சாய் பல்லவி (Sai Pallavi) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[4] இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் பிறந்தார். இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது.[5][6][7]
தொடக்க கால வாழ்க்கை
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில்[8]படுகர் குடும்பம் ஒன்றில் செந்தாமரை கண்ணன் மற்றும் ராதா கண்ணன் ஆகியோருக்கு மகளாக சாய் பல்லவி பிறந்தார். இவருடைய தங்கை பூஜா கண்ணனும் ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி ஆகும்.[9] சாய் பல்லவி வளர்ந்தது, கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூர் ஆகும்.கோயம்புத்தூர் இல் உள்ள அவிலா பெண்கள் கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். சியார்சியாவில்திபிலீசி அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் படிப்பை 2016 ல் முடித்தும் இந்தியாவில் மருத்துவராகப் பயிற்சி செய்ய இவர் பதிவு செய்யவில்லை. பின்னர் 31 ஆகத்து 2020 அன்று தன்னுடைய வெளிநாட்டு மருத்துவத் தேர்வை திருச்சியில் எழுதினார். இவருடைய தாய்மொழி படுக மொழி ஆகும், அதனைத் தவிர்த்து [தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சியார்சிய மொழி ஆகியவற்றில் புலமை பெற்று விளங்குகிறார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் பிரபலமடையத் தொடங்கிய பின்னர் தெலுங்கு மொழியிலும் நன்கு பேச கற்றுக்கொண்டார்
வாழ்க்கைப் பணி
சாய் பல்லவி ஒரு நேர்காணலில், தான் பயிற்சி பெற்ற நடனக் கலைஞராக இல்லாவிட்டாலும், நடனம் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்றை செய்ய விரும்புவதாக கூறினார் , இவர் தனது பள்ளி கல்லூரி காலங்களில் பல நடனப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார், நடனத்தின் மீது இவருக்கு இருந்த ஈர்ப்பால் தன் தாயின் ஆதரவோடு,இவர் 2008 ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்நேர நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார். 2009 இல் தெலுங்கு தொலைக்காட்சியான இடிவியில் தி அல்டிமேட் டான்ஸ் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
திரைப்பட வாழ்க்கை
தொடக்கத்தில் சாய் பல்லவி ,2005இல் நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் மற்றும் 2008ல் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த தாம் தூம் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்,[10][11] மற்றும் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் சியார்சியாவிலுள்ள திபிலீசியில் சாய் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது மலையாளஇயக்குநர் அல்போன்சு புத்திரன், 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தன்னுடைய பிரேமம் மலையாளப் படத்தில் மலர் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். [[மலையாளம்|மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து இருந்தார். கல்லூரியின் விடுமுறை நாட்களில் மட்டும் சாய் பல்லவி படத்தில் நடித்துக் கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் சாய் பல்லவி மீண்டும் கல்லூரிக்குத் திரும்பிவிடுவார்.[12][13] அந்த ஆண்டில் சாய் பல்லவி பிலிம்பேரின் சிறந்த அறிமுக பெண் நடிகை உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.
2015 ஆம் ஆண்டில் சாய் பல்லவி தன்னுடைய இரண்டாவது திரைப்படமான கலியில் நடித்தார். இப்படம் 2016 இல் வெளியிடப்பட்டது.[14][15][16].
ஒரு கணவனின் பொல்லாத கோபத்திற்கு ஆளாகும் அஞ்சலி என்ற இளம் மனைவியாக சாய் இப்படத்தில் நடித்தார், மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதிற்காக இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.[17][18].
2017 ஆம் ஆண்டு தெலுங்கில் சேகர் கம்முலாவின் பிடே என்ற திரைப்படத்தில் தெலுங்காணாவிலிருந்து வரும் பானுமதி என்ற சுதந்திரமான கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.[19][20][21].
இயக்குநர் ஏ.எல். விசயின் கரு என்ற திரைப்படம் இவருக்கு அடுத்த படமாக அமைந்தது.[22] தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
↑James, Anu. "365 days of 'Premam': Why is Nivin Pauly-starrer so special even after one year of release?" (in en). International Business Times, India Edition.