மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (மலாய்: Kementerian Pembangunan Wanita, Keluarga dan Masyarakat Malaysia; ஆங்கிலம்: Ministry of Women, Family and Community Development Malaysia) என்பது மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள்; குழந்தைகள் சமூக நலன்கள்; முதியோர் நலன்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
பாலினச் சமனிலை, குடும்ப மேம்பாடு மற்றும் அக்கறையுள்ள சமுதாயம் ஆகிய இலக்குகளை அடையும் நோக்கத்தில் இந்த அமைச்சு செயல்படுகின்றது. ஐக்கிய நாடுகளின்பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை (United Nations' Convention on the Elimination of All Forms of Discrimination Against Women); மற்றும் பெய்ஜிங் பிரகடனம் (Beijing Declaration) ஆகியவற்றுக்கும் இந்த அமைச்சு முன்னுரிமை வழங்குகிறது.
பொறுப்பு துறைகள்
சமூக நலன் (Social Welfare)
குழந்தைகள் (Children)
பெண்கள் (Women)
குடும்பம் (Family)
சமூகம் (Community)
வயது முதிர்ந்தோர் (Older People)
ஆதரவற்றவர்கள் (Destitute)
வீடு இல்லாதவர்கள் (Homeless)
பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் (Disaster Victims)
ஊறு குறைந்தவர்கள் (Disabled)
பின்னணி
பெண்களுக்கான நான்காவது உலக மாநாடு (Fourth World Conference on Women) 1995-ஆம் ஆண்டில் பெய்ஜிங், சீனாவில் (People's Republic of China) ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மாநாட்டிற்கு ஐக்கிய நாடுகள் அவை ஏற்பாடு செய்தது.[3][4]
உலகளாவிய நிலையில் பெண்களின் தகுதியை, உலக நாடுகளில் அமைச்சரவை அளவில் உயர்த்த வேண்டும் (Status of Women as a Cabinet Level Body) என்பது ஐக்கிய நாடுகள் அவையின் விருப்பமாகும். அந்த வகையில் மலேசியாவிலும் ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டது. அப்போது அந்த அமைச்சு மலேசியப் பிரதமரின் அமைச்சகத்தில் ஒரு துறையாக இருந்தது.[5][6]
மகளிர் விவகார அமைச்சு
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (Ministry of Women, Family and Community Development) (KPWKM); 17 சனவரி 2001-இல் மகளிர் விவகார அமைச்சு (Ministry of Women's Affairs) எனும் பெயரில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. சரிசாத் அப்துல் சலீல் (Shahrizat Abdul Jalil) என்பவர் அமைச்சராகப் பதவி ஏற்றார். பெண்களின் வளர்ச்சியில் மட்டுமே அந்த அமைச்சு கவனம் செலுத்தியது.
15 பிப்ரவரி 2001 அன்று அமைச்சின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது. குடும்ப மேம்பாட்டுத் துறை எனும் புதிய துறை சேர்க்கப்பட்டது; மேலும் அமைச்சகத்தின் பெயர் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு (Ministry of Women and Family Development) என்றும் மாற்றப்பட்டது.
வான் அசிசா வான் இசுமாயில்
2004-ஆம் ஆண்டில், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. சமூக நலன் எனும் புதிய திணைக்களம் சேர்க்கப்பட்டது. இந்த அமைச்சின் தற்போதைய பெயரான மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (Ministry of Women, Family and Community Development Malaysia) எனும் பெயர் 27 மார்ச் 2004-இல் வைக்கப்பட்டது.[7]
மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள்; குழந்தைகள் சமூக நலன்கள்; முதியோர் நலன்கள் ஆகியவை தொடர்பான சேவைகள்; நிறுவனங்கள்; துறைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த அமைச்சிடம் உள்ளது.[12]
பிற அமைச்சுகள் அல்லது நிறுவனங்களால் செயல்படுத்தப் படுகிறது.
முயற்சிகள்
உத்திகள்
பாலினம், குடும்பம் மற்றும் சமூகங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல்; செயல்படுத்துதல்;
அரசு நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மக்களிடையே நேர்மறையான குடும்ப விழுமியங்களை ஏற்படுத்துதல்;
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மறுபரிசீலனை செய்தல்; மற்றும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மேம்பாட்டிற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடிய புதிய சட்டங்களைப் பரிந்துரைத்தல்;
பாலினம், மக்கள் தொகை, குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு பற்றிய ஆய்வு; மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்வது; திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதில் புதுமையான அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துதல்;
இலக்குத் திட்டங்களைத் திட்டமிடுதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்; ஒருங்கிணைந்த சமூக தரவுத் தளத்தை உருவாக்கி வலுப்படுத்துதல்;
திறன் மற்றும் அறிவின் அளவை அதிகரிப்பது; இலக்குக் குழுக்களுக்கு அதிகாரம் அளிப்பது; அவர்களின் பங்கேற்பதைச் செயல்படுத்துதல்;
இலக்கு குழுக்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்தல்; பன்முகப்படுத்தல்;
தகவல், அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பகிர்வதற்கு வசதியாக தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தொடர்புகளை வலுப்படுத்துதல்;
கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை மேம்படுத்துவதற்கு பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பொறிமுறையை நிறுவுதல்;
பெண்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அதிகரித்தல்;
பெண்கள், குடும்பம் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களைப் பரப்புதல்.