குறளமுதம் என்னும் நூல் கன்னியாகுமரியில்திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதன் சிறப்பு வெளியீடாக 2000ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் சென்னை குறளகத்தில் அமைந்த தமிழ் வளர்ச்சி இயக்ககத்தால் வெளியிடப்பட்டது.
இதன் தொகுப்பாசிரியராக சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தியும் பொதுப்பதிப்பாசிரியராக தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரனும் செயல்பட்டுள்ளனர்.[1]
கட்டுரைத் தொகுப்பு
குறளமுதம் என்னும் நூலுக்கு தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி வாழ்த்துரையும், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மு. தமிழ்க்குடிமகன் அணிந்துரையும் வழங்கியுள்ளனர். இந்த நூல் எழுந்த வரலாறு பற்றி "தொகுப்பாசிரியர் உரை"யில் இ. சுந்தரமூர்த்தி கீழ்வருமாறு கூறுகிறார்:
திருக்குறளுக்கு உரை விளக்கம் தந்த பழைய உரையாசிரியர்களேயன்றி, பிற இலக்கிய இலக்கண உரையாசிரியர்களும், புத்துரையாசிரியர்களும் திருக்குறளைத் தம் விளக்கத்திற்கு விளக்காகப் பயன்படுத்தினர். காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும் திருக்குறளின் கருத்தைப் போற்றின; வளர்த்தன. "சமயந்தொறும் நின்ற தனிநூலாக"த் திருக்குறள் விளங்கியது...மேலைநாட்டு வரவின் பயனாகத் திருக்குறள் ஓலையினின்றும் அச்சுருவிற்குப் பெருமாற்றம் கொள்கின்றது. 1812ஆம் ஆண்டில் முதன்முதல் திருக்குறள் அச்சேற்றப் பெறுகின்றது. தஞ்சை ஞானப்பிரகாசரும், அம்பலவாணத்தம்பிரானும் இந்த முதல்பதிப்பைத் தமிழில் அச்சேற்றி இலக்கிய உலகின் பெருமை பெறுகின்றனர். அச்சுருவம் பெற்ற பின்னர், கடந்த இரு நூற்றாண்டுகளாகத் திருக்குறளுக்கு எழுந்த நூல்கள் பல ஆயிரம், பதிப்புகளாகவும், பல்பொருள் ஆய்வுகளாகவும் நாள்தோறும் இன்றும் தோன்றிக்கொண்டேயுள்ளன. கணினி யுகத்திலும் குறள் குறுந்தகடுகளாக உருப்பெற்றுப் புதிய பொலிவில் கோலம்கொள்கிறது...
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவள்ளுவரின் சிலையை வியந்து பாடிய (1904) திருமணம் செல்வக்கேசவராயரின் எண்ணத்தை எதிரொலிக்கும் வண்ணம் முக்கடல்கள் இணையும் தமிழ் மண்ணில் மனித சிந்தனையின் தூயஉருவமாகத் திகழும் திருவள்ளுவரின் திருவுருவம் கம்பீரமாக எழுந்துநின்று புதிய ஆயிரத்தாமாண்டிற்கு நல்வரவு கூறுகின்றது.
வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும் "குறளமுதம்" ஒரு நூற்றாண்டு காலம் வள்ளுவ ஆய்வுகளைப் பதிவு செய்யும் முயற்சியின் ஒரு முன்னோடி நூல்.
திருக்குறள் குறித்து இந்த நூற்றாண்டின் அறிஞர் பெருமக்கள் பலரும் திருக்குறள் ஆய்விற்குத் தம் பங்களிப்பைச் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான அறிஞர்கள் இத்துறையில் உழைத்துள்ளனர். அனைத்து ஆய்வுமுயற்சிகளையும் பதிவுசெய்ய வேண்டியது இன்றியமையாதது எனினும் காலவரையறைக்குள் ஒருசிலவே இடம்பெற்றுள்ளன. இடம்பெற வேண்டிய கட்டுரைகள் இன்னும் நூற்றுக்கணக்கில் உள. இத்தகைய முயற்சிகள் மேலும் பெருக இந்நூல் துணைநிற்கும்... (பக்கங்கள்: 11-13)
நூறாண்டுகள் ஆய்வின் தொகுப்பு நூல்
குறளமுதம் என்னும் இந்நூல் ஒரு மாபெரும் கட்டுரைத் தொகுப்பு. இதில் அடங்கியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் மறைமலையடிகள் 1902இல் எழுதிய "திருக்குறள் ஆராய்ச்சி" என்னும் கட்டுரையிலிருந்து தொடங்கி, முனைவர் மு. தமிழ்க்குடிமகன் 1999இல் எழுதிய "உன்னைத் திருத்து" என்னும் கட்டுரை வரை, 20ஆம் நூற்றாண்டு திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகளின் ஒரு சிறந்த தொகுப்பாக அமைந்துள்ளது.
ஆய்வுக் கட்டுரைகள் நாற்பது
குறளமுதம் என்னும் நூல் தொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகள் அரிய வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தலைசிறந்த அறிஞர்களால் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளைத் தனியாகக் காண்பது அரிதாக உள்ள நிலையில் இவற்றைத் தொகுப்பாக இந்நூல் கொணர்வது சிறப்பு.
குறளமுதத்தில் அடங்கியுள்ள 40 கட்டுரைகள், அவற்றை எழுதிய அறிஞர்களின் பெயர்கள், கட்டுரைகள் வெளியான ஆண்டு, குறளமுதம் நூலில் கட்டுரைகள் காணப்படும் பக்கம் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய பட்டியல் கீழே தரப்படுகிறது.