லொயோலா இஞ்ஞாசி
புனித லொயோலா இஞ்ஞாசி (பாஸ்க் மொழி:Iñigo Loiolakoa, எசுப்பானியம்: Ignacio de Loyola) (1491[1] – ஜூலை 31, 1556) என்பவர் பாஸ்க் குடும்பத்தைச் சேர்ந்த எசுப்பானியா நாட்டின் போர்வீரரும், கத்தோலிக்க குருவும், இறையியலாளரும், இயேசு சபையின் நிறுவனரும், அச்சபையின் முதல் தலைவரும் ஆவார்.[2] இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் மற்றும் நிலைமுறைக்கு எதிர்ப்பின்றி கீழ்படிந்தது மட்டும் அல்லாது, தன் சபையினரையும் அவ்வாறே செயல்பட ஊக்குவித்தார்.[1][3] 1521 இல் பாம்பலோனா போரில் இவர் பலத்த காயமடைந்து, ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போது, அங்கே படிக்க கிடைத்த கிறுத்தவப் புனிதர்களின் வரலாற்றால் ஈர்க்கப்பட்டு அசிசியின் பிரான்சிசு போல தன் வாழ்வை கடவுளுக்கு அற்பணிக்க முடிவெடுத்தார். மார்ச் 1522இல் இவர் கன்னி மரியாளையும், குழந்தை இயேசுவையும் ஒரு காட்சியில் கண்டதாகக் கூறுவர். இக்காட்சிக்கும் பின்பு இவர் அருகில் இருந்த மன்ரேசா என்னும் இடத்தில் இருந்த குகையில் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபட்டிருந்தார். இங்கேதான் இவர் தனது ஆன்ம பயிற்சிகள் என்னும் நூலினை முறைப்படுத்தினார் என்பர். செப்டம்பர் 1523இல் லொயோலா திருநாடுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட முடிவெடுத்தார். ஆனால் அங்கிருந்த பிரான்சிஸ்கன் சபையினரால் ஐரோப்பாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இவர் ஜூலை 1556இல் இறந்தார். இவருக்கு அருளாளர் பட்டம், திருத்தந்தை ஐந்தாம் பவுலினால் 1609இலும், புனிதர் பட்டம் திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் 1622இலும் வழங்கப்பட்டது. இவரை ஆன்ம தியானம் மற்றும் ஒடுக்கத்திற்கு பாதுகாவலராக திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் 1922இல் அறிவித்தார். இவரின் விழா நாள் ஜூலை 31 ஆகும்[4] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia