ஆந்திரியா மியா கியேசு (Andrea Mia Ghez, பிறப்பு: சூன் 16, 1965) அமெரிக்க வானியலாளரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியரும் ஆவார். பால்வழி அண்டத்தின் மையம் பற்றிய ஆய்வுகளுக்காக இவர் அறியப்படுகிறார்.[2] இவர் 2004 இல் அமெரிக்காவில் தம் புலங்களில் நல்ல புரிதல் வாய்ந்த தலைசிறந்த 20 அறிவியலாளர்களில் ஒருவராக டிசுகவர் இதழால் அறிவிக்கப்பட்டார்.[2] 2020 இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[3] இப்பரிசின் அரைப்பங்கு இரைனாடு கென்செல்லுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மற்றைய அரைப்பங்கு உரோசர் பென்ரோசுக்கு வழங்கப்பட்டது. இயற்பியல் நோபல் பரிசினைப் பெறும் நான்காவது பெண் இவராவார். நம் பால்வழியின் விண்மீன் பேரடையின் நடுவே கருந்துளை எனப் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மீப்பெரும் இறுக்கமான பொருளைக் கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4][5]
இளமை
சிகாகோவில் பிறந்து வளர்ந்த ஆந்திரியா கியேசு, முதலில் பாலே நடனக்காரியாக விரும்பினார். அப்பொல்லோ திட்டத்தில் நிலாவில் மாந்தர் இறங்கிய காட்சி, இவருக்குத் தான் முதல் விண்வெளி வீராங்கனையாகத் திகழவேண்டும் எனும் ஆசையைத் தூண்டிவிட்டுள்ளது. இவரது தாயும் இந்த இலக்கை விரும்பி ஆதரவு தந்துள்ளார். இவரது முற்காட்டு பெண்மணியாக இவரது பள்ளி வேதியியல் ஆசிரியை விளங்கியுள்ளார்.[6] இவர் கல்லூரியில் முதலில் கணிதம் பயிலத் தொடங்கினாலும் பின்னர் இயற்பியலுக்கு மாறியுள்ளார்.[7] இவர் இயற்பியலில் இளமறிவியல் பட்டத்தை 1987 இல் மசாசூசட் தொழில்நுட்பக் கழகத்திலும் முனைவர் பட்டத்தை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் 1992 இல் ஜெரி நியூகேபாவுவேர் கீழும் பெற்றுள்ளார்.[8]
வாழ்க்கைப்பணி
சொந்த வாழ்க்கை
ஆந்திரியா கியேசு புவியியலாளரும் இரேண்டு குழுமத்தில் ஆய்வாளருமான தாம்-லா தவுரெத்தியை மணந்துகொண்டார். இவர் களுக்கு இரு ஆண்மகவுகள் உண்டு. எவான் 2001 இலும் மைல்சு 2005 இலும் பிறந்தனர்.[9] நீச்சலில் ஆர்வம் கவிந்த இவர் Masters Swim Club இல் உள்ளார். இவர் இடையிடையே அறிவியல் பணிக்கு விடுப்பு கொடுத்து நீச்சலில் கலந்துகொள்கிறார்.[10]