வரலாற்று ரீதியாக, தஞ்சோங் கிலிங் எனும் பெயர், இந்தியா, கலிங்கா கண்டத்தில் இருந்து குடியேறிய மக்களின் பெயரில் இருந்து பெற்று இருக்கலாம் என உள்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.[2]
தஞ்சோங் கிலிங் நகரைத் தவிர பெக்கான் கெலிங் (Pekan Keling), கம்போங் கெலிங் (Kampong Keling) போன்ற பல இடங்களிலும்; கலிங்கா கண்டத்தில் இருந்து மக்கள் குடியேறி உள்ளார்கள்.[3]
மலாக்கா சுல்தானகத்தின் காலத்தில், தஞ்சோங் கிலிங் பகுதிகளில், தமிழ் வணிகர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் என்று சொல்லப் படுகிறது.
காசுடனேடா வரலாற்று ஆசிரியர்
காசுடனேடா (Castanheda) எனும் போர்த்துகீசிய வரலாற்று ஆசிரியர் 1528 முதல் 1538 வரை மலாக்காவில் தங்கி இருந்தார். மலாக்காவைப் பற்றி பற்றி விரிவாக எழுதி உள்ளார். அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்களைச் சிட்டி என்று பதிவு செய்து உள்ளார்.[4]
சிட்டி அல்லது செட்டி (Chitty) எனப்படுவோர் முற்காலத்தில் இருந்தே மலாக்காவில் வாழும் தமிழர் ஆவர். மலாக்கா சுல்தானிய காலத்தில், சிட்டிகள் தமிழ்நாட்டில் இருந்து மலாக்காவிற்கு வந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.[5]
மலாக்காவில் குடியேறியபின், மலாய் மக்களையும் சீனர்களையும், பிற இந்தோனேசிய, மலேசியத் தீவுகளில் வாழ்ந்த மக்களையும் திருமணம் செய்து கொண்டனர். மலாக்கா சுல்தானக காலத்திற்குப் பிறகு, மலாக்கா சிட்டிகள் தங்கள் தாயகத்துடனான தொடர்புகளை இழந்தனர்.[6]
தஞ்சோங் கிலிங் பகுதிகளில் வாழ்ந்த மலாக்கா சிட்டிகள், தற்சமயம் மலாக்கா நகரின் கஜா பேராங் சாலை மருங்கிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த வம்சாவளியைச் சேர்ந்த பலர், சிங்கப்பூரிலும், மலாக்காவின் பிற பகுதிகளிலும் வேலை செய்கின்றனர்.[7]