குவான் மானுவல் சந்தோசு
குவான் மானுவேல் சந்தோசு கால்தெரோன் (Juan Manuel Santos Calderón, பிறப்பு: ஆகத்து 10 1951) கொலொம்பியாவின் அரசுத்தலைவரும், 2016 ஆம் ஆண்டின் 2016 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். பொருளியலாளரும், ஊடகவியலாளருமான சந்தோசு, மிகவும் செல்வாக்கும் செல்வச் செழிப்பும் கொண்ட சந்தோசு குடும்பத்தில் பிறந்தவர். கேன்சசு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட இவர் கொலொம்பியாவின் காப்பி தயாரிப்பாளர்களின் தேசிய அமைப்பில் பொருளாதார ஆலோசகராகப் பணியில் சேர்ந்தார். மேற்கல்விக்காக இலண்டன் பொருளியல் பள்ளியில் பயின்று, "எல் டெம்போ" நிறுவனத்தின் பணிப்பாளராக சேர்ந்தார். 1991 இல் கொலம்பியாவின் வெளியுறவு வணிக அமைச்சராக அன்றைய அரசுத்தலைவர் சேசர் துருகிலியோவினால் நியமிக்கப்பட்டார். 2000 ஆம் ஆன்டில் நிதி அமைச்சரானார்.[1] அரசுத்தலைவர் ஆல்வரோ உரிபே வேலசின் ஆட்சிக் காலத்தில் இவர் அரசியலில் பிரபலமானார். 2005 ஆம் ஆண்டில் தேசிய ஐக்கியத்துக்கான சமூகக் கட்சியை ஆரம்பித்து, உரிபேயின் ஆட்சிக்கு ஆதரவளித்தார். 2006 ஆம் ஆண்டில் உரிபே மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சந்தோசின் சமூகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றது. சந்தோசு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். உரிபேயின் பாதுகாப்புக் கொள்கைகளில் சந்தோசு உறுதுணையாக இருந்ததுடன், எப்பார்க், உட்பட கொலம்பியாவில் இயங்கும் அனைத்து கெரில்லா இயக்கங்களுக்கு எதிராகவும் கடும் போக்கைக் கொண்டிருந்தார். 2010 சூன் 20 இல், இரண்டு கட்ட வாக்கெடுப்பின் பின்னர், சந்தோசு கொலம்பியாவின் 32வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] குவான் சந்தோசு கொலம்பியாவின் கெரில்லா இயக்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட அமைதி உடன்பாடு[3] அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் தோல்வியடைந்திருந்தாலும்,[4] அக்டோபர் 7 இல் இவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia