ஐன்சுடைனியம்
ஐன்ஸ்டைனியம் (Einsteinium) என்பது (குறியீடு: Es) அணு எண் 99 ஐக் கொண்ட ஒரு செயற்கைத் தனிமம். ஆக்டினைடு வரிசையில் யுரேனியப் பின் தனிமங்களில் இத்தனிமம் ஏழாவதாகும். ஐன்ஸ்டைனியம் ஒரு மிருதுவான, வெள்ளிபோன்ற, இணைகாந்த உலோகமாகும். ஐன்ஸ்டைனியம் 1952 ஆம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஐதரசன் குண்டு வெடிப்புச்[1] சிதைவுக் கூளங்களிலிருந்துக் கண்டறியப்பட்டத் தனிமமாகும். இத்தனிமம், உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பெயரினால் ஐன்ஸ்டைனியம் என்று அழைக்கப்படுகிறது. இதன் சாதாரணமாகக் காணப்படும் ஐசோடோப்பு ஐன்ஸ்டைனியம்-253 (அரைவாழ்வுக் காலம் 20.47 நாட்கள்[2]) சில அர்ப்பணிக்கப்பட்ட உயராற்றல் அணுவுலைகளில் கலிபோர்னியம்-253 சிதைவுகளிலிருந்து செயற்கை முறையில் (மொத்த உற்பத்தி ஓராண்டிற்கு ஒரு மில்லிகிராம் வீதம்) தயாரிக்கப்படுகிறது. இவ்விதம் அணுவுலைகளில் தயாரிக்கப்பட்ட ஐன்ஸ்டைனியம்-253 மற்ற சிதைவுகள், ஆக்டினைடுகளிலிருந்துச் சிக்கலான வழிமுறைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது. பல்வேறு ஆய்வகங்களில், ஐன்ஸ்டைனியத்தின் பிற ஐசோடோப்புகள் கனத்த ஆக்டினைடு தனிமங்களை இலகுவான அயனிகளைக் கொண்டுத் தாக்கிக் குறைந்த அளவுகளில் உருவாக்கப்படுகின்றன. ஐன்ஸ்டைனியம் குறைந்த அளவுகளில் தயாரிக்கப்படுவதாலும், மிகச் சுலபமாகத் தயாரிக்கப்படும் இதன் ஐசோடோப்பின் அரைவாழ்வு காலம் குறைவாக இருப்பதாலும் இத்தனிமம் தற்பொழுது நடைமுறைப் பயன்பாடுகளில் இல்லை. என்றாலும், அடிப்படை அறிவியல் ஆய்வுகளில் ஐன்ஸ்டைனியம் உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 1955 ஆம் ஆண்டு முதன்முதலில் புதிய தனிமமான மெண்டலீவியத்தின் 17 அணுக்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டது[3]. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia