திவ்ய பாரதி
திவ்ய பாரதி (Divya Bharti[a]; Hindi: दिव्या भारती, 25 பிப்ரவரி 1974-5 ஏப்ரல் 1993) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் பணியாற்றியவர். இவர் அக்காலத்தில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவர் தன் பன்முகத்தன்மைவாய்ந்த நடிப்பிற்காகவும், அழகுக்காகவும் அறியப்பட்டார். பிலிம்பேர் விருது, நந்தி விருது ஆகியவற்றைப் பெற்றவர்.[1][2] பாரதி தனது திரைப்பட வாழ்க்கையை தன் விடலைப்பருவத்திலேயே தொடங்கினார். அதே நேரத்தில் இவர் கவர்ச்சி வடிவழகிப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார். இவர் தெலுங்கில் காதல் அதிரடிப் படமான பொப்பிலி ராஜா (1990), படத்தில் வெங்கடேசுக்கு ஜோடியாக முன்னணிப் பாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் வணிக ரீதியாக தோல்வியுற்ற தமிழ்த் திரைப்படமான நிலா பெண்ணே (1990) படத்தில் நடித்தார். பின்னர் நா இல்லே நா ஸ்வர்கம் (1991), அசெம்பளி ரவுடி (1991) போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். தெலுங்கு காதல் நகைச்சுவை ரவுடி அல்லுடு (1991) என்ற தெலுங்கு காதல் நகைச்சுவைப் படத்தில் பாரதி நடித்தார். இதுவே வணிக ரீதியாக வெற்றிபெற்ற முதல் படமாகும். 1992 ஆம் ஆண்டில், இவர் தெலுங்குப் படங்களிலிருந்து இந்திப் படங்களில் நடிக்கத் துவங்கினார். இந்தி அதிரடித் திரைப்படமாக விஷ்வத்மா (1992) படத்தின் வழியாக இந்தி திரையுலகில் அறிமுகமானார். 1992 ஆம் ஆண்டு வெளியான ஷோலா அவுர் ஷப்னம் என்ற அதிரடி-நகைச்சுவைத் திரைப்படத்தின் வெற்றியானது இவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க திருப்பத்தை ஏற்படுத்தியது. இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. காதல் திரைப்படமான தீவானா (1992) உட்பட முன்னணிப் பாத்திரங்களில் இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றியைப் பெற்றன. இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். பாரதி 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் மும்பையில் ஐந்தாவது மாடியில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் இருந்து விழுந்து தன் 19 வயதில் இறந்தார். இவரது மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளால் பல்வேறு கதைகள் எழுந்தன. இருப்பினும், இவரது மரணம் 1998 இல் அதிகாரப்பூர்வமாக விபத்து மரணமாக அறிவிக்கப்பட்டது. துவக்ககால வாழ்க்கைபாரதி 25 பிப்ரவரி 1974 அன்று பம்பாயில் பிறந்தார்.[3] ஓம் பிரகாஷ் பாரதி, மீதா பாரதி ஆகியோர் இவரது பெற்றோராவர். ஓம் பிரகாஷ் பாரதியின் முதல் திருமணத்தின் வழியாக பிறந்த இவருக்கு குணால் என்ற தம்பியும், பூனம் என்ற ஒன்றுவிட்ட சகோதரியும் இருந்தனர். நடிகை கைனாட் அரோரா இவருடைய உறவினராவார்.[4] இவர் இந்தி, ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.[5] இவரது ஆரம்ப ஆண்டுகளில், இவர் தனது சிரித்த முகம், பொம்மை போன்ற தோற்றத்திற்காக சிறப்பாக அறியப்பட்டார்.[6][7][8] இவர் மும்பை ஜுகூ மானெக்ஜி கூப்பர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பாரதி பள்ளியில் ஓய்வற்ற மாணவியாக இருந்தார். நடிப்பு வாழ்க்கையைத் துவக்குவதற்கு முன் 9-ஆம் வகுப்பை[b] முடித்தார்.[9] நடிப்பு வாழ்க்கைதுவக்ககால பாத்திரங்களும் தெலுங்குப் படங்களும்1988 ஆம் ஆண்டில், அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பாரதியை, திரைப்படப் படைப்பாளியான நந்து தோலானியால் தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இவர் முதலில் 1988 இல் குணாஹோன் கா தேவ்தா திரைப்படத்தின் வழியாக திரையுலகில் அறிமுகமாக இருந்தார். ஆனால் இவரது பாத்திரம் இரத்து செய்யப்பட்டு, இவருக்குப் பதிலாக சங்கீதா பிஜ்லானி நடிக்கவைக்கபட்டார். கீர்த்தி குமார் (கோவிந்தாவின் சகோதரர்) பாரதியை ஒரு ஒளிப்பேழை வாடகைவிடும் கடையில் கவனித்தார். கோவிந்தாவுடன் ஜோடியாக ராதா கா சங்கம் என்ற படத்தில் இவரை நடிக்கவைக்க ஆர்வம் கொண்டார். பாரதி தனது பாத்திரத்திற்குத் தயாராவதற்காக பல மாதங்களாக நடனம், நடிப்பு பயிற்சி எடுத்த பிறகு, படத்திலிருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜூஹி சாவ்லா நியமிக்கப்பட்டார். பாரதி மீதான குமாரின் ஆதிக்கமும், பாரதியின் குழந்தைத்தனமான தன்மையும் தான் பாரதியை படத்தில் இருந்து மாற்றுவதற்குக் காரணம் என்று ஊகிக்கப்பட்டது.[10] தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான டி. ராமநாயுடு, தன் மகன் டகுபதி வெங்கடேசுக்கு ஜோடியாக பொப்பிலி ராஜா என்ற படத்தில் பாரதியை நடிக்கவைக்கும் வரை பாரதியின் திரையுலக வாழ்க்கை துவங்காமலேயே இருந்தது. இப்படத்தின் வழியாக இவர் ஆந்திரப் பிரதேசத்தில் தன் திரையுலக வாழ்வைத் தொடங்கினார். இந்தப் படம் 1990 கோடையில் வெளியாகி வெற்றி பெற்றது. பொப்பிலி ராஜா மிகவும் பிரபலமானதாகவும், தெலுங்குத் திரைப்படங்களின் ஒரு அடையாளமாகவும் உள்ளது.[11] அந்த ஆண்டின் பிற்பகுதியில், பாரதி ஆனந்தின் ஜோடியாக நிலா பெண்ணே, என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் தோல்வியுற்றது. வணிக ரீதியான மதிப்பீடுகளில், தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் லேடி அமிதாப் என்று பரவலாக அழைக்கப்பட்ட விஜயசாந்திக்கு அடுத்தபடியாக பாரதி இடம் பிடித்தார். 1991 ஆம் ஆண்டில், பாரதி முறையே நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன் பாபு ஆகியோருக்கு ஜோடியாக நடித்த ரவுடி அல்லுடு, அசெம்ப்ளி ரவுடி ஆகிய அதிரடி நகைச்சுவைத் திரைப்படங்கள் மூலம் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றார்.[12] அந்த ஆண்டின் பிற்பகுதியில், ஸ்ரீ ராஜீவ் புரொடக்சன்சின் கீழ் ஏ. கோதண்டராமி ரெட்டியின் அதிரடி காதல் படமான தர்ம சேத்திரம் படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினார்.[13] இந்திப் படங்களுக்கும் நட்சத்திர அந்தஸ்துக்கும் மாறுதல்பாரதி தனது வெற்றிக் கணக்கை ஆந்திரப் பிரதேசத்தில் தொடர்ந்த நிலையில், பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் இவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் கொண்டனர். பாரதியின் முதல் இந்தி படம் 1992 ஆம் ஆண்டு வெளியான ராஜீவ் ராயின் விஷ்வத்மா ஆகும். பிலிம்பேருக்கு, அளித்த ஒரு செவ்வியில் படத்தில் சன்னி தியோலின் காதலியான குசும் கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவும், அது ஒரு "மிக நல்ல பாத்திரம்" என்று விவரித்தது கூறினார்.[14] இந்தப் படம் சராசரி வெற்றியை ஈட்டியது. ஆனால் பாரதி பொதுமக்களிடமிருந்தும் திரைப்பட விமர்சகர்களிடமிருந்தும் பரந்த அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றார்.[15][16] படத்தில் பாரதி இடம்பெற்ற சாத் சமுந்தர் பாடல் மிகவும் குறிப்பிடத்தக்கது.[17] ஒரு வாரம் கழித்து, பாரதியின் அடுத்த படமாக, லாரன்ஸ் டிசோசாவின் காதல் நாடகப் படமான, தில் கா கியா கசூர் படம் வெளியானது. அதில் இவர் பிருத்வியுடன் நடித்தார்.[18] இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் அதன் இசைக்காக பேசப்பட்டது.[19] 1992 மார்ச்சில், டேவிட் தவானின்காதல் அதிரடி நாடகப் படமான ஷோலா அவுர் ஷப்னம் வெளியானது. இது விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்று, இந்தியாவில் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. இது பாரதியின் இந்திப் படங்களில் முதல் பெரிய வெற்றியாக ஆனது.[20][21] மூத்த நடிகர் ரிசி கபூரும், புதுமுகமான சாருக் கானும் நடித்த ராஜ் கன்வாரின் பிலிம்பேர் விருது பெற்ற காதல் கதையான தீவானாவின் வழியாகவும் இவர் வெற்றிபெற்றார். இது 1992 இன் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும்.[22] திவானாவில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.[23] பாரதி இந்தித் திரைப்பட நடிகைகளில் ஒரேவகை கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்ட புதிய வகையைச் சேர்ந்தவர் என்று விமர்சகர்கள் பாராட்டினர். பாரதி லக்ஸ் நியூ பேஸ் ஆஃப் தி இயர்க்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.[19] 1992 சூலை வாக்கில், திவானாவில் பாரதியின் நடிப்பு அவருக்கு அதிக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததாகக் கூறப்பட்டது.[24] அந்த ஆண்டு இவர் நடித்து அதிரடி நாடகப் படமான ஜான் சே பியாரா, அதில் பாரதி மீண்டும் கோவிந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார்,[25] அவினாஷ் வாதவனுக்கு ஜோடியாக காதல் நாடகப்படமான கீத், அர்மான் கோக்லியுடன் அதிரடி நாடகப் படமான துஷ்மன் ஜமானா, சுனில் ஷெட்டியின் அறிமுகப் படமான பால்வான் போன்ற பல இந்திப் படங்கள் வெளியாயின. அக்டோபரில், இவர் ஹேமா மாலினியின் காதல் நாடகப் படமான தில் ஆஷ்னா ஹை படத்தில் தோன்றினார். ஆனால் இது வணிகரீதியாக சிறப்பான வெற்றியைப் பெறவில்லை. தன் தாயைக் கண்டுபிடிக்கப் புறப்படும் பார் நடனக் கலைஞராக இவர் நடித்தார். இந்தப் பாத்திரம் இவருக்கு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுத் தந்தது. பாரதி தனது தெலுங்கு இரசிகர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க ஆண்டுக்கு ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க முடிவு செய்தார். 1993 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சிட்டெம்ம மொகுடு வெளியானது, இதில் மீண்டும் பாரதி மோகன் பாபுவின் ஜோடியாக நடித்தார்.[26] இவரது வாழ்நாளில் வெளியான கடைசி படமான க்ஷத்திரிய படத்தில் சன்னி தியோல், சஞ்சய் தத், ரவீணா டாண்டன் ஆகியோருடன் இணைந்து நடித்தார். இது 26 மார்ச் 1993 அன்று வெளியானது. இவர் நடித்து முடிக்க முடியாத படங்களில் இவருக்கு பதிலாக வேறு நடிகைகள் நடிக்கவைக்கப்பட்டனர் அந்தப் படங்கள் பின்வருமாறு (இவருக்கு பதிலாக நடித்த நடிகைகளின் பெயர்கள் அடைப்புக் குறியில் குறிப்பிடப்பட்டுள்ளன): மோக்ரா (ரவீனா டாண்டன் ), கார்த்தவ்யா ( ஜூஹி சாவ்லா), விஜய்பாத் (தபு), தில்வாலே (ரவீனா டாண்டன்), ஆண்டோலன் ( மம்தா குல்கர்னி). இவர் இறந்தபோது லாட்லா படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் இருந்தது. இதனால் படம் மறுவடிவமைக்கப்பட்டு ஸ்ரீதேவி கதாபாத்திரத்திரத்தில் மீண்டும் எடுக்கபட்டது. இவர் இறப்பதற்கு சற்று முன்பு, ரங், ஷத்ரஞ்ச் ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்திருந்தார்; இவை முறையே 7 சூலை 1993 மற்றும் 17 திசம்பர் 1993 ஆகிய நாட்களில் வெளியாகி மிதமான வெற்றியைப் பெற்றன.[27][28] இந்த இரண்டு படங்களுக்கும் தனது காட்சிகளை இவர் நடித்து கொடுத்து முடித்திருந்தாலும், படங்களுக்கு பின்னணி குரல் பேசு வாய்ப்பு கிடைக்காததால், அதற்கு பின்னணிக் குரல் கலைஞர் பயன்படுத்தப்பட்டார். இவரது முழுமையடையாத தெலுங்கு படமான தொலி முத்து நடிகை ரம்பாவைக் கொண்டு ஓரளவு முடிக்கப்பட்டது. அவர் பாரதியைப் போலவே இருந்தார். எனவே படத்தில் இவரது மீதமுள்ள காட்சிகளை முடிக்க அவர் பயன்படுத்தப்பட்டார். படம் 1993 அக்டோபரில் வெளியானது. ஷோலா அவுர் ஷப்னம் படத்தொகுப்பில் பணிபுரியும் போது நடிகர் கோவிந்தா மூலம் இயக்குநர்-தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவை பாரதி சந்தித்தார். இவர்கள் 10 மே 1992[29] அன்று அவரது சிகையலங்கார நிபுணரும் நண்பருமான சந்தியா, சந்தியாவின் கணவர் மற்றும் காசி முன்னிலையில் பம்பாய் நதியாத்வாலாவின் துளசி பில்டிங்ஸ் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டனர்.[30][31] இவரது வருவாய் தரும் திரைப்பட வாழ்க்கையை பாதிக்காதபடி திருமணம் இரகசியமாக வைக்கப்பட்டது.[32][33] மரணம்1993 ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை நேரத்தில், பம்பாயில் அந்தேரி மேற்கு வெர்சோவாவில் உள்ள துளசி பில்டிங்சில் உள்ள ஐந்தாவது மாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டு பால்கனி சாளரத்திலிருந்து பாரதி கீழே விழுந்தார்.[34] அவரது விருந்தினர்களான நீதா லுல்லா, நீதாவின் கணவர் ஷியாம் லுல்லா, பாரதியின் பணிப்பெண் அம்ரிதா குமாரி மற்றும் அக்கம்பக்கத்தினர் என்ன நடந்தது என்பதை உணர்ந்ததும், கூப்பர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவசர ஊர்தியில் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்தார். இறந்தபோது இவருக்கு 19 வயது. இவரது மரணம் தொடர்பாக பல கதைகள் உருவாயின என்றாலும், பாரதியின் தந்தை எந்தத் தவறும் நடக்கவில்லை என்று மறுத்தார். இவரது மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணங்களாக தலையில் காயங்களும், உட்புற இரத்தப்போக்கும் கருதப்பட்டன. இவரது உடல் 7 ஏப்ரல் 1993 அன்று பம்பாயில் உள்ள வில்லே பார்லே சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அடிக்குறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia