மக்னீசியம் ஆக்சைடு (Magnesium oxide) அல்லது மக்னீசியா என்பது ஒரு வெண்மை நிற நீர் உறிஞ்சும் திறன் உடைய திடக் கனிமம் ஆகும். இது இயற்கையில் பெரிக்லேசாக கிடைக்கக் கூடிய மக்னீசியத்தின் மூலமாகும். இது MgO என்ற விகித வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளது. இக்கனிமத்தில் Mg2+ மற்றும் O2− அயனிகளின் அயனிப் பிணைப்பால் ஏற்பட்ட படிகக்கூட்டைக் கொண்டுள்ளது. நீரின் முன்னிலையில் மக்னீசியம் ஐதராக்சைடை உருவாக்குகிறது. (MgO + H2O → Mg (OH)2 ) ஆனால், வெப்பப்படுத்துவதன் மூலம் அதன் ஈரப்பதத்தை வெளியேற்றி மீண்டும் மக்னீசியம் ஆக்சைடைப் பெறலாம்.
மக்னீசியம் ஆக்சைடு வரலாற்றுரீதியாக மக்னீசியா ஆல்பா என அழைக்கப்பட்டது. இது மொழியியல்ரீதியாக மக்னீசியா நீக்ரா என்றழைக்கப்பட்ட கருப்பு நிற மாங்கனீசு கனிமத்திலிருந்து வேறுபடுத்தும் பொருட்டு இது இவ்வாறு அழைக்கப்பட்டது.
"மக்னீசியம் ஆக்சைடு" பொதுவாக MgO ஐக் குறிக்கும் அதே வேளையில், மெக்னீசியம் பெராக்சைடு MgO2 என்ற ஒரு சேர்மமும் கிடைக்கப் பெறுகிறது. பரிணாம படிக கட்டமைப்பு கணிப்பின் படி, [11] 116 கிகாபாஸ்கல்களுக்கு மேலான அழுத்தங்களில் MgO2 வெப்ப இயக்கவியல் ரீதியாக நிலையானதாக உள்ளது. மேலும் ஒரு குறைக்கடத்தியான சபாக்சைடு Mg3O2 ஆனது 500 கிகாபாஸ்கல்களுக்கு மேலான அழுத்தத்தில் வெப்ப இயக்கவியல்ரீதியாக நிலையானதாக உள்ளது. அதன் நிலைத்தன்மையின் காரணமாக, MgO படிகங்களின் அதிர்வு பண்புகளை ஆராய ஒரு மாதிரி அமைப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. [12]
உற்பத்தி
மக்னீசியம் ஆக்சைடு மக்னீசியம் கார்பனேட்டு அல்லது மக்னீசியம் ஐதராக்சைடை வறுத்தலின் மூலம் தயாரிக்கப்படுகிறது. பிந்தையது (மக்னீசியம் ஐதராக்சைடானது) மக்னீசியம் குளோரைடு கரைசலை, பொதுவாக கடல் நீர், சுண்ணாம்புடன் வினைப்படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது.
Mg 2+ + Ca (OH) 2 → Mg (OH) 2 + Ca 2+
வெவ்வேறு வெப்பநிலையில் வறுப்பது அல்லது நீற்றுவது வெவ்வேறு வினைத்திறன் உடைய மக்னீசியம் ஆக்சைடை உருவாக்குகிறது.
1500 – 2000 °செல்சியசு உயர் வெப்பநிலையில் வினைக்கு கிடைக்கக்கூடிய பரப்பானது குறைந்து நன்கு எரிக்கப்பட்ட, மீ வெப்பம் தாங்கக்கூடிய மக்னீசியா கிடைக்கிறது. 1000 – 1500 °செல்சியசு உயர் வெப்பநிலையில் கடினமான-எரிக்கப்பட்ட, குறைவான அளவு வினைத்திறன் கொண்ட மக்னீசியா உருவாகிறது. 700–1000 °செல்சியசு அளவிலான குறைவான வெப்பநிலையில் வறுக்கும் போது அல்லது நீற்றும் போது வினைத்திறன் கொண்ட இலேசாக எரிக்கப்பட்ட மக்னீசியா, இது எரிகார வறுக்கப்பட்ட மக்னீசியா என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும், 700 ° செல்சியசிற்கும் வெப்பநிலைக்கும் கீழான வெப்பநிலையில் சிறிதளவு கார்பனேட்டானது ஆக்சைடாக சிதைகிறது.இவ்வாறு கிடைக்கும் விளைபொருட்கள் காற்றிலிருந்து மீண்டும் கார்பனீராக்சைடை உறிஞ்சிக் கொள்வதுண்டு.[13]
↑Mei, AB; O. Hellman; C. M. Schlepütz; A. Rockett; T.-C. Chiang; L. Hultman; I. Petrov; J. E. Greene (2015). "Reflection Thermal Diffuse X-Ray Scattering for Quantitative Determination of Phonon Dispersion Relations.". Physical Review B92 (17): 174301. doi:10.1103/physrevb.92.174301. Bibcode: 2015PhRvB..92q4301M.
↑Ropp, R C (2013-03-06). Encyclopedia of the alkaline earth compounds. Elsevier. p. 109. ISBN9780444595508.