வியாழன் (Jupiter) என்பது கதிரவனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோளும்கதிரவ அமைப்பிலேயே மிகப்பெரிய கோளும் ஆகும். இதன் நிறை கதிரவனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே ஆகும். எனினும் அது கதிரவ அமைப்பில் உள்ள மற்ற கோள்களை இணைத்தால் கிடைக்கும் நிறையை விட இரண்டரை மடங்கு அதிகமானதாகும். வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் வளிமப் பெருங்கோள்கள் ஆகும்; மற்ற இரு பெருங்கோள்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டும் பனிப் பெருங்கோள்கள் ஆகும். பழங்காலத்திலேயே வியாழன் கோளைப் பற்றி வானியலாளர்கள் அறிந்து வைத்திருந்தனர். கதிரவ ஒளியை எதிரொளிக்கும் திறமை காரணமாக நிலவு மற்றும் வெள்ளியை அடுத்து வியாழனே இரவு வானில் புலப்படும் மூன்றாவது வெளிச்சமான பொருளாக உள்ளது. இது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக அதிக காந்த புலத்தை கொண்டுள்ளது.
புறக்கோள்களில் ஒன்றான வியாழன் ஒரு வாயுக்கள் திரண்ட கோளம் ஆகும். இது கனமான உலோகங்கள் நிறைந்த பாறை உட்கருவைக் கொண்டிருந்தாலும், மற்ற பெருங்கோள்களைப் போல் இதன் மேற்பரப்பும் திடமின்றி உள்ளது. வியாழனுக்கு 79 அறியப்பட்ட நிலவுகள் உள்ளன, அவற்றுள் பெரிய நிலவான கனிமீடின் விட்டம் புதன் கோளை விடப் பெரியதாகும்.
புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது நொடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. கதிரவ சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சுமார் 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் கதிரவனைச் சுற்றி வருகிறது.புவியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் கதிரவனைச் சுற்றும் வியாழன், புவியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை புவியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. இது புவியீர்ப்பு விசையை விட 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது.
இந்த வளிமம் பெருங்கோளின் நடுவரை விட்டம் சுமார் 88,700 மைல். சற்று சப்பையான துருவ விட்டம் சுமார் 83,000 மைல். வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள், வால் விண்மீன்கள் போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
ஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ள வியாழன், இவ்வளிமங்களின் கடும் அழுத்ததால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளாலான உள்ளகமும் கொண்டது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 67 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவான கானிமீடு புதன் கோளை விடவும் பெரியது.
வியாழன் தானியங்கி விண்கலங்களால் பலமுறை ஆயப்பட்டுள்ளது; குறிப்பாக துவக்க கால பயனியர், வொயஜெர் பறப்புகளின் வழியிலும் பின்னதாக கலிலியோ திட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. மிகவும் அண்மையில் புளூட்டோவிற்கு அனுப்பப்பட்ட நியூ ஹரைசன்ஸ் விண்கலத்தால் 2007 பெப்ரவரியின் பிற்பகுதியில் ஆராயப்பட்டது. இந்தத் தேடுகலம் வியாழனின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி முடுக்கம் பெற்றது. வருங்கால வியாழ அமைப்புகளின் தேடாய்வுகளில் இதன் துணைக்கோள் ஐரோப்பாவிலுள்ள பனிபடர்ந்த நீர்மக் கடல்களை ஆராய்வதும் அடங்கியிருக்கும்.
கட்டமைப்பு
வியாழன் முதன்மையாக வளிமப், நீர்ம்ப்பொருட்களால் ஆனது. நான்கு வளிமக்கோள்களில் இதுவே மிகப்பெரியதாகும்; தவிரவும் சூரியக் குடும்பக் கோள்களிலேயே மிகப்பெரும் கோளாகவும் விளங்குகின்றது. இதன் விட்டம் நிலநடுக்கோட்டில் 142,984 km (88,846 mi) ஆக உள்ளது. 1.326 கி/செமீ3 அடர்வுள்ள வியாழன் வளிமக் கோள்களில் மிகவும் அடர்த்தியான இரண்டாவது கோளாக உள்ளது. இருப்பினும் தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் எவற்றையையும் விட இதன் அடர்வு குறைவாகும்.
வியாழனின் உட்புறத்தை விளக்கும் வெட்டுக்காட்சிப் படிமம். பாறையான உட்கருவையும் நீர்ம ஐதரச மாழை படலத்தையும் கொண்டுள்ளது.
வளிமண்டலம்
வியாழனின் வளிமண்டலம் 5,000 km (3,107 mi) உயரத்திற்கு பரவியுள்ளது; இதுவே சூரிய குடும்பத்தில் கோளத்திற்கான மிகப்பெரும் வளிமண்டலம் ஆகும்.[11] வியாழனுக்கு தரைப்பரப்பு என்பது இல்லாமையால் வளிமண்டல அழுத்தம் 1 MPa (10 bar) இருக்குமிடம் வளிமண்டலத்தின் துவக்கமாகக் கொள்ளப்படுகின்றது. இது புவியில் தரைமட்ட அழுத்தத்தைப் போல பத்து மடங்கு ஆகும்.[11]
மேகப் படலங்கள்
பெப்ரவரி 25, 1979இல் வொயேஜர் 1 மூலம் பெறப்பட்ட வியாழனின் பெருஞ்சிவப்புப் பிரதேசம் மற்றும் அதனை அடுத்துள்ளப் பகுதிகளின் காட்சி. படமெடுத்த சமயத்தில் வொயேஜர் 1 வியாழனிலிருந்து 9.2 மில்லியன் கி.மீ. (5.7 மில்லியன் மைல்) தொலைவில் இருந்தது. பெருஞ்சிவப்புப் பிரதேசத்திற்கு நேரடிக் கீழாக உள்ள வெள்ளை வண்ண நீள்வட்ட புயல் ஏறத்தாழ புவியின் விட்டத்தை ஒத்த அளவிலானது.
வியாழனைச் சுற்றிலும் எப்போதும் அம்மோனியா படிகங்களும், அம்மோனிய ஐதரோசல்பைடும் அடங்கிய மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மேகங்கள் வெப்பநிலை மாறு மண்டல எல்லையில் அமைந்துள்ளன; பல நிலநேர்க்கோடுகளில் பட்டைகளாக அமைந்துள்ளன. இவை வெளிர்வண்ண மண்டலங்களாகவும் கருவண்ண பட்டைகளாகவும் வகைப் பிரிக்கப்பட்டுள்ளன. முரண்படும் சுற்றுகை உள்ள இவற்றின் இடைவினைகளால் புயல்களும் கொந்தளிப்பு ஓட்டங்களும் ஏற்படுகின்றன. மண்டல வளித்தாரைகளில் வளிவேகங்கள் 100 மீ/சவி (360 கி.மீ./ம) ஆக உள்ளன.[12] இந்த மண்டலங்களின் அகலம், வண்ணம், தீவிரம் ஆண்டுக்காண்டு மாறுபடுவதாக கவனிக்கப்பட்டுள்ளது; ஆனால் இவை ஒரே இடத்தில் அமைந்திருப்பதால் வானியலாளர்களால் இவற்றை அடையாளப்படுத்துமுகமாக பெயர்கள் வழங்க இயன்றுள்ளது.[13]
இந்த அசைவூட்டப் படத்தில் வியாழனின் எதிரெதிர் சுழற்சி மேகப் படலங்களைக் காணலாம். வேறு அளவுகளில் இந்த அசைவூட்டத்தைக் காண: 720 pixels, 1799 pixels.
மேகப்படலம் 50 km (31 mi) ஆழம் மட்டுமே உள்ளது; இவை குறைந்தது இரண்டு அடுக்குகளிலாவது உள்ளன: அடர்த்தியானக் கீழ்ப்பகுதியும் அடர்த்தி குறைவான, தெளிந்த மேற்பகுதியும். அம்மோனியாப் படலங்களுக்கு கீழே மெல்லிய நீர் மேகப் படலம் இருக்கலாம்; வியாழனில் அவதானிக்கப்பட்டுள்ள மின்னல் கீற்றுக்கள் இதற்கு வாய்ப்புள்ளதற்கு சான்றாக அமைகின்றன. இது நீரின் முனைவுத்தன்மையால் ஏற்படுகின்றது; மின்மங்கள் பிரிக்கப்பட்டு மின்னல்கள் ஏற்பட ஏதுவாகின்றது.[14] வியாழனினில் காணப்படும் மின்னல்கள் புவியில் காணப்படுபவற்றை விட ஆயிரமடங்கு வலுவானவை.[15] உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பத்தினால் நீர் மேகங்களில் இடிமின்னற்புயல்கள் ஏற்படலாம்.[16]
வியாழனின் மேகங்களில் காணப்படும் இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு வண்ணங்கள் அவற்றிலுள்ள சேர்மங்களில் சூரியனின் புறஊதாக்கதிர் பட்டு ஏற்படுகின்றன. சேர்மங்களின் அளவுகள் சரியாக மதிப்பிடப்படவிட்டாலும் இவற்றில் பாசுபரசு, கந்தகம், மற்றும் நீரகக்கரிமங்கள் இருக்க வாய்ப்புள்ளது.[14][17] இந்த வண்ணமிகு சேர்மங்கள் கீழுள்ள மேக அடுக்கில் கலக்கின்றன. அம்மோனியா படிகமாகும் போது கீழுள்ள மேகங்கள் மறைக்கப்படுவதினால் மண்டலங்கள் உருவாகின்றன.[18]
வியாழனின் குறைந்த அச்சுச் சாய்வினால் இதன் முனையங்களில் எப்போதுமே குறைந்த சூரிய ஒளிதான் கிடைக்கின்றது. கோளின் உட்புற மேற்காவுகையால் ஆற்றல் முனையப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மேகப்படலங்களுக்கிடையேயான வெப்பத்தை சமப்படுத்தப்படுகின்றது.[13]
கோள் வளையங்கள்
வியாழனின் வளையங்கள்
வியாழன் கோளுக்கு மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்படும் மெல்லிய வளையங்களைக் கொண்டுள்ளது: உட்புறத்தில் துருத்துகின்ற பொருட்களடங்கிய வளையம் பரிதிவட்டம் எனப்படுகின்றது, சற்றே ஒளிர்மை மிக்க முதன்மை வளையம், வெளிப்புற சிலந்திவலை இழையடுக்கு வளையம்.[19] இந்த வளையங்கள் சனிக்கோளின் பனியாலான வளையங்களைப் போலன்றி தூசியாலானவை.[14] முதன்மை வளையம் அட்ராசுட்டீயா மற்றும் மெட்டிசு நிலவுகளிலிருந்து வெளியேறிய பொருட்களால் ஆகியிருக்கலாம். நிலவிற்கு பொதுவாக உள்ளிழுக்கப்ப வேண்டிய பொருட்கள் வியாழனின் வலிய ஈர்ப்பு சக்தியால் வெளியே இழுக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பொருட்கள் வியாழனைச் சுற்றி வருகையில் கூடிய தாக்கங்களால் புதிய பொருட்கள் சேருகின்றன.[20] இதேபோல தேபெ, அமால்தியா நிலவுகளின் பொருட்களால் இரண்டு குறிப்பிடத்தக்க அங்கங்களை உடைய தூசான சிலந்தி வலையடுக்கு வெளிப்புற வளையம் உருவாகியிருக்கக் கூடும்.[20]
அமால்தியா நிலவைச் சுற்றியும் அதன் மீது தாக்கியப் பொருட்களாலான பாறையாலான வளையமொன்று கண்டறியப்பட்டுள்ளது.[21]
↑Ingersoll, A. P.; Dowling, T. E.; Gierasch, P. J.; Orton, G. S.; Read, P. L.; Sanchez-Lavega, A.; Showman, A. P.; Simon-Miller, A. A.; Vasavada, A. R. "Dynamics of Jupiter's Atmosphere"(PDF). Lunar & Planetary Institute. Retrieved February 1, 2007.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
↑Strycker, P. D.; Chanover, N.; Sussman, M.; Simon-Miller, A.(2006). "A Spectroscopic Search for Jupiter's Chromophores". DPS meeting #38, #11.15, American Astronomical Society.
↑Gierasch, Peter J.; Nicholson, Philip D. (2004). "Jupiter". World Book @ NASA. Archived from the original on ஜனவரி 5, 2005. Retrieved August 10, 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: multiple names: authors list (link)
↑Showalter, M.A.; Burns, J.A.; Cuzzi, J. N.; Pollack, J. B. (1987). "Jupiter's ring system: New results on structure and particle properties". Icarus69 (3): 458–98. doi:10.1016/0019-1035(87)90018-2. Bibcode: 1987Icar...69..458S.
Hans Lohninger; et al. (November 2, 2005). "Jupiter, As Seen By Voyager 1". A Trip into Space. Virtual Institute of Applied Science. Retrieved March 9, 2007. {{cite web}}: Explicit use of et al. in: |author= (help)
Dunn, Tony (2006). "The Jovian System". Gravity Simulator. Retrieved March 9, 2007.—A simulation of the 62 Jovian moons.
Seronik, G.; Ashford, A. R. "Chasing the Moons of Jupiter". Sky & Telescope. Archived from the original on ஜூலை 13, 2007. Retrieved March 9, 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)CS1 maint: multiple names: authors list (link)