ஒமாகா கடற்கரை
ஒமாஃகா கடற்கரை (ஒமாஹா கடற்கரை; Omaha Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். (ஒமாஃகா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான் நெப்ராஸ்காவிலுள்ள நகரம்).[1][2][3] நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். 8 கி.மீ. நீளமுள்ள ஒமாகா கடற்கரை யூட்டா மற்றும் கோல்ட் கடற்கரைகளுக்கு இடையில் அமைந்திருந்தது. சென்-ஹொனோர்-டெ-பெர்டே கம்யூனிலிருந்து டூவ் ஆற்றின் முகத்துவாரத்தின் வடகரையிலுள்ள வியர்வில் கம்யூன் வரையான கடற்கரை ஒமாகா என்று பெயரிடப்பட்டிருந்தது. ஒமாகா கடற்கரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன் மேற்குப் பகுதியைக் கைப்பற்றும் பொறுப்பு அமெரிக்க 29வது காலாட்படை டிவிசன் மற்றும் அமெரிக்கத் தரைப்படை ரேஞ்சர் படைப்பிரிவின் ஒன்பது கம்பனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிழக்குப் பகுதியினைக் கைப்பற்றும் பொறுப்பு 1வது அமெரிக்கக் காலாட்படை டிவிசனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றுள் 29வது டிவிசன் போர் அனுபவமற்ற படைப்பிரிவு, 1வது டிவிசன் அனுபவம் வாய்ந்தது. இவர்களை எதிர்க்க ஜெர்மானிய 352வது காலாட்படை டிவிசன் ஒமாகா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. கிழக்குப் போர்முனையிலிருந்து நார்மாண்டிக்கு மாற்றப்பட்டிருந்த இப்படைப்பிரிவில் ஒரு பகுதியினர் மட்டுமே போர் அனுபவம் உடையவர்கள். ஜூன் 6ம் தேதி காலையில் அலை அலையாகத் தரையிறங்கி ஜெர்மானிய அரண்நிலைகளை அழிப்பது, அதன்பின்னர் எட்டு கி.மீ. நீளமுள்ள ஒரு பாலமுகப்பை ஏற்படுத்தி யூட்டா கடற்கரைப் படைப்பிரிவுகளுடன் கைகோர்ப்பது ஒமாகா படைப்பிரிவுகளின் முதல் இலக்கு. அமெரிக்கப் படைகளைத் தரையிறங்க விடாமல் கடலும் கரையும் இணையும் நீர்க்கோட்டில் (waterline) வைத்தே அவர்களை அழிப்பது ஜெர்மானியத் திட்டம். படையெடுப்புக்கு முன் ஜெர்மானிய அரண் நிலைகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட நேசநாட்டு வான்வழி குண்டுவீச்சு, மேக மூட்டம் காரணமாக வெற்றி பெறவில்லை. சேதமடையாத ஜெர்மானிய பீரங்கி நிலைகளும், துப்பாக்கி நிலைகளும் அமெரிக்கப் படைகள் தரையை அணுகும் போதே குண்டுமழை பொழிய ஆரம்பித்தன. தரையிறங்கும் படகுகளில் பெரும்பாலானவை தங்கள் இலக்குகளிலிருந்து தவறி வேறு இடங்களில் கரை சேர்ந்தன. இதனால் அமெரிக்கப் படைகளிடையே பெரும் குழப்பம் நிலவியது. ஜெர்மானிய குண்டுமழையால் முதல் படை அலைகளுக்குப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. எதிர்பாராத பலத்த எதிர்த்தாக்குதல், கடற்கரையில் பீரங்கி எதிர்ப்புத் தடைகள் போன்ற காரணங்களால முதல் அமெரிக்கப் படை அலைகள் கடற்கரையில் சிக்கிக் கொண்டன. அவற்றால் கடற்கரையிலிருந்து உள்நாட்டுக்கு செல்லும் சாலைகளைக் கைப்பற்ற முடியவில்லை. இதனால் திட்டமிட்டபடி பின்வரும் அலைகளால் தரையிறங்க முடியவில்லை. முதல் நாள் இறுதியில் சுமார் 3000 அமெரிக்கப் படைகள் ஒமாகா கடற்கரையில் உயிரிழந்திருந்தனர். ஆனால் இரு இடங்களில் கடற்கரையில் பாலமுகப்புகள் கைப்பற்றப்பட்டிருந்தன. அவற்றைப் பயன்படுத்தி அடுத்த சில நாட்களில் தங்கள் இலக்குகளை ஒவ்வொன்றாக அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. ஜெர்மானியப் பாதுகாவலர்களுக்குத் துணையாக புதிய இருப்புப் படைப்பிரிவுகள் அனுப்பபடாதது அவர்களுக்கு சாதகமாக இருந்தது. ஜூன் 7ம் தேதி ஒமாகா கடற்கரையில் சரக்குகள் இறங்கத் தொடங்கின, 9ம் தேதி ஒமாகா படைப்பிரிவுகள் யூட்டா மற்றும் கோல்ட் பிரிவுகளுடன் இணைந்து விட்டன. நார்மாண்டியின் ஐந்து கடற்கரைகளுள் நேசநாட்டுப் படைகளுக்கு மிகப்பெரும் இழப்புகள் ஏற்பட்ட கடற்கரையாக ஒமாகா அமைந்தது. படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia