உலோகப்பணி எந்திரங்கள், இரும்பாலை பொருட்கள், வேளாண் எந்திரங்கள், உலோகங்கள், தானுந்து பாகங்கள், வானூர்தி, வானூர்தி பாகங்கள், எண்ணெய் தயாரிப்பு எந்திரங்கள்
மெக்சிக்கோவின் பொருளாதாரம்ஆனைத்துலக நாணய நிதியத்தின் அறிக்கைப்படி உலகப் பொருளாதாரங்களில் பெயரளவில் 15ஆவதாகவும் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படி 11ஆவதும் ஆகும்.[13]
1994இல் ஏற்பட்ட நிதி நெருக்கடியை அடுத்து ஆட்சியாளர்கள் நாட்டின் பருப்பொருளியல் அடிப்படைகளை மேம்படுத்தியுள்ளனர். 2002இல் தென்னமெரிக்காவின் நெருக்கடியால் மெக்சிக்கோ பாதிப்படையவில்லை. இக்காலத்தில் குறைவான வளர்ச்சியைக் கண்டபோதும் அது நேர்மறையான வளர்ச்சியாக இருந்தது. இருப்பினும் 2008 நிலைத்தேக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிக்கோவும் ஒன்றாக இருந்தது; இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6%கும் கூடுதலாக குறைந்தது.
மெக்சிக்கோவின் பருப்பொருளியல் நிலைத்தன்மையால் பணவீக்கமும் வட்டி வீதங்களும் மிகவும் குறைந்திருக்கின்றது; தனிநபர் வருமானமும் கூடியுள்ளது. இருப்பினும் நகர்ப்புற / ஊரக மக்களிடையேயும் வடக்கு/தெற்கு மாநிலங்களிடையேயும் செல்வந்தர்/ வறியவர் இடையேயும் பொருளியல் நிலையில் பெரும் வேறுபாடு உள்ளது. [14] கட்டமைப்பை மேம்படுத்துவதும் வரி சீர்திருத்தங்களும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களும் வருமானங்களுக்கிடையேயான பெரும் இடைவெளியைக் குறைப்பதும் அரசை எதிர்நோக்கியுள்ள சில சிக்கல்களாகும். வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.6 விழுக்காடாக உள்ளது. 2013இல் இது 34 பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளிலும் மிகவும் குறைந்ததாகும்.[15]
விரைவாக வளர்ந்து வரும் தற்கால தொழில் மற்றும் சேவைத் துறைகளை உள்ளடக்கிய மெக்சிக்கோ பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகளின் பங்கு கூடி வருகின்றது. அண்மைய ஆட்சியாளர்கள் துறைமுகங்கள், தொடருந்து போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்னாக்கம், இயற்கை வளிம்ப் பங்கீடல், வானூர்தி நிலையங்கள் ஆகியவற்றை தனியார் துறைக்குத் திறந்துள்ளனர். இது போட்டியை வளர்க்கவும் கட்டமைப்பை விரைந்து மேம்படுத்தவும் இக்கொள்கையை செயலாக்குகின்றனர். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக 90%க்கும் கூடிய மெக்சிக்கோ வணிகம் நாடுகளுக்கிடையேயான கட்டற்ற வணிக உடன்பாடுகளின் கீழ் நடக்கின்றது; ஐரோப்பிய ஒன்றியம், சப்பான், இசுரேல், நடு மற்றும் தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 40 நாடுகளுடன் மெக்சிக்கோ கட்டற்ற வணிக உடன்பாடு கொண்டுள்ளது. இவற்றில் 1994 முதல் செயற்பாட்டுக்கு வந்த வட அமெரிக்க கட்டற்ற வணிக உடன்பாடு (NAFTA) மிகவும் முதன்மையானதாகும். இது 1992இல் மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா அரசுகளுக்கிடையே கையொப்பமானது. 2006இல் இவ்விரு நாடுகளுடனான வணிகம் மெக்சிக்கோவின் ஏற்றுமதியில் 90% ஆகவும் இறக்குமதியில் 55% ஆகவும் இருந்தது.[16] உலகின் பெரிய வணிக நிறுவனங்களைப் ப்பட்டியலிடும் போர்ப்சு குளோபல் 2000 2008ஆம் ஆண்டுப் பட்டியலில் மெக்சிக்கோவின் 16 நிறுவனங்கள் இருந்தன.[17]
மெக்சிக்கோவின் பல குடும்பங்கள் மிகவும் வறியநிலையில் தற்காலிக வீடுகளில் வசிக்கின்றனர்.மெக்சிக்கோ மாநிலங்களுக்கிடையேயான தனிநபர் உற்பத்தி வேறுபாடு, அமெரிக்க டாலரில், 2012.