சர் சேம்சு பிரேசர் இசுட்டோடார்ட்டு (Sir James Fraser Stoddart, பிறப்பு: 24 மே 1942 – 30 திசம்பர் 2024)[5] ஓர் இசுக்காட்டுலாந்தியவேதியியல் அறிஞர். இவர் தற்பொழுது (as of 22 மார்ச்சு 2014[update]) அமெரிக்காவின் வடகிழக்குப் பல்கலைக்கழக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராக இருக்கின்றார்[6] இவர் பெருமூலக்கூற்று வேதியியல் (supramolecular chemistry) துறையிலும் நானோதொழினுட்பத் துறையிலும் ஆய்வு செய்கின்றார். இசுட்டோடார்ட்டு அவர்கள் புறவயமாக மாட்டுண்ட மூலக்கூற்றுக் கட்டமைப்புகள் அமைப்பதிலும், அதுவும் பயன்திறன்மை முறையில் அமைப்பதிலும் புகழீட்டியுள்ளார். இவற்றுள் மூலக்கூற்றுப் போரோமிய வளையங்கள், காட்டனேன்கள் (catenanes), உரோட்டாசேன் (rotaxane) குறிப்பிடத்தக்கன. மூலக்கூறுகளைத் தானாகவுணர்ந்து தாமாக கட்டமைத்துக்கொள்ளும் தன்மைகளைப் பயன்படுத்தி இவை அமைகக்ப்பெறுகின்றன. இந்த இடவியல் அமைப்புகளைப் பயன்படுத்தி மூலக்கூறு தொடுப்பிகள் (molecular switches), மூலக்கூற்று நகர்வியக்கிகள் (motor-molecules) செய்யமுடியும் எனக் காட்டியுள்ளார்.[7] இவருடைய ஆய்வுக்குழு இவற்றைப் பயன்படுத்தி நானோ நுண்மின்கருவிகளையும், நானோ மின்னகர்விய ஒருங்கியங்களையும் (nanoelectromechanical systems, NEMS) செய்துகாட்டியுள்ளது.[8] இவருடைய ஆய்வுச்செயற்பாடுகள் பல பரிசுகளையும் பெருமைகளையும் ஈட்டுத்தந்துள்ளது. 2007 இல் இவருக்கு அறிவியலுக்கான அரசர் பைசல் அனைத்துலகப் பரிசு [King Faisal International Prize)[9][10] வழங்கப்பெற்றது. 2016 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் பெர்னார்டு பெரிங்கா, இழான் பியர் சோவாழ்சு ஆகியோருக்குமாகச் சேர்த்து வழங்கப்பெற்றது.[1][11][12][13]