அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.[2] எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல்[3] ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 இக்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
பிறப்பு
அப்துல் ரகுமான் மதுரையில்வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 9 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[4]
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு [5] விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.
அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 9 ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். [8]
நூல்கள் நாட்டுடமையாக்கம்
அப்துல் ரகுமான் எழுதிய 41 நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு, இவரின் மரபுரிமையாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் என்று 2025 ஏப்ரல் 5 அன்று அறிவிக்கப்பட்டது.[9][10]
↑(1) உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, (2) சென்னை புதுக்கல்லூரி, (3) வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி, (4) திருச்சி ஜமால் முகமது கல்லூரி (5) இசுலாமியா கல்லூரி, வேலூர்