அபிய் அகமது அலி (Abiy Ahmed Ali; பிறப்பு: 15 ஆகத்து 1976) எத்தியோப்பிய அரசியலாளர். இவர் எத்தியோபியாவின் 15-வது தலைமை அமைச்சராக 2018 ஏப்ரல் 2 முதல் பதவியில் உள்ளார்.[2][3] 20-ஆண்டுகால எரித்திரிய-எத்தியோப்பியப் பிணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக 2019 அக்டோபர் 11 இல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பெற்றது.[4]
ஆளும் மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி கட்சி,[5] ஒரோமோ சனநாயகக் கட்சி[6] ஆகியவற்றின் தலைவராக அபிய் அகமது இருந்து வருகிறார். முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியான அபிய் அகமது, எத்தியோப்பியத் தலைமையமைச்சர் ஆனது முதல், அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களுக்கான ஒரு பரந்த திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.[7]
அக்டோபர் 2021 இல், அபி 5 அகமது இரண்டாவது முறையாக 5 ஆண்டு காலத்திற்கு அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
வாழ்க்கை வரலாறு
இளமை
அபிய் அகமது எத்தியோப்பியாவில், காப்பியின் தோற்றத்துக்குப் புகழ்பெற்ற, தென்மேற்கேயுள்ள காஃபா மாநிலத்தில் உள்ள பேசாசா என்னும் ஊரில் 1976 ஆகத்து 15 ஆம் நாளன்று பிறந்தார்.[8][9][10] இவருடைய தந்தையார் அகமது அலி ஓர் ஓரோமோ இனத்தைச் சார்ந்த இசுலாமியர்.[11] அம்ஃகாரா இனத்தைச் சேர்ந்த[12][13] எத்தியோப்பிய மரபு கிறித்துவரான[14] இவருடைய மறைந்த தாய் தெசெட்டா வோல்டே,[15] இவரது தந்தையின் நான்காவது மனைவி ஆவார்.[16])
அபிய் அகமது அவருடைய தாய்க்கு ஆறாவதும் கடைசியுமான மகன். இவரின் தந்தையாருக்கு இவர் 13 ஆவது மகவு.[8][12] இவருடைய இளமைக்கால பெயர் அபியோத்து தமிழில்: "புரட்சி"). 1974 இல் நடந்த எத்தியோப்பியப் புரட்சிக்குப் பிறகு இப்படியான பெயர்கள் கொள்வது வழக்கமாக இருந்தது.[8] அப்பொழுது அபியோத்து என்றறியப்பட்ட அபிய் அகமது உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்தார். பின்னர் உயர்நிலை பள்ளிப்படிப்பை அகரோ நகரத்தில் தொடர்ந்தார். பல ஆவணங்களின் படி இவர் கல்வியில் மிகுந்த ஆரவம் கொண்டிருந்தார். பிறருக்கும் கல்வியில் அக்கறை கொள்ளச்செய்தார்.[8]
அகவாழ்க்கை
அபிய் அகமது தன் வருங்கால மனைவி இசீனாசு தயாச்சேவ் என்னும் அம்ஃகாரா இனத்துப் பெண்மணியை[8][12] எத்தியோப்பிய பாதுகாப்புத் துறையில் இருந்தபொழுது[17] சந்தித்தார். இசீனாசு தயாச்சேவ் கோந்தார் என்னும் மாவட்டத்தில் இருந்து வருபவர். இவர்களுக்கு மூன்று மகள்களும், தத்து எடுத்துக்கொண்ட ஒரு மகனும் உள்ளனர்.[17] அபிய் அகமது பன்மொழி பேசுபவர். இவருக்கு அஃபான் ஒரோமோ, அம்ஃகாரி, திகிரினியா, ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசத்தெரியும்.[18] இவர் உடலைத் தக்கநிலையில் வைத்திருக்கும் நற்பழக்கமும் ஆர்வமும் கொண்டவர். உடல்நலத்தோடு உளநலமும் முக்கியம் என எடுத்துரைப்பவர்.[17] இவர் பெந்தகோசுட்டு கிறித்துவ ஆர்வலர்.[19]
மேற்கோள்கள்
↑"First Lady". FDRE Office of the Prime Minister. Archived from the original on 2019-08-31. Retrieved 2019-10-11.
↑"Prime Minister". The Federal Democratic Republic of Ethiopia’s Office of the Prime Minister. Archived from the original on 20 ஏப்ரல் 2019. Retrieved 6 June 2019.