வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரின் தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930-களிலும், 1940-களின் தொடக்க ஆண்டுகளில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன் பெயரைக் கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத் தொடங்கியவர்.[1] எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித் துறையின்2002-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
சில நூல்கள்
அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இது.[2]
கல்யாணி முதலிய சிறுகதைகள் - 1944
நாட்டியக்காரி - 1944
உவமை நயம் (கட்டுரை) - 1945
குஞ்சலாடு (நையாண்டி பாரதி ) - 1946
கோயில்களை மூடுங்கள்! (கோர நாதன்) கட்டுரை - 1946
பாரதிதாசனின் உவமை நயம் - 1946
ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்) - கதை - 1948
அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி) கட்டுரை - 1947
சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்) கட்டுரை -1948
மத்தாப்பு சுந்தரி (கதை) - 1948
நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி) நாடகம் - 1948
ராதை சிரித்தாள் - 1948
கொடு கல்தா (கோரநாதன்) கட்டுரை - 1948
எப்படி உருப்படும்? (கோரநாதன்) கட்டுரை - 1948
விடியுமா? நாடகம் - 1948
ஒய்யாரி (குறுநாவல்) - 1949
அவள் ஒரு எக்ஸ்ட்ரா (குறுநாவல்)- 1949
கேட்பாரில்லை (கோரநாதன்) கட்டுரை - 1949
அறிவின் கேள்வி (கோரநாதன்) - கட்டுரை - 1949
விவாகரத்து தேவைதானா ( கட்டுரை) - 1950
நல்ல மனைவியை அடைவது எப்படி? (கட்டுரை) - 1950
கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா ? (கட்டுரை) - 1950