காமராசர்

பெருந்தலைவர்
கு. காமராசர்
சென்னை மாநில 3 ஆவது முதலமைச்சர்
பதவியில்
1954–1963
ஆளுநர்
முன்னையவர்இராசகோபாலாச்சாரி
பின்னவர்எம். பக்தவத்சலம்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1952–1954
பிரதமர்ஜவஹர்லால் நேரு
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
பின்னவர்முத்துராமலிங்கத் தேவர்
தொகுதிதிருவில்லிபுத்தூர்
பதவியில்
1967–1975
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்அ. நேசமணி
பின்னவர்குமரி அனந்தன்
தொகுதிநாகர்கோவில்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1954–1957
முன்னையவர்அருணாச்சல முதலியார்
பின்னவர்வி. கே. கோதண்டராமன்
தொகுதிகுடியாத்தம்
பதவியில்
1957–1967
முன்னையவர்இராமசாமி நாயுடு
பின்னவர்இராமசாமி நாயுடு
தொகுதிசாத்தூர்
இந்திய தேசிய காங்கிரசு தலைவர்
பதவியில்
1964–1967
முன்னையவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
பின்னவர்எஸ். நிசலிங்கப்பா
தலைவர் - நிறுவன காங்கிரசு
பதவியில்
1969–1975
பின்னவர்மொரார்சி தேசாய்
சென்னை மாநில காங்கிரசு தலைவர்
பதவியில்
1946–1952
பின்னவர்ப. சுப்பராயன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
காமாட்சி

(1903-07-15)15 சூலை 1903
விருதுப்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு(1975-10-02)2 அக்டோபர் 1975
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இளைப்பாறுமிடம்பெருந்தலைவர் காமராசர் நினைவகம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1969 வரை)
நிறுவன காங்கிரசு (1969–75)
வாழிடம்
தொழில்
விருதுகள்பாரத ரத்னா (1976)
கையெழுத்து
புனைப்பெயர்கள்
  • கர்மவீரர்
  • பெருந்தலைவர்
  • கல்வி தந்தை
  • படிக்காத மேதை
  • கருப்பு காந்தி

காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் இந்தியத் தலைமையமைச்சர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக 1960-களின் இந்திய அரசியலில் இவர் "கிங்மேக்கர்" (அரசர்களை உருவாக்குபவர்) என்று அழைக்கப்பட்டார். பின்னர், இவர் நிறுவன காங்கிரசு கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தார்.

இவர் 1920-களில் இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இச் செயற்பாடுகள் காரணமாக பிரித்தானிய அரசால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1937-இல், காமராசர் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மூன்று ஆண்டுகள் சிறையிலிடப்பட்டார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, காமராசர் 1952 முதல் 1954 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் ஏப்ரல் 1954-இல் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்றார். ஏறக்குறைய பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த இவர், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், ஏழைகள், பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார். குழந்தைகளுக்கு இலவசக் கல்வி தந்ததோடு அவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இவர் தமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதில் ஆற்றிய பங்கின் காரணமாக கல்வித் தந்தை என்று பரவலாக அறியப்படுகிறார்.

காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் கருப்பு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர் என்று புகழப்படுகிறார். காமராசரின் மறைவுக்குப் பின், 1976-இல் இந்திய அரசு இவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கிச் சிறப்பித்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம் தொடங்கி பல தெருக்களுக்கும் கட்டிடங்களுக்கும் காமராசர் பெயரைச் சூட்டிச் சிறப்பித்துள்ளார்கள்.

தொடக்கக்கால வாழ்க்கை

காமராசர் 1903-ஆம் ஆண்டு சூலை 15-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இவரது தந்தை ஒரு தேங்காய் வணிகராக இருந்தார். இவரது பெற்றோர் இவருக்குத் தங்கள் குலதெய்வத்தின் பெயரான காமாட்சி என்னும் பெயரை இட்டனர்.[2] இவரது பெற்றோர் இவரை ராசா என்றும் அழைத்தனர். இந்த இரு பெயர்களின் இணைப்பே பின்னர் காமராசா என மாறியது.[3] காமராசருக்கு நாகம்மாள் என்ற தங்கை இருந்தார்.[4]

காமராசருக்கு ஆறு வயதாக இருந்தபோது, இவருடைய தாத்தாவும் தந்தையும் அடுத்தடுத்து காலமானத்தைத் தொடர்ந்து, இவருடைய தாயார் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.[2] பின்னர் இவர் தனது 12 வயதில் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு, தனது தாய் மாமா நடத்தும் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.[5][6] பழங்கால தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்டார். மேலும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து முருகன் வழிபாட்டிலும் நேரத்தைச் செலவிட்டார்.[7]

அரசியல் ஆர்வம்

காமராசர் 13 வயதிலிருந்தே பொது நிகழ்வுகளிலும் அரசியலிலும் ஆர்வம் காட்டினார். தனது மாமாவின் கடையில் பணிபுரியும் போது, பஞ்சாயத்துக் கூட்டங்கள் மற்றும் பிற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். சுதேசமித்திரன் தமிழ் நாளிதழைத் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து வந்தார். கடையில் தனது வயதுடையவர்களுடன் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி விவாதித்தார்.[7]

காமராசர் அன்னி பெசன்ட் நடத்திய தன்னாட்சி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பங்கிம் சந்திர சட்டர்ஜி, பாரதியார் ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அரசியலில் நாட்டம் கொண்டதாலும், தொழிலில் நேரத்தைச் செலவிடாததாலும், இவர் திருவனந்தபுரம் நகரிலுள்ள மற்றொரு மாமாவுக்குச் சொந்தமான மரக் கடையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். கேரளத்தில் இருந்தபோது, இவர் தொடர்ந்து பொது நடவடிக்கைகளில் பங்கேற்றார். வைக்கம் நகரில் உள்ள மகாதேவர் கோவிலில் அனைத்து சாதி மக்களும் நுழைய வேண்டி நடத்தப்பட்ட வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். காமராசர் தனது சொந்த ஊருக்குத் திரும்ப அழைக்கப்பட்ட பின், இவருக்கு மணமகளைத் தேட இவரது தாயார் முயற்சித்த பொது, திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.[8]

அரசியல் வாழ்க்கை

தொடக்க ஆண்டுகள் (1919-29)

1919-ஆம் ஆண்டு, ரௌலட் சட்டம் விசாரணையின்றி இந்தியர்களின் சிறைவாசத்தை நீட்டித்தது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அமைதியான போராட்டக்காரர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஜலியான்வாலா பாக் படுகொலை ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து, காமராசர் தனது பதினாறாவது வயதில் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் சேர முடிவு செய்தார்.[9][10]

21 செப்டம்பர் 1921 அன்று, காமராசர் முதன்முறையாக மதுரையில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். காந்தியின் மது ஒழிப்பு, காதி பயன்பாடு, தீண்டாமை ஒழிப்பு போன்ற கருத்துக்களால் கவரப்பட்டார். 1922-ஆம் ஆண்டு, காமராசர் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக வேல்ஸ் இளவரசர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சென்னைக்குச் சென்றார். பின்னர் விருதுநகர் நகரக் காங்கிரசு குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக, இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர மக்களைத் தூண்டுவதற்காக, காந்தியின் பேச்சுக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.[11] அடுத்த சில ஆண்டுகளில், காமராசர் நாக்பூரில் நடந்த கொடி சத்தியாகிரகம் மற்றும் சென்னையில் நடந்த வாள் சத்தியாகிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காங்கிரசின் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.[12]

விடுதலை இயக்கம் (1930-39)

1930-ஆம் ஆண்டு, காந்தியின் உப்பு சத்தியாக்கிரகதிற்கு ஆதரவாக வேதாரண்யம் கடற்கரையில் இராசகோபாலாச்சாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காமராசர் கலந்து கொண்டார்.[13] இவர் அப்பொழுது முதன்முறையாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1931-இல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான போது விடுவிக்கப்பட்டார்.[14] 1931-இல் அகில இந்திய காங்கிரசு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அடுத்த பத்தாண்டுகளில், சென்னை மாகாணத்தில் காங்கிரசு கட்சி இராசாசி எதிர் சத்தியமூர்த்தி என இரண்டாகப் பிளவுபட்டது. காமராசர் சத்தியமூர்த்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரை ஆதரித்தார்.[15] சத்தியமூர்த்தி காமராசரின் அரசியல் வழிகாட்டியானார். அதே வேளை காமராசர் சத்தியமூர்த்தியின் நம்பகமான உதவியாளராகவும் 1931-ஆம் ஆண்டு, காங்கிரசின் வட்டாரத் தேர்தலில், சத்தியமூர்த்தி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற காமராசர் உதவி செய்தார்.[16] 1932-இல், காமராசர் மீண்டும் தேசத்துரோகம் மற்றும் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, திருச்சிராப்பள்ளி சிறையில் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இவர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஜெய்தேவ் கபூர், கமல்நாத் திவாரி போன்ற புரட்சியாளர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். 1933-34-இல், காமராசர் வங்காள ஆளுநர் ஜான் ஆண்டர்சனை கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், கொலை செய்வதற்கான ஆயுதங்களை வழங்கியதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் 1934-இல் விடுவிக்கப்பட்டார்.[17]

1933 சூன் 23-ஆம் தேதி, விருதுநகர் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட காமராசர் எதிர்க்கட்சியினரால் கடத்தப்பட்டார். முத்துராமலிங்கத் தேவர் முயற்சியால் மீட்கப்பட்டார்.[சான்று தேவை] அக்காலத்தில் வரி செலுத்துவோர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்கிற சட்டம் இருந்தது. எனவே, காமராசர் பெயரில் வரி கட்டி ஓர் ஆட்டுக் குட்டியை விலைக்கு வாங்கிய முத்துராமலிங்கம், அவர் தேர்தலில் நிற்பதற்கு உறுதுணையாக இருந்தார்.[18][19] 1933-ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி, விருதுநகரில் உள்ள அஞ்சல் நிலையம் மற்றும் காவல் நிலையங்களில் குண்டு வெடித்தது. நவம்பர் 9-ஆம் தேதி, காமராசர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக உள்ளூர் காவல் ஆய்வாளரின் எதிர்ப்பையும் மீறி கைது செய்யப்பட்டார். இந்திய காவல்துறை அதிகாரிகளும் பிரித்தானிய அதிகாரிகளும் சேர்ந்து பல தந்திர வழிகளிலும் துன்புறுத்தலிலும் ஈடுபட்டு இந்த வழக்கில் காமராசரின் ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சித்தனர். நீதிமன்றத்தில் காமராசர் சார்பில் வரதராசுலு நாயுடு, சார்ச் சோசப் ஆகியோர் வாதிட்டு, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபித்தனர்.[20] வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், காமராசார் இந்த வழக்கின் செலவுக்காக வீட்டைத் தவிர தனது மூதாதையர் சொத்துக்களில் பெரும்பாலானவற்றை விற்க நேரிட்டிருந்தது.[21]

1934 இந்தியப் பொதுத் தேர்தலில், காமராசர் காங்கிரசிற்கான பரப்புரைகளை ஏற்பாடு செய்தார். 1936-இல் சென்னை மாகாண காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1937-இல் சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[22][23]

காங்கிரசு தலைமையும் சிறைவாசமும் (1940-45)

1940-இல், காமராசர் சென்னை மாகாண காங்கிரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; சத்தியமூர்த்தி பொதுச் செயலாளராக பணியாற்றினார்.[24] சென்னை மாகாண ஆளுநர் ஆத்தர் ஹோப் இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு நிதியளிக்க நன்கொடைகளைச் சேகரித்ததை எதிர்த்துப் பரப்புரை செய்தார். 1940 திசம்பரில், போர்நிதிக்கு நன்கொடை அளிப்பதை எதிர்த்து பேசியதற்காக இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.[25] அங்கிருக்கும் போதே 1941-இல் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலையானதும் நேராகச் சென்று பதவி ஏற்றவுடன், உடனடியாக பதவியை விட்டும் விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.[26][27]

ஆகத்து 1942-இல், காமராசர் பம்பாயில் நடந்த அகில இந்திய காங்கிரசு கூட்டத்தில் கலந்துகொண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கதிற்குப் பிரச்சாரப் பொருட்களுடன் திரும்பினார். பம்பாய் அமர்வில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களையும் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காமராசர் உள்ளூர் தலைவர்களுக்குக் கூட்டத்தில் கூறப்பட்ட செய்தியைச் சேர்ப்பதற்கு முன்பு கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. பல்வேறு வழிகளில் கைது செய்யப்படுவதைத் தவிர்த்தார். வேலை முடிந்ததும் காவல் துறையிடம் சரணடைந்தார்.[26][28] இவர் சிறையில் இருந்தபோது, மார்ச் 1943-இல் சத்தியமூர்த்தி காலமானார்.[29] சூன் 1945-இல் விடுவிக்கப்படும் வரை மூன்று ஆண்டுகள் சிறைக் காவலில் இருந்தார். இதுவே காமராசரின் இறுதியானதும் நீண்டதுமான சிறைத் தண்டனையாகும்.[13] இவரின் இந்திய விடுதலைப் போராட்ட ஆதரவு நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர் இவரை ஆறு முறை கைது செய்தனர். ஏறத்தாழ 3,000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.[30]

உயரும் செல்வாக்கும் விடுதலைக்குப் பிறகும் (1946-53)

காமராசர் சிறையில் இருந்து வந்த பிறகு, இராசாசி கட்சியில் இருந்து விலகியதாலும், சத்யமூர்த்தி காலமானதாலும் காங்கிரசு கணிசமாக பலவீனமடைந்திருந்ததைக் கண்டார். இவருக்கும் இராசாசிக்கும் இருந்த கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இராசாசியைச் சந்தித்தார். இருந்தாலும், இவரின் விருப்பத்திற்கு மாறாக இராசாசி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதால் கோபமடைந்தார். சர்தார் வல்லபாய் பட்டேல் ஆலோசனையின் பேரில், பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. 1946-இல் காந்தியின் சென்னை வருகைக்குப் பிறகு, இராசாசி கட்சியின் சிறந்த தலைவர் என்றும், அவருக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள் என்றும் காந்தி எழுதினார். இது மறைமுகமாகத் தன்னைக் குறிப்பிட்டு எழுதியதாகக் கருதிய காமராசர், கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இருந்து விலகினார். காந்தி பின்னர் சமாதானப்படுத்த முயற்சி செய்த போதிலும், காமராசர் தனது விலகலைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார். இதற்கிடையில், காமராசருக்கு கட்சியில் இருந்த செல்வாக்கு காரணமாக இராசாசி அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்றார்.[31][32] 1946 சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உரிமையைப் பெற்றது. த. பிரகாசம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், சிறிது காலத்திலேயே காமராசருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக ஓமந்தூர் ராமசாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ராமசாமி மாற்றப்பட்டு, 1949-இல் குமாரசுவாமி ராசா முதலமைச்சராக ஆக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில், காங்கிரசு கட்சியின் தலைவராக காமராசர் கட்சி விவகாரங்களில் கணிசமான ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்.[33][34] 1947 ஆகத்து 15 அன்று, காமராசர் இந்திய தேசியக் கொடியை சென்னையில் சத்தியமூர்த்தியின் வீட்டில் ஏற்றினார்.[35] 1951–52 இந்தியப் பொதுத் தேர்தலில், திருவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரானார்.[36]

1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசு பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே (375-இல் 152) வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க காமராசர் விரும்பவில்லை. ஆனால், காங்கிரசின் மத்தியக் குழு ஆட்சி அமைக்க ஆர்வமாக இருந்தது. இந்தியத் தலைமை ஆளுநராக பதவி வகித்து ஓய்வுக்காலத்துக்குச் சென்ற இராசாசிதான் தலைமை தாங்க சரியானவர் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய பிரதமர் சவகர்லால் நேரு உடனான ஆலோசனைக்குப் பிறகு, இராசாசி அரசாங்கத்தை அமைத்தார்.[37][38] காமராசர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இராசாசியுடன் பணியாற்றக்கூடிய ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதனையடுத்து பி. சுப்பராயன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 1953-இல் காமராசர் மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.[39]

தமிழக ஆட்சிப் பொறுப்பு (1954-63)

காமராசர் (இடதுபுறம் இருந்து இரண்டாவது) 1955-இல் ஒரு கட்சி உறுப்பினரின் வீட்டிற்குச் சென்றபோது.

இராசாசியின் குலக்கல்வித் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்ப, அதே சமயத்தில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக 1953-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட, காங்கிரசு கட்சியின் உள்ளேயே இராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, தானே விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார். பின்னர் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசரை எதிர்த்து தன்னுடைய ஆதரவாளரான சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். காமராசர் சட்டமன்ற உறுப்பினர்களால் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 ஏப்ரல் 13 அன்று சென்னை மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.[39][40] நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[41] அப்பொழுது காமராசருக்கு பெரியார், அண்ணாதுரை போன்ற பிற கட்சித் தலைவர்களின் ஆதரவும் இருந்தது.[42]

காமராசர் அமைச்சரவை (1962)

காமராசர் அமைச்சரவையில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக எட்டு பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்தார்.[43] மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் திறம்படப் பயன்படுத்தினார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய மாநில வளர்ச்சிக் குழுக்களை உருவாக்கினார். அவை வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தன.[44]

காமராசர் கல்வி முறையிலும் உள்கட்டமைப்பிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இராசாசி கொண்டு வந்திருந்த குடும்பத் தொழில் அடிப்படையிலான தொடக்கக் கல்வியின் மாற்றியமைக்கப்பட்ட திட்டம் திரும்பப் பெறப்பட்டு, 11 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. மாணவர்கள் நீண்ட தூரம் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு மூன்று கிமீ சுற்றளவிலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. இதன் விளைவாக, முன்பு மூடப்பட்ட ஏறத்தாழ 6,000 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதுடன் 12,000 பள்ளிகள் புதிதாகவும் கட்டப்பட்டன.[45] மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டபோது, காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார். அனைத்து பள்ளிகளிலும் ஒரு நாளைக்கு ஒரு வேலை இலவச உணவாவது வழங்க ஏற்பாடு செய்தார். கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, பொது மக்களின் உதவியையும் பங்களிப்புகளையும் கோரி திட்டங்களை அறிமுகப்படுத்தினர்.[46] பள்ளிகளில் சாதி, வகுப்பு அடிப்படையிலான வேறுபாடுகளைக் களைய இலவச சீருடைகளை அறிமுகப்படுத்தினர்.[47]

காமராசர் (இடது) ஐக்கிய இராச்சியத்தின் ராணி எலிசபெத் II 1961-இல் இந்தியாவிற்கு வந்த போது.

புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கல்வி முறை சீர்திருத்தப்பட்டு, வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டன. 1959-இல் சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் உட்பட பல புதிய உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும்படி ஓய்வூதியத் திட்டத்தை நீட்டித்தார்.[22] இந்த முயற்சிகள் பத்தாண்டுகளில் மாநிலத்தில் பள்ளிச் சேர்க்கையில் கணிசமான முன்னேற்றத்திற்கும் கல்வியறிவு விகிதங்களில் வளர்ச்சிக்கும் வித்திட்டன. இது காமரசருக்கு கல்வித் தந்தை என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.[48][49][50]

காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். இவரது ஆட்சிக் காலத்தில் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களும் அணைகள் கட்டுமானங்களும் செயல்படுத்தப்பட்டன. உள்ளூர் வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டன. இவற்றுக்கு அரசாங்கம் மின்சாரம் வழங்கி உதவியது. சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், மணலி சுத்திகரிப்பு நிலையம், நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டன.[51][52]

காமராசார் 1957 மற்றும் 1962 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். 1960-களின் நடுப்பகுதியில், காங்கிரசு கட்சி மெல்ல அதன் வீரியத்தை இழந்து வருவதைக் கவனித்த இவர், கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த முதல்வர் பதவியை விட்டு விலக முன்வந்தார்.[53] 2 அக்டோபர் 1963 காந்தி ஜெயந்தி நாளன்று முதல்வர் பதவியைத் துறந்தார்.[41][40]

தேசிய அரசியல் (1964-75)

காமராசர் (நடுவில்) ஜவஹர்லால் நேரு (வலது), லால் பகதூர் சாஸ்திரி (இடது) உடன்.

காமராசர் தனது முதல்வர் பதவியை துறந்த பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை விட்டு விலகி, காங்கிரசு கட்சியின் மறுமலர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் மூத்த காங்கிரசு தலைவர்கள் அமைச்சுப் பதவிகளை விட்டுவிட்டு கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார். இந்த "காமராசர் திட்டம்" என்று அறியப்பட்டது. இது காங்கிரசார் அதிகாரத்தால் ஈர்க்கப்படுகிறார்கள் என்ற எண்ணத்தைப் போக்கவும், கட்சியின் மதிப்புகள் மீதும் நோக்கங்கள் மீதும் ஈடுபாட்டை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டது.[54] இதனைத் தொடர்ந்து காங்கிரசின் ஆறு மத்திய அமைச்சர்களும் ஆறு மாநில முதலமைச்சர்களும் தங்கள் பதவிகளை விட்டு விலகினர்.[55] இதைத் தொடர்ந்து 9 அக்டோபர் 1963 அன்று காமராசர் காங்கிரசின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[56]

1964-இல் நேருவின் இறப்புக்குப் பிறகு, காமராசர் கொந்தளிப்பான காலகட்டத்தில் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார். கட்சியின் தலைவராக இருந்த போதிலும், அடுத்த பிரதமராக வர மறுத்து, 1964-இல் லால் பகதூர் சாஸ்திரியையும் 1966-இல் நேருவின் மகளான இந்திரா காந்தியையும் பிரதமர்களாகப் பொறுப்பேற்க வைப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். இதனால் 1960-களில் "கிங்மேக்கர்" (அரசர்களை உருவாக்குபவர்) என்று பரவலாகப் பாராட்டப்பட்டார்.[57][58]

1965-இல், உணவு நெருக்கடியின் போது, காமராசர் அப்போதைய நிதி அமைச்சரான டி. டி. கிருஷ்ணமாச்சாரியின் உதவியோடு பொது விநியோக முறையை அறிமுகம் செய்தார். காங்கிரசு கட்சியின் மீதான மக்களின் ஏமாற்றம் திராவிட முன்னேற்றக் கழகம் வளர வழிவகுத்தது. 1967 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசின் தோல்வியுற வைத்தது. காமராசர் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் என்பவரால் 1,285 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார்.[59][60] பின்னர் நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1969-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.[61]

இந்திரா காந்தி பிரதமராக நியமிக்கப்பட்டதில் இருந்தே, அவருக்கும் காமராசர் தலைமையிலான "சிண்டிகேட்" எனப்படும் காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 1967 இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்குப் பிறகு, இந்தப் பிளவு மேலும் விரிவடையத் தொடங்கியது. 1969-இல், காங்கிரசு கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்திரா காந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் விளைவாக கட்சி இரண்டாக பிளவுபட்டது. காமராசர் தலைமையில் நிறுவன காங்கிரசு செயல்பட்டது. இந்திரா காந்தி சிறிய வட்டாரக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகத் தொடர்ந்தார்.[62] 1970-இல் நாடளுமன்ற கீழவையைக் கலைத்து புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். 1971 இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திரா தலைமையிலான அணி 352 இடங்களில் வென்றது. இதனுடன் ஒப்பிடுகையில் நிறுவன காங்கிரசு வெறும் 16 இடங்களை மட்டுமே பெற்றது.[63] காமராசர் 1975-இல் இறக்கும் வரை நிறுவன காங்கிரசிலேயே இருந்தார்.[64]

இறுதிக் காலம்

இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை நடைமுறைப்படுத்தியபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இக்காலகட்டத்தில், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட பல தலைவர்களை அரசு கைது செய்தது. காமராசர் இந்திராவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி, மதிய உணவுக்குப் பிறகு காமராசருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. 72 வயதில் மாரடைப்பு காரணமாக தூக்கத்தில் உயிர் பிரிந்தது.[65] காமராசரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக இராசாசி மண்டபத்தில் வைக்கப்பட்டது. மறுநாள், காந்தி மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.[66] காமராசரைச் சிறப்பிக்கும் வகையில் சென்னை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன.[67][68]

மரபும் புகழும்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராசர் சிலை, கல்வியில் அவர் ஆற்றிய பங்களிப்பைச் சித்தரிக்கிறது.

காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றினார். எப்போதும் எளிமையான காதி சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். இதனால் இவரை மக்கள் அன்போடு "கருப்பு காந்தி" என்று அழைத்தனர்.[69] எளிய உணவுகளையே உண்டார். அரசின் சிறப்புச் சலுகைகளைப் பெற மறுத்தார்.[70] தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அரசியலில் செலவிட்டார். உறவுகள் மற்றும் குடும்பத்திற்காக அதிக நேரத்தை செலவிடவில்லை.[71]

இவர் முதலமைச்சராக இருந்தபோது, விருதுநகர் நகராட்சி தனது வீட்டிற்கு நேரடி குடிநீர் இணைப்பு வழங்கியபோது, சிறப்புச் சலுகைகள் எதுவும் வேண்டாம் என்றும், பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு அல்ல என்றும் கூறி உடனடியாக அதைத் துண்டிக்க உத்தரவிட்டார். காவல்துறையின் பாதுகாப்பை மறுத்து, அது பொது மக்களின் பணத்தை வீணடிப்பதாக கூறினார்.[51] காமராசருக்குச் சொந்தமாகச் சொத்து எதுவும் இல்லை. இறக்கும் போது இவரிடம் கைவசம் ஒரு சில புத்தகங்களைத் தவிர ₹130 பணம், இரண்டு இணை செருப்புகள், நான்கு சட்டைகளும் வேட்டிகளும் மட்டுமே இருந்தன.[72]

எந்தவொரு இலக்கையும் சரியான வழிமுறையின் மூலம் அடைய முடியும் என்று நம்பிய இவரைக் கர்ம வீரர் என்றும் பெருந்தலைவர் என்றும் அழைக்கின்றனர்.[73][74] இவர் முறையான உயர்கல்வி இல்லாவிட்டாலும், புத்திசாலித்தனம், உள்ளுணர்வு, மனித இயல்பைப் பற்றிய புரிதலைக் கொண்டிருந்தார். இதனால் இவரைப் படிக்காத மேதை என்கிற அடைமொழி கொண்டும் அழைத்தனர்.[2]

காமராசரின் மறைவுக்குப் பின், 1976-இல் இந்திய அரசு இவருக்குப் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிச் சிறப்பித்தது.[75] 2004-ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் காமராசரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ₹ 100 மற்றும் ₹ 5 மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயங்களை வெளியிட்டது.[76]

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம், எண்ணூர்துறைமுகம் ஆகியவற்றிற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[77][78][79] பல தெருக்கள், தொடர்வண்டி நிலையங்கள், கட்டிடங்களுக்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[80][81][82][83] இவரைப் போற்றும் வகையில், புது டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றம், சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முகப்பு உட்பட பல இடங்களில் இவரின் சிலைகள் உள்ளன.[84]

திரைப்படம்

2004-ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[85]

மேற்கோள்கள்

  1. Kapur, Raghu Pati (1966). Kamaraj, the iron man. Deepak Associates. p. 12.
  2. 2.0 2.1 2.2 Sanjeev & Nair 1989, ப. 140.
  3. Murthi 2005, ப. 85.
  4. "In dire straits, Kamaraj kin get Congress aid for education". The Times of India. 23 October 2013. Retrieved 19 January 2019.
  5. Ramachandra Guha (2017). "18". India After Gandhi: The History of the World's Largest Democracy. Pan Macmillan. p. 1. ISBN 978-1-5098-8328-8.
  6. Narasimhan & Narayanan 2007, ப. 161.
  7. 7.0 7.1 Kandaswamy 2001, ப. 23.
  8. Kandaswamy 2001, ப. 26.
  9. Nigel Collett (2006). The Butcher of Amritsar: General Reginald Dyer. A&C Black. p. 263. ISBN 978-1-8528-5575-8.
  10. Sanjeev & Nair 1989, ப. 144.
  11. Kandaswamy 2001, ப. 25.
  12. Kandaswamy 2001, ப. 30.
  13. 13.0 13.1 Bhatnagar, R. K. (13 October 2009). "Tributes To Kamaraj". Asian Tribune. Archived from the original on 21 February 2014. Retrieved 3 February 2014.
  14. Sanjeev & Nair 1989, ப. 145.
  15. Sanjeev & Nair 1989, ப. 147.
  16. Kandaswamy 2001, ப. 38.
  17. Kandaswamy 2001, ப. 36.
  18. "பசும்பொன் தேவரும் பெருந்தலைவர் காமராஜரும்". இந்து.
  19. "காமராஜர்: வாழ்வும் அரசியலும்". கிழக்கு பதிப்பகம்.
  20. "George Joseph, a true champion of subaltern". The Hindu. 19 July 2011. Retrieved 26 January 2016.
  21. Kandaswamy 2001, ப. 36-37.
  22. 22.0 22.1 "K Kamaraj 116th birth anniversary: Rare pics of 'Kingmaker'". Deccan Herald. 15 July 2019. Retrieved 22 May 2020.
  23. Kandaswamy 2001, ப. 38-39.
  24. Kandaswamy 2001, ப. 39.
  25. Murthi 2005, ப. 88.
  26. 26.0 26.1 Sanjeev & Nair 1989, ப. 146.
  27. Kandaswamy 2001, ப. 41.
  28. Kandaswamy 2001, ப. 42.
  29. Sanjeev & Nair 1989, ப. 148.
  30. Stepan, Alfred; Linz, Juan J.; Yadav, Yogendra (2011). Crafting State-Nations: India and Other Multinational Democracies. JHU Press. p. 124. ISBN 978-0-8018-9723-8.
  31. Parthasarathi 1982, ப. 15-16.
  32. Kandaswamy 2001, ப. 46-47.
  33. Parthasarathi 1982, ப. 16-17.
  34. Kandaswamy 2001, ப. 49.
  35. Sanjeev Nair, ப. 148.
  36. Volume I, 1951 Indian general election, 1st Lok Sabha (Report). Election Commission of India. Retrieved 1 December 2023.
  37. Parthasarathi 1982, ப. 19.
  38. Sanjeev & Nair 1989, ப. 151.
  39. 39.0 39.1 Parthasarathi 1982, ப. 20.
  40. 40.0 40.1 "Chief Ministers of Tamil Nadu". Tamil Nadu Legislative Assembly. Retrieved 1 January 2024.
  41. 41.0 41.1 Kandaswamy 2001, ப. 57.
  42. Kandaswamy 2001, ப. 60.
  43. Sanjeev & Nair 1989, ப. 152.
  44. Kandaswamy 2001, ப. 62.
  45. Muthiah, S. (2008). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India. Palaniappa Brothers. p. 354. ISBN 978-8-1837-9468-8.
  46. Sanjeev & Nair 1989, ப. 154.
  47. Sinha, Dipa (20 April 2016). Women, Health and Public Services in India: Why are states different?. Routledge. ISBN 978-1-3172-3525-5.
  48. Literacy Differentials in Tamil Nadu: A District Level Analysis (PDF) (Report). 11 July 2020. p. 2. Retrieved 1 December 2023.
  49. State wise literacy rates (PDF) (Report). Government of India. Retrieved 1 December 2023.
  50. "Kamarajar 120th birthday, his services to the education of Tamil Nadu". Asianet News. 15 July 2022. Retrieved 1 December 2023.
  51. 51.0 51.1 "What the modern, developed Tamil Nadu of today owes to K Kamaraj". The Indian Express. 23 April 2024. Retrieved 29 April 2024.
  52. Sanjeev & Nair 1989, ப. 155.
  53. Parthasarathi 1982, ப. 27-28.
  54. Rajmohan Gandhi (2010). Rajaji: A Life. Penguin Books. ISBN 978-9-3858-9033-8.
  55. Awana, Ram Singh (1988). Pressure Politics in Congress Party: A Study of the Congress Forum for Socialist Action. New Delhi: Northern Book Centre. p. 105. ISBN 978-8-1851-1943-4. Retrieved 10 July 2022.
  56. "K Kamaraj". Indian National Congress. Archived from the original on 18 May 2012. Retrieved 1 December 2023.
  57. "K Kamaraj's 120th birth anniversary: Remembering Congress's crisis man, 'kingmaker'". The Indian Express. 16 July 2023. Retrieved 1 December 2023.
  58. Khan, Farhat Basir (16 September 2019). The Game of Votes: Visual Media Politics and Elections in the Digital Era. SAGE Publishing India. p. 76. ISBN 978-9-3532-8693-4.
  59. Parthasarathi 1982, ப. 40-41.
  60. "Why everyone continues to love 'action hero' Kamaraj". The Times of India. 18 July 2009. Retrieved 1 December 2023.
  61. Parthasarathi 1982, ப. 41.
  62. Robert L. Hardgrave, Jr. (1970). "The Congress in India -- Crisis and Split". Asian Survey (University of California Press) 10: 256-262. doi:10.2307/2642578. https://www.jstor.org/stable/2642578. 
  63. "Elections that shaped India:Indira Gandhi's 1971 victory and the Congress shift towards socialism". The Hindu. 3 April 2024. Retrieved 10 April 2024.
  64. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 164.
  65. "Kumaraswami Kamaraj Dead; Power Broker in Indian Politics". The New York Times. 3 October 1975. ISSN 0362-4331. Retrieved 28 April 2020.
  66. "The last days of King Maker Kamaraj". India Herald. Retrieved 1 December 2023.
  67. "CM unveils Kamaraj memorial". The Hindu. 16 July 2019. Retrieved 1 December 2023.
  68. "Kamarajar memorial". Government of Tamil Nadu. Retrieved 1 December 2023.
  69. Sanjeev & Nair 1989, ப. 139.
  70. Narasimhan & Narayanan 2007, ப. 213.
  71. Narasimhan & Narayanan 2007, ப. 216.
  72. "To regain lost glory, Congress needs a Kamaraj as its leader". The Pioneer. 25 July 2019. Retrieved 1 December 2023.
  73. "A true leader". The Hindu. 26 January 2012. Retrieved 1 December 2023.
  74. Chhibber, Maneesh (2 October 2018). "K. Kamaraj: The southern stalwart who gave India two PMs". The Print. Retrieved 11 March 2021.
  75. "Padma Awards Directory (1954–2007)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 4 March 2009. Retrieved 7 December 2010.
  76. "Bharat Ratna Shri K. Kamraj-(2 Coin Set-Rs. 100 & 5)". Indian Government Mint. Retrieved 1 December 2023.
  77. "Man of the people". The Tribune. 4 October 1975. Archived from the original on 6 September 2008.
  78. "Chennai: Airport terminals to be reconstructed". Deccan Chronicle. 20 November 2016. Retrieved 1 December 2023.
  79. "Kamarajar port to become 'Cape' compliant". The Hindu. 3 April 2024. Retrieved 10 April 2024.
  80. "Maraimalai Nagar Kamarajar Railway Station". Indiarailinfo. Retrieved 1 December 2023.
  81. "Kamaraj Road in Bengaluru to open as one-way by mid-May". The New Indian Express. 16 April 2024. Retrieved 29 April 2024.
  82. "Traffic diversion on Kamarajar Salai for R-Day". The Times of India. 22 January 2024. Retrieved 1 February 2024.
  83. "Cycle track plan picks up pace, NDMC awaits nod". The Times of India. 12 April 2023. Retrieved 1 December 2023.
  84. "How Kamaraj Pioneered The Mid-Day Meal Scheme". Madras Courier. 3 October 2023. Retrieved 1 December 2023.
  85. "Film on former CM Kamaraj to be re-released with additional content'". The Times of India. 16 January 2017. Retrieved 24 March 2020.

நூல் பட்டியல்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கு. காமராசர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya