முரசொலி செல்வம்
முரசொலி செல்வம் என்று பரவலாக அறியப்படும் சண்முகசுந்தரம் பன்னீர்செல்வம் (24 ஏப்ரல் 1940 - 10 அக்டோபர் 2024), தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் இதழாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் . முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக , திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நாளேடான முரசொலியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார் . அவரது தாய்வழியில் கருணாநிதி குடும்பத்துடன் தொடர்புடையவர் ஆவார்.[1] தொடக்க வாழ்க்கைஇன்றைய தமிழ்நாட்டின் திருவாரூர் நகரில் 24 ஏப்ரல் 1940 அன்று பிறந்தார் செல்வம்.[2] அவரது தாயார் சண்முக சுந்தரதம்மாளின் தம்பியான "கலைஞர்" மு. கருணாநிதி ( கருணாநிதி குடும்பம் மற்றும் திமுக-வின் பின்னாள் தலைவர்) ஐந்து முறை தமிழ்நாட்டு முதலமைச்சராக (1969- 2011 காலகட்டத்தில்) பணியாற்றியவர்.[3][1] அவர்தான் செல்வத்துக்கு முதலில் பன்னீர்செல்வம் என்று பெயர்சூட்டினார் (முன்னதாக 1 மார்ச் அன்று வானூர்தி விபத்தில் உயிரிழந்த நீதிக்கட்சி தலைவர் அ. தா. பன்னீர்செல்வம் நினைவாக).[4] செல்வம் பின்னர் கருணாநிதியின் மகள் செல்வியை மணந்தார்.[5] செல்வத்தின் அண்ணன் முரசொலி மாறன், பின்னாளில் (1989-2002) வி. பி. சிங் , அ.தொ.தேவ கெளடா , ஐ.கே.குஜரால் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய நான்கு இந்தியத் தலைமை அமைச்சர்களின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். செல்வம், தன் இளமையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (திமுக) தொடர்புகொண்டிருந்தார். 1965-67 இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் போது மாணவர் தலைவராக உருப்பெற்றார்.[2] முரசொலியில் பணிபொறுப்பேற்றல்மாறனுடன் இணைந்து முரசொலியில் தன் ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார் செல்வம். 1989 இல் மாறன், வி. பி. சிங்-கின் கீழ் அமைச்சராகப் பதவியேற்ற பின், செல்வம் முரசொலி தலைமை ஆசிரியர் ஆனார்.[4] 22 மே 1991 அன்று (முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மறுநாளே) தமிழ்நாட்டின் தலைநகர் மதராசின் (தற்போது சென்னை) கோடம்பாக்கம் பகுதியிலுள்ள முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டுத் தீவைக்கப்பட்டது. அதற்குச் சொந்தமான வண்டிகள், ஆவணங்கள், அச்சுத் தாள்கள், அச்சகம் அனைத்தும் எரிந்துபோயின. எனினும் மறுநாள் 'Murasoli Will Take It' (முரசொலி இதைத் தாங்கிக்கொள்ளும்) என்ற தலைப்புடன் நாளிதழ் வெளியானது. [4] நாளடைவில் முரசொலி செல்வம் என்று அழைக்கப்பட்ட செல்வம், திமுகவின் செல்வாக்கை உயர்த்துவதில் பெரும் பங்காற்றினார்.[6] 1991-92 சிறப்புரிமை மீறல் சர்ச்சை9 செப்டம்பர் 1991 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அப்போதைய ஒரே திமுக உறுப்பினராக இருந்த பரிதி இளம்வழுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடர்பாக உரை நிகழ்த்தினார் . அவரது உரையின் ஒரு பகுதியை அன்றைய பேரவைத் தலைவர் சேடபட்டி இரா.முத்தையா அன்று நண்பகலில் அவைக் குறிப்புகளிலிருந்து நீக்கினார் . இந்த நீக்கம் முரசொலியின் சென்னை பதிப்பில் எதிரொலித்தாலும் , வெளியூர்ப் பதிப்புகளில் (பிற்பகல் 2 மணிக்குள் அச்சிடப்பட்டதால்) நீக்கப்பட்ட பகுதி இருந்தது.[4] மேலும், இக் காலகட்டத்தில் செல்வம் எழுதிய ஒரு கட்டுரை, அன்றைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா-வின் சில செயல்களை (குறிப்பாக அவர் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் தங்கியிருந்தபோது நடந்த நிகழ்வுகளின் வரிசையை எடுத்துக்காட்டி) விமர்சித்தது. இதனால் செல்வத்துக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு வலுத்தது. இறுதியில், அவருக்கு எதிராக ஜெயலலிதாவால் நேரடி சிறப்புரிமைப் முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டது. [7][8] பேரவையின் சிறப்புரிமைக் குழு, உசாவலுக்குப் பின், செல்வத்திடம் விளக்கம் கேட்டு ஆணை அனுப்பியது. அவர் விளக்கம் அளித்த போதிலும், குழுவின் முன் நேர்வரும்படி ஆணையிடப்பட்டது. அவர், அக் குழுவின் முன் நேர்வந்தாலும் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். இதனால் 11 மே 1992 அன்று கைது செய்யப்பட்டு முத்தையா முன்னிலையில் நிறுத்தப்பட்டார். பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் அவர் நேர்வந்து அதன் கண்டனத்தைப் பெறவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 21 அன்று பேரவைக்கு வரும்படி அவருக்கு ஆணை அனுப்பப்பட்டது. அந்த நாளில், எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கறுப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்தார் செல்வம். அங்கு நிறுவப்பட்ட கூண்டில் அவர் நிறுத்தப்பட்டார். இதனை எதிர்த்த இபொக, இபொக (மா), மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் . இதைத் தொடர்ந்து, கண்டனத் தீர்மானம் படிக்கப்பட்டபின் செல்வம் அனுப்பிவிடப்பட்டார். இந்த நிகழ்வு, சட்டப்பேரவையில் நிறுத்தப்பட்டுக் கண்டிக்கப்பட்ட முதல் நாளிதழ் ஆசிரியர் என்ற சிறப்பை செல்வத்துக்குப் பெற்றுத்தந்தது.[4] பிற்காலம்நவம்பர் 2003-இல், ஜெயலலிதாவின் சட்டமன்ற நடவடிக்கைகளை விமர்சித்து எழுதியமைக்காக செல்வம் உள்ளிட்ட ஆறு ஊடகர்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு, 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்தது.[9] புகழ்முரசொலி சில நினைவுகள் என்ற தன் நினைவுக் குறிப்பில் அவர், அந் நாளிதழுடனான தன் நேரடி நினைவுகளையும், அரசியல் தடைகளைக் கடப்பதில் அதன் பெரும் பங்கையும் விளக்கியுள்ளார்.[10] தி.மு.க., தலைமைக்கு நெருக்கமாக இருந்தும், அரசியல் பதவிகளை நாடாததவர், அமைதியான பண்புக்குப் பெயர்பெற்றவர் என அவருக்கு அறிமுகமானோர் தெரிவித்தனர்.[4] "சிலந்தி " என்ற புனைப்பெயரில் முரசொலியில் தனது பணியைத் தொடர்ந்தார் செல்வம். 8 ஆகஸ்ட் 2024 அன்று முரசொலி-யில் வெளியான அவரது இறுதி கட்டுரை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி-யின் மத அரசியலை விமர்சித்தது.[8] திரைப்படப் பணிதயாரிப்பாளராக [8]
மறைவும் பின்-நிகழ்வுகளும்தன் இறுதிக்காலத்தில் கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் வாழ்ந்த செல்வம், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவந்தார். 9 அக்டோபர் 2024 அன்று முரசொலியின் முதல் பக்கப் பத்தியை தொகுத்துக்கொண்டிருந்தார் (அதைக்குறித்து உரையாடவும் அதற்கான கருத்தோவியத்தை இறுதிசெய்யவும் செல்வம் அழைத்ததாக ஒரு உடன் ஊழியர் பின்னர் தெரிவித்தார்).[11] மறுநாள் (அக்டோபர் 10), செல்வம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறந்தார். அப்போது அவருக்கு 84 அகவை நிரம்பியிருந்தது.[12][13][14] திமுக தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் இரங்கல் உரையில் “நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்” என்றார். திமுகவின் வளர்ச்சிக்கான செல்வத்தின் பங்களிப்பை மதிப்பளிக்கும் வகையில் கட்சியின் கொடி 3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அக்கட்சி அறிவித்தது. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னோடிகள், மக்கள் சார்பாளர்கள், மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட திரைக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்தனர். இ.தே. காங்கிரசு (தமிழ்நாடு பிரிவு) , மதிமுக , விசிக, இபொக, இபொக(மா), மநீம உள்ளிட்ட கட்சிகள், மற்றும் திராவிடர் கழகம் (திக), திராவிடர் விடுதலைக் கழகம் (திவிக.) உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.[15][16][17][18][19] செல்வத்தின் இறுதி நிகழ்வு அக்டோபர் 11 அன்று சென்னை மாநகரின் பெசன்ட் நகர் பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெற்றது.[20][21][22] அவரது உருவப்படம், திமுக தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 21 அன்று திறக்கப்பட்டது. அவ் விழாவில் பேசிய ஸ்டாலின், முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் திராவிட இயக்கப் படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.[23] முரசொலி அலுவலகத்தில் செல்வத்தின் மார்பளவுச் சிலையை 24 ஏப்ரல் 2025 அன்று ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் த. ரா. பாலு, திக தலைவர் கி. வீரமணி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனர் அமிர்தம் (கருணாநிதியின் மற்றொரு சகோதரியான பெரியநாயகி அம்மாளின் மகன்) ஆகியோரும் பங்கேற்றனர்.[24][25] செல்வம் இயற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக சிலந்தி கட்டுரைகள் என்ற நூலை துரைமுருகன் வெளியிட, அதன் முதல் படியை வீரமணி பெற்றுக்கொண்டார்.[26] உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia