்படுகிறது. தைட்டானியம் கார்பைடைக் கொண்டு பீங்கானுலோகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் இயந்திர எஃகு பாகங்கள் தயாரித்தலில் பயன்படுகின்றன. விண்வெளி ஊர்திகளில் வெப்பப் பாதுகாப்பு அமைப்புகளில் தைட்டானியம் கார்பைடு மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது[1] . காம்ராபேவைட்டு ((Ti,V,Fe)C) என்ற மிக அரிதான கனிமமாக தைட்டானியம் கார்பைடு இயற்கையில் கிடைக்கிறது. தற்கால கிர்கிசுத்தான் நாட்டில் உருசியாவின் சாட்கல் மாவட்டம் அராசுகன் மலையில் 1984 ஆம் ஆண்டில் இது கண்டறியப்பட்டது[2]. உசுபெக்கித்தான் நாட்டைச் சேர்ந்த புவியியல் மற்றும் புவி இயற்பியல் துறையின் இயக்குநர் இப்ராகிம் காம்ராபேவிச்சு காம்ராபேவ் கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. பண்புகள்தைட்டானியம் கார்பைடின் மீள்குணகம் தோராயமாக 400 கிகாபாசுக்கல் ஆகும். மேலும் இதன் நறுக்கக் குணகம் 188 கிகாபாசுக்கல் ஆகும்[3] . தைட்டானியம் கார்பைடை தங்குதன் கார்பைடுடன் சேர்த்து வெப்பத்தடை, ஆக்சிசனேற்றத்தடை போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia