எச். வசந்தகுமார்
எச். வசந்தகுமார் (H. Vasanthakumar, 14 ஏப்ரல் 1950 - 28 ஆகத்து 2020) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் வீட்டு உபயோகப் பொருள் அங்காடியான வசந்த் அன் கோவின் நிறுவனத் தலைவராகவும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியான வசந்த் தொலைக்காட்சியின் நிறுவனத் தலைவராகவும் இருந்தார்.[1] இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இளமைக் காலம்வசந்தகுமார், கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீசுவரம் என்னும் ஊரில் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் ஹரிகிருஷ்ணன், தங்கம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கத்தில், வீ. ஜி. பி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணியாற்றினார். மிகச் சிறிய முதலீட்டில் ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி, வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.[2] இந்நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு, வசந்த் தொலைக்காட்சியைத் தொடங்கினார். அரசியல் வாழ்க்கைவசந்தகுமார், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முதன்மையான தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[3] இறப்புவசந்தகுமார், கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகத்து 28, 2020 அன்று மாலை ஏழு மணி அளவில் வசந்தகுமார் இறந்தார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia