மல்லிகார்ச்சுன் கர்கெ
மபன்னா மல்லிகார்ச்சுன் கர்கெ (Mapanna Mallikarjun Kharge, பிறப்பு:21 சூலை 1942) இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக உள்ள இந்திய அரசியல்வாதி ஆவார். மேலும் மாநிலங்களவையில் இந்திய தேசியக் காங்கிரசின் களத்தலைவராக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.[2]. முன்னதாக தொடர்வண்டித்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆண்டு வரை கருநாடகத்தின் குல்பர்காவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கருநாடகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கர்கெ கர்நாடக சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். 1972 முதல் 2008 வரை நடந்த 9 சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றவர். 2008ஆம் ஆண்டில் கர்நாடக மாநில இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவராக இருந்துள்ளார்.[3] தொடர்ந்து குல்பர்காவிலிருந்து பத்து முறை சட்டப்பேரவைக்கான தேர்தல்களிலும் (1972, 1979, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008) மக்களவைக்கான (2009,2014) பொதுத் தேர்தலிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.[3][4] முன்வாழ்க்கையும் பின்னணியும்கர்கே தற்போதைய கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம் வரவட்டி சிற்றூரில் 1942 இல் பிறந்தார். இரசாக்கர்கள் அல்லது ஐதராபாத் நிசாமின் தனியார் போராளிகளால் வீட்டையும், தாயையும், சகோதரியையும் இழந்து ஏழுவயதில் உயிர் தப்பினார்.[5][6] பின்னர்தந்தையுடன் குல்பர்காவுக்கு இடம்பெயர்ந்தார். இவரது தந்தை அம்பேத்கரின் அரசியில் வழியைப் பின்பற்றுபவராக இருந்தார். 1956 இல் அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவியபோது இவரது குடும்பமும் பௌத்ததை தழுவியது. குல்பர்காவிலுள்ள நூதன் வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், குல்பர்கா அரசு கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் சேத் சங்கர்லால் லகொட்டி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்.[7] பின்னர் வழக்கறிஞர் சிவ்ராஜ் பாட்டீலிடம் (பின்னாளைய உச்ச நீதிம்ன்ற நீதிபதி) உதவி வழக்கறிஞராக இணைந்தார். குல்பர்கா நீதிமன்றத்தில் தோழிலாளர் நலன் சார்ந்த வழக்குளில் வாதாடினார்.[8] அரசியல்வாழ்வுஅரசியல் துவக்க வாழ்க்கைகார்கே குல்பர்காவில் உள்ள அரசு கல்லூரியின் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மாணவர் சங்கத் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1969 இல், அவர் எம்எஸ்கே ஆலைத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரானார். இவர் சம்யுக்தா மஜ்தூர் தொழிலாளர் சங்கத்தின் செல்வாக்குமிக்க தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்தார், மேலும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் பல போராட்டங்களை வழிநடத்தினார்.[9] கார்கே 1969 இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். பின்னர் குல்பர்கா நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.[10] கர்நாடக அரசியல் களத்தில் எழுச்சி1972ல் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு குர்மித்கல் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 1973 ஆம் ஆண்டில், இவர் சுங்க வரி ஒழிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் அறிக்கையின் அடிப்படையில் அப்போதைய தேவராஜ் அர்ஸ் அரசு பல இடங்களில் சுங்க வரியை ரத்து செய்தது.[11] 1974 ஆம் ஆண்டில், இவர் அரசுக்கு சொந்தமான தோல் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் தோல் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான செருப்புத் தைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த பாடுபட்டார். இந்த நேரத்தில் அவர்களின் நலனுக்காக மாநிலம் முழுவதும் பணிக் கொட்டகைகள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டன. கார்கேவுக்கு 1976 ஆம் ஆண்டு தேவராஜா அரசு தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் தொடக்கக் கல்விக்கான மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார், அந்த நேரத்தில், 16,000 க்கும் மேற்பட்ட பட்டியல்/பழங்குடியினர் ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் அவர்களை நேரடியாக பணியில் சேர்த்து நிரப்பப்பட்டன. முதல் முறையாக பட்டியல்/பழங்குடியினர் நிர்வாகங்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.[12] 1978 ஆம் ஆண்டில், குர்மித்கல் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் தேவராஜ் அர்ஸ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1980ல் குண்டுராவ் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சரானார். இந்த நேரத்தில், பயனுள்ள நில சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக பல இலட்சக் கணக்கான நிலம் இல்லாத உழவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உரிமை வழங்கப்பட்டது. உழவர்களுக்கு நில உரிமைகளை விரைவாக மாற்றுவதற்காக 400க்கும் மேற்பட்ட நில தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன.[13] 1983ல், குர்மித்கால் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக கர்நாடக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டில், அவர் குர்மித்கலில் இருந்து நான்காவது முறையாக கர்நாடக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டு, குர்மித்கல் தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக கர்நாடக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டில், இவர் பங்காரப்பாவின் அமைச்சரவையில் வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் முன்பு வகித்த துறைகளான இவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வந்தார். இடைக்காலத்தில் நிறுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தப் பணியை மீண்டும் தொடங்குவதன் வழியாக, நிலமற்ற உழவர்களின் பெயரில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பதிவு செய்யப்பட்டன.[14] 1992 மற்றும் 1994 க்கு இடையில், வீரப்ப மொய்லி அமைச்சரவையில் கூட்டுறவு, நடுத்தர மற்றும் பெருந்த் தொழில்துறை அமைச்சராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில், குர்மித்கலில் இருந்து கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆறாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். 1999 ஆம் ஆண்டில், இவர் ஏழாவது முறையாக கர்நாடக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கர்நாடக முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தார். ஆனால் முலமைச்சர் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எஸ். எம்.கிருஷ்ணா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அச்சமயத்தில்தான் காவிரி கலவரம், வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்படுதல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. 2004 ஆம் ஆண்டில், இவர் தொடர்ந்து எட்டாவது முறையாக கர்நாடக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் கர்நாடக முதல்வர் பதவிக்கு ஒரு போட்டியாளராக கருதப்பட்டார். ஆனால் தரம்சிங் தலைமையிலான கூட்டணி அரசில் போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சரானார். 2005இல் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். விரைவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், பாஜக மற்றும் ஜனதாதளம்(எஸ்) உடன் ஒப்பிடும் போது, காங்கிரஸ் அதிக இடங்களை வென்றது.[15] 2008 ஆம் ஆண்டில், சிதாப்பூரில் இருந்து சட்டமன்றத்திற்கு தொடர்ந்து ஒன்பதாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 தேர்தலுடன் ஒப்பிடும் போது காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட்ட போதிலும், பெரும்பாலான மூத்த தலைவர்கள் தோல்வியடைந்ததால் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. 2008ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். தேசிய அரசியல்2009 இல், கார்கே குல்பர்கா நாடாளுமன்றத் தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, தொடர்ந்து பத்தாவது தேர்தலில் வெற்றி பெற்றார்.[16] மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய ஒன்றிய அமைச்சரவையில் தொடருந்து துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றில் அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2014 பொதுத் தேர்தலில், கார்கே குல்பர்கா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், 74,737 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜாக சார்பில் போட்டியிட்ட ரேவுநாயக் பெலமாகியை தோற்கடித்தார்.[17] சூன் மாதம், மக்களவையில் காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.[18] 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். பின்னர் மாநிலக்களவை உறுப்பினராக பதவியேற்றார். 12 சூன் 2020 அன்று கார்கே தனது 78வது வயதில், கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு (போட்டியின்றி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[19] 12 பிப்ரவரி 2021 அன்று, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவராக கார்கே நியமிக்கப்பட்டார்.[20] 2014 இல் அசாம், 2021 இல் பஞ்சாப், 2022 இல் ராஜஸ்தான் என கடந்த காலங்களில் பல மாநிலங்களுக்கு இதேகாவால் பார்வையாளராக கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்.[21] இந்த மூன்று மாநிலங்களில் உள்ள உட்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்க்க இவரால் இயலவில்லை என்றும் அதனால் அஸ்சாம் மற்றும் பஞ்சாபில் இழப்புகள் ஏற்பட்டதாகவும், ராஜஸ்தானில் பொதுமக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியதற்காகவும் இவர் விமர்சிக்கப்பட்டார்.[21] 1, அக்டோபர், 2022 அன்று, இவர் இதேகா கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து சசி தரூர் போட்டியிய்யடார். கார்கே 7897 வாக்குகள் பெற்று வெற்றி கட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்.[22] இதனையடுத்து கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத முதல் இதேகா தலைவராக பொறுப்பேற்றார். தனிப்பட்ட வாழ்க்கைகார்கே 13 மே 1968 இல் இராதாபாயை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகள்களும், மூன்று மகன்களும் உள்ளனர்.[7][23] கார்கே ஆங்கிலம், இந்தி, உருது, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடிய ஒரு பல்மொழியாளர் ஆவார்.[10] இவரது மகன் பிரியங்க் கார்கே சித்தப்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[5] இவர் இந்தியாவின் குல்பர்காவில் புத்த விகாரைக் கட்டிய சித்தார்த் விகாரை அறக்கட்டளையின் நிறுவனர்-தலைவர் ஆவார்.[24] பெங்களூரில் உள்ள கச்சேரி மற்றும் நாடக அரங்கான சவுடியா நினைவு மண்டபத்தின் புரவலராகவும் உள்ளார். இவர் அந்த மையத்தின் கடன்களைச் சமாளிக்க உதவினார் மேலும் மையத்தை புதுப்பிப்பதற்கான திட்டங்களுக்கு உதவினார்.[25] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia