ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன் (பிறப்பு: 15 செப்டம்பர் 1970) என்பவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்து பிரபலமானவர்.[1] இவர் நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் மற்றும் தமிழக அரசு திரைப்பட விருது சிறப்புப் பரிசு பெற்றுள்ளார். வாழ்க்கை வரலாறுரம்யா கிருஷ்ணன் 1970 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், நகைச்சுவை நடிகரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சோ ராமசாமியின் மருமகள் ஆவார்.[2] பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி பயிற்சி எடுத்து, பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[3] தனிப்பட்ட வாழ்க்கைஇவர் 12 ஜூன் 2003 அன்று தெலுங்குத் திரைப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துகொண்டார்.[4] இந்த இணையருக்கு ஒரு மகன் உண்டு.[5] திரைப் பயணம்இவர் தனது 14 வயதில் திரைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார். நெரம் புலரும்போல் என்ற மலையாளப் படத்தின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார். அவர் நடித்த முதல் திரைப்படம் இதுவாக இருந்தாலும், 1986 இல் இது தாமதமாக வெளியிடப்பட்டது. அதனால் 1985 இல், ஒய். ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த வெள்ளை மனசு இவரின் முதல் படமாக வெளியானது. அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். மேலும் முதல் தெலுங்கு படம் 'பாலே மித்ருலு' 1986 இல் வெளியானது. பின்னர் இவர் இரசினிகாந்து நடித்த படிக்காதவன் (1985) மற்றும் கமல்ஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை (1987) போன்ற தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் (1991), அம்மன் (1995), படையப்பா (1999), நாகேஸ்வரி (2001), பஞ்சதந்திரம் (2002), ஜூலி கணபதி (2002), பாறை (2003) போன்ற பல திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகை ஆனார். இவர் கமல்ஹாசன், இரசினிகாந்து, சரத்குமார், பிரபு, அமிதாப் பச்சன், அக்கினேனி நாகார்ஜுனா, ஜெகபதி பாபு, சிரஞ்சீவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டில், இராஜமௌலியின் பாகுபலி மற்றும் அதன் தொடர்ச்சியான பாகுபலி 2 போன்ற படங்களில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்தார்.[6] இவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் திரைப்படங்கள் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களாக அமைந்தன. அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச நடிகையாக நடித்தார். இவர் 2023 ஆம் ஆண்டு, வெளியான ஜெயிலர் என்ற திரைப்படத்தில் இரசினிகாந்துக்கு ஜோடியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடித்துள்ளார். இந்தப் படம் அதிக வசூல் ஈட்டிய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலில் 3-ஆவது இடத்தைப் பிடித்தது. தொலைக்காட்சித் துறைஇவர் 2005 ஆம் ஆண்டுகளில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஜோடி நம்பர் ஒன்' என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக தோன்றினார். அதை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் 'தங்க வேட்டை' என்ற விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலசம்' என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். இந்தத் தொடரில் இரட்டை வேடங்களில் நடித்தார். அதில் ஒன்று படையப்பா படத்தில் நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தை மீண்டும் என்று நடித்தார். அதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சன் தொலைக்காட்சியில் தங்கம் (2009-2013), ராஜகுமாரி (2013) மற்றும் வம்சம் (2013-2017) ஆகிய தொடர்களில் நடித்தார். இவர் 2019 இல் குயின் என்ற வலைத் தொடரில் அறிமுகமானார்.[7] இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அனிதா சிவகுமாரன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia