புரோமோபென்டாகார்பனைல் இரேனியம்(I)(Bromopentacarbonylrhenium(I)) என்பது Re(CO)5Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம இரேனியம் சேர்மமாகும். பொதுவாக இரேனியத்தின் அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
டையிரேனியம் டெக்காகார்பனைலை புரோமினுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து எளிய முறையில் புரோமோபென்டா கார்பனைல் இரேனியம்(I) சேர்மத்தைத் தயாரிக்கிறார்கள் :[1]
Re2(CO)10 + Br2 → 2 ReBr(CO)5.
இரேனியம்(III) புரோமைடை ஒடுக்க கார்பனைலேற்றம் செய்து முதலில் இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது:[2]
ReBr3 + 2 Cu + 5 CO → BrRe(CO)5 + 2 CuBr
இவ்வினையில் தாமிர(I) புரோமைடு உடன் விளைபொருளாக உருவாகிறது.
வினைகள்
பிற இரேனியம் அணைவுச்சேர்மங்கள் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக புரோமோபென்டா கார்பனைல் இரேனியம்(I) பயன்படுகிறது. துத்தநாகம் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகிய சேர்மங்களுடன் சேர்ந்து வினைபுரிந்து பென்டாகார்பனைல் ஐதரிடோ இரேனியம் (HRe(CO)5) அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது[3]
Re(CO)5Br + Zn + HO2CCH3 → ReH(CO)5 + ZnBrO2CCH3.
டைகிளைம் என்ற கரைப்பானில் கரைக்கப்பட்ட டெட்ரா எத்திலமோனியம்புரோமைடுடனும் இது வினைபுரிந்து [NEt4]2[ReBr3(CO)3)] என்ற அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது. இந்த அணைவுச் சேர்மம் இரேனியம் முக்கார்பனைல் குழுவைக் கொண்ட சேர்மங்களைத் தயாரிக்க உதவும் முக்கியமான முன்னோடிச் சேர்மமாகும்.[4]
தண்ணீருடன் புரோமோபென்டா கார்பனைல் இரேனியம்(I) சேர்த்து சூடுபடுத்துவதால் முந்நீர் அணைவுச் சேர்மங்கள் உருவாகின்றன.
ReBr(CO)5 + 3 H2O → [Re(H2O)3(CO)3]Br + 2 CO
இப்பாதையில் டெட்ரா எத்திலமோனியம்புரோமைடு உடன் விளைபொருள் உருவாதல் தவிர்க்கப்படுகிறது. வினைகலவையில் இருந்து இவ்வுடன் விளை பொருளை பிரித்து எடுப்பது பெரும்பாலும் கடினமான செயலாகும்.[5]
↑W. Hieber; Hans Schulten (1939). "XXX. Mitteilung über Metallcarbonyle. Über Rhenium-Kohlenoxyd-Verbindungen". Zeitschrift für anorganische und allgemeine Chemie243 (2): 164–173. doi:10.1002/zaac.19392430205.
↑R. Alberto; A Egli; U. Abram; K. Hegetschweiler; V. Gramlich; P. A. Schubiger (1994). "Synthesis and Reactivity of [NEt4]2[ReBr3(CO)3]. Formation and Structural Characterization of the Clusters [NEt4][Re3(µ3-OH)(µ-OH)3(CO)9] and [NEt4][Re2(µ-OH)3(CO)6] by alkaline titration". J. Chem. Soc., Dalton Trans. (19): 2815–2820. doi:10.1039/DT9940002815.
↑N. Lazarova; S. James; J. Babich; J. Zubieta (2004). "A convenient synthesis, chemical characterization and reactivity of [Re(CO)3(H2O)3]Br: the crystal and molecular structure of [Re(CO)3(CH3CN)2Br]". Inorganic Chemistry Communications7 (9): 1023–1026. doi:10.1016/j.inoche.2004.07.006.