டென்னிஸ் கபார்
டென்னிஸ் கபார் (ஆங்கிலம், Dennis Gabor (/ˈɡɑːbɔr, ɡəˈbɔr/;[1] அங்கேரி: Gábor Dénes; 5 சூன் 1900 – 8 பெப்ரவரி 1979) என்பவர் ஒரு அங்கேரிய-பிரித்தானியர்[2] மின் பொறியாளர், இயற்பியலாளர். ஹோலோகிராபி தொழில்நுட்பத்தைக் கண்டறிந்ததற்காக 1971 ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.[3] வாழ்க்கைஇவர் அங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் யூத குடும்பத்தில் பிறந்தார். 1918இல் இவர் குடும்பம் லூதரனிய கிருத்துவத்துக்கு மதம் மாறியது.[4] இவர் பெற்றோருக்கு இவர்தான் முதல் மகனாவார். இறை நம்பிக்கையோடு வளர்ந்தவர், பிற்காலத்தில் தன்னை நாத்திகவாதி என்று கூறிக் கொண்டார்.[5] முதல் உலகப் போரின்போது, வட இத்தாலியில் அங்கேரி நாட்டு பீரங்கிப் படையில் பணிபுரிந்தார்.[6] 1918இல் இருந்து புடாபெஸ்ட் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும், பெர்லினில் உள்ள சார்லோட்டன்பர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார்.[7] படிப்புக்குப் பின் இவரது பணிகளைத் துவக்கினார். கேதோடு கதிர் ஆஸிலோகிராப்பை பயன்படுத்தி உயர் மின்னழுத்தக் கம்பிகளின் பண்புகளை ஆராய்ந்தார். இதன்மூலம், எலக்ட்ரான் ஒளியியலில் அவரது ஆர்வம் திரும்பியது. ஆஸிலோகிராப், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப், டிவி கதிர் டியூப்கள் ஆகியவை பற்றியும் தீவிரமாக ஆராய்ந்தார்.1927-ல் முனைவர் பட்டம் பெற்றார். நாசி ஜெர்மனியில் இருப்பது ஆபத்து என்று, அங்கிருந்து வெளியேறினார். பிரித்தானிய தாம்சன் ஹூஸ்டன் நிறுவனத்தின் வளர்ச்சித் துறையில் பணியாற்றுமாறு வந்த அழைப்பை ஏற்று 1933-ல் இங்கிலாந்து சென்றார். பின் இங்கிலாந்து பெண்ணான மர்ஜோரியை 1936-ல் திருமணம் செய்துகொண்டு 1946-ல் பிரித்தானியக் குடியுரிமை பெற்றார்.[8] முப்பரிமாண ஒளிப்படவியலை (Holographic Photography) 1947-ல் கண்டறிந்தார்.[9] ஆனால், 1960-ல் லேசர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் இது வெளியிடப்பட்டு, வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு வந்தது. ஹோலோகிராபி என்பது ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை அதன் வெவ்வேறு தோற்ற வகைகளில் பதிவு செய்து, அப்பொருளின் அசைவுகளை முப்பரிமாண (3D) தோற்றத்தில் காட்டும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் பல புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டது. 1946இல் இருந்து 1951 வரையான காலகட்டத்தில் இவர் தன் ஆராய்ச்சி முடிவுகளை ‘ரீ-ஹோலோகிராபி’ என்ற பெயரில் தொடர்ச்சியாக பல ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டார். 1948இ்ல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். இவர் 1963இல் ‘இன்வென்டிங் தி ஃப்யூச்சர்’ என்ற நூலை வெளியிட்டார். லேசர்கள் குறித்த ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைந்ததால், ஹோலோகிராபிக் முப்பரிமாண ஒட்டிகள் தயாரிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்தன. ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக 1971இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia