சத்யராஜ் சுப்பையன் (Sathyaraj, பிறப்பு: 3 அக்டோபர் 1954) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.
வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.[1]
பெரியார் திரைப்படம்
சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காகப் பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழுணர்வு
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். இதில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.