ஆழ்வார்கள் (Alvars) இந்து சமய தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.[1]
அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
இவர்கள் பொ.ஊ. 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.
சொற்பொருள்
மரபுப்படி இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொற்பொருள் கூறுவர். ஆயினும் இந்தச் சொல் ஆள்வார் என்றும் வழங்கினதாகவும் பிறகு ஆழ்வார் என்று ஆனதாகவும் எஸ். பழனியப்பன் என்ற இந்தியவியல்/மொழியியல் ஆய்வாளர் பதிப்பித்துள்ளார்.[2]
வரலாறு
பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய ~4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் திவ்விய பிரபந்தம் (அ) அருளிச்செயல் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார்.
பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தமிழ் வேதம்/ திராவிட வேதம் என்றும் போற்றப்படுகின்றது. திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார் என்ற சிறப்பும் உண்டு.
↑மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 198. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)