ஹரிவன்சராய் பச்சன்
அரிவன்சராய் சிறீவத்சவா (Harivansh Rai Srivastava) பரவலாக ஹரிவன்சராய் பச்சன் (27 நவம்பர் 1907 – 18 சனவரி 2003) 20ஆம் நுற்றாண்டின் ஆரம்ப கால நவீன இந்தி இலக்கிய கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். அவதி மொழி பேசும் இந்து குடும்பத்தில் சிறீவத்சவா என்ற கயஸ்தா இனத்தில் பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தில் அலகாபாத் நகரில் பிறந்தார். இவரின் புகழ்பெற்ற படைப்பாக துவக்க காலத்தில் இவர் எழுதிய மதுசாலா (मधुशाला) போற்றப்படுகிறது[1]. இந்தித் திரையுலகைச் சேர்ந்த அமிதாப் பச்சன் இவரின் மகனாவார். சமூக செயற்பாட்டாளராக விளங்கிய தேஜி பச்சன் இவரது மனைவியாவார். சமகால இந்தி நடிகர் அபிசேக் பச்சனின் தாத்தனுமாவார். 1976 இல் இலக்கிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கியது.[2]
வாழ்க்கை வரலாறுபிரதாப் நாராயணன் மற்றும் சரஸ்வதி தேவி இணையாருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரைச் செல்லமாக பச்சன், அதாவது குழந்தை, என்றே அழைத்து வந்தனர். பிரித்தானியப் பேரரசின் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தில் (தற்கால உத்தரப் பிரதேசம், இந்தியா) பிரதாப்புகர் மாவட்டத்திலுள்ள. பாபுபட்டி என்ற சிற்றூரில் வாழ்ந்து வந்தனர். இவரது துவக்கக் கல்வி அண்மித்திருந்த நகராட்சி பள்ளியிலும் பின்னர் குடும்ப மரபுப்படி காயஸ்த பாடசாலையில் உருதும் கற்றார். பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்றார். கல்லூரியின் படித்தபோது மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டார். 1941 முதல் 1952 வரை அலகாபாத் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் ஆசிரியப் பணியாற்றி வந்தார். தொடர்ந்து கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் சென்று அங்குள்ள செயின்ட் காத்தரீன் கல்லூரியில் டபிள்யூ. பி. யீட்சு குறித்த முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.[1] அப்போதுதான் தனது கடைசி பெயரை பச்சன் என மாற்றிக் கொண்டார். வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்ற பச்சன் இந்தியா திரும்பி ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். ஆங்கிலத்தில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். சில காலம் அனைத்திந்திய வானொலியின் அலகாபாத் நிலையத்தில் பணியாற்றியுள்ளார்.[1] 1926இல், தமது 19வது அகவையில் சியாமா என்பவரை திருமணம் புரிந்தார். ஆனால் பத்தாண்டுகளில் (1936) காச நோயால் சியாமா மரணமடைந்தார். 1941இல் பச்சன் மீளவும் தேஜி பச்சனை மணமுடித்தார். இவர்கள் இருவருக்கும் அமிதாப் பச்சன், அஜிதாப் பச்சன் என இரு மகன்கள் பிறந்தனர். 1955இல் அரிவன்சராய் தில்லிக்குக் குடிபெயர்ந்து வெளியுறவுத் துறையில் சிறப்புச் சேவை அதிகாரியாக பணியாற்றினார். பத்தாண்டுகள் இப்பணியில் இருந்த காலத்தில் இந்தியாவின் அலுவல் மொழிகள் உருவாக்கத்திற்கும் துணை புரிந்தார். பல முதன்மை படைப்புக்களை இந்தியில் மொழிபெயர்த்து அம்மொழியை வளமாக்கினார். மதுவகத்தை குறித்த மதுசாலா என்ற இவரது கவிதைத் தொகுப்பு மிகவும் புகழ் பெற்றது. ஓமர் கய்யாமின் ரூபாயத், வில்லியம் சேக்சுபியரின் மக்பெத், ஒத்தெல்லோ, மற்றும் பகவத் கீதையின் இந்தி மொழிபெயர்ப்புகளுக்காகவும் அறியப்படுகிறார். நவம்பர் 1984இல் இந்திராகாந்தி படுகொலை குறித்து இவர் எழுதிய 'ஏக் நவம்பர் 1984' என்ற கவிதையே இவரது இறுதிக் கவிதையாக அமைந்தது. 1966இல் பச்சன் மாநிலங்களவைக்கு நிமிக்கப்பட்டார். 1969இல் சாகித்திய அகாதமி விருதும் 1976இல் பத்ம பூசண் விருதும் பெற்றார். இவருக்கு சரஸ்வதி சம்மான் விருதும் வழங்கப்பட்டுள்ளது.[3] பச்சன் சனவரி 18, 2003இல் தமது 95ஆவது அகவையில் மூச்சுத்திணறல் சிக்கல்களால் மரணமடைந்தார்.[4] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia