இச்சுற்றுப்பயணம், 2021 ஐ.சி.சி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் இறுதிப்போட்டிக்கும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி பங்கேற்கவுள்ள தேர்வுத் தொடருக்கும் இடையில் வருகிறது.[7] எனவே, இலங்கைக்கு எதிரான போட்டிகளுக்கு இந்திய அணியின் தலைவராக ஷிகர் தவானும், துணைத் தலைவராக புவனேஷ்வர் குமாரும் அறிவிக்கப்பட்டனர். மேலும் ,இந்திய அணியில் பல்வேறு இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் .[8]
பின்னணி
2020-ஆம் ஆண்டு மே மாதம், இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் , இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்துக்கு (பிசிசிஐ) ஒரு மின்னஞ்சல் அனுப்பியது [9].அதில் ,கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக , 2020-ஆம் ஆண்டின் சூன் மாதத்தில் நடைப்பெற வேண்டிய இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டிகளை, அவ்வாண்டின் சூலை மாதம் நடத்த அனுமதி கோரப்பட்டது[10]. மேலும் , இப்போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்தவும் இலங்கை துடுப்பாட்ட வாரியம் திட்டமிட்டது. ஆனால், நோய்த்தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வந்ததால், வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்போட்டிகளை ஆகஸ்ட் மாதம் நடத்த இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பட்டு வாரியம் திட்டமிட்டது[11]. ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்தையும் இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பட்டு வாரியம் கைவிட்டது[12].
இதைத்தொடர்ந்து, இப்போட்டிகளை 2021-ஆம் ஆண்டின் சூலை மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது .இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் அறிவிக்கப்பட்டார் [13].இதைத்தொடர்ந்து , இலங்கைக்குப் பயணம் செய்ய உள்ள வீரர்களின் பட்டியலை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் சூன் 10 , 2021 அன்று அறிவித்தது[14].