இழான் பியர் சோவாழ்சு
![]() ![]() இழான் பியர் சோவாழ்சு (Jean-Pierre Sauvage) (பிறப்பு அக்டோபர் 21, 1944) ஓர் பிரான்சிய வேதியியல் ஆய்வாளர். இவர் பிரான்சில் இசுற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். தனி அணுக்கள் மூலக்கூறுகளைத் தாண்டி மூலக்கூறுகளுக்கிடையே நிலவக்கூடிய மெலிவான விசைகளைக் கொண்டு மூலக்கூறுகளால் அமைக்கக்கூடிய ஒருங்கியம் குறித்து நுண்ணிய மூலக்கூறு இயந்திர அமைப்புகள் பற்றிய துறையில் ஆய்வு செய்கின்றார். இவருடைய ஆய்வுகளுக்காக 2016 ஆம் ஆண்டின் வேதியியல் நோபல் பரிசு இவருக்கும் அமெரிக்கராகிய பிரேசர் இசுட்டோடார்ட்டு (Fraser Stoddart) என்பாருக்கும் இடச்சு ஆய்வாளர் பென் பெரிங்கா (Bernard L. Feringa) என்பாருக்கும் வழங்கப்பெற்றது. சோவாழ்சு பாரீசு நகரில் அக்டோபர் 21, 1944 இல் பிறந்தார். இலூயி பாசுச்சர் பல்கலைக்கழகத்தில் இழான் மாரீ இலேன் (Jean-Marie Lehn) வழிகாட்டலில் முனைவர்ப் பட்டம் பெற்றார். முனைவர்ப்பட்ட ஆய்வில் முதன்முறையாக கிறிப்டாண்டு எனக் குறிக்கப்பெறும் பல்லீந்தணைவிகளை உருவாக்கிக் காட்டினார்[1]. இழான் மாரீ இலேன் இத்துறையில் வல்லுனர். இவர் 1987 இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர். சோவாழ்சு நிறைய ஆய்வுக்கட்டுரைகள் எழுதிப் புகழ்பெற்றவர். மின்வேதிய முறையில் கரிம ஈராக்சைடு (கார்பன்-டை-ஆக்சைடு, CO2) சிதைவு, ஒளிச்சேர்க்கை வினைய நடுவம் (photosynthetic reaction center)[2] ஆகிய துறைகளில் ஆய்வு செய்திருக்கின்றார். மூலக்கூறுகள் ஒன்றோடொன்று இயந்திரவகையாக பிணையும் விதமாக அமைப்பது பற்றியும் நிறைய ஆய்வு செய்திருக்கின்றார். கயிற்றில் முடிச்சுகள் போடுவதுபோல மூலக்கூறுகளில் முடிச்சுகள் போல அமைக்கும் விதங்களையும் ஆய்வு செய்திருக்கின்றார்[3]. மூலக்கூற்று முடிச்சுகளை நாட்டேன் (knotane) என்றும் குறிக்கப்பெறுகின்றது. பிரான்சிய அறிவியல் அக்காதெமியில் மார்ச்சு 26, 1990 அன்று தொடர்புகொள் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார், பின்னர் நவம்பர் 24, 1987 இல் உறுப்பினராக உயர்ந்தார். இவர் தற்பொழுது இசுற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்றப் பேராசிரியராக இருக்கின்றார். அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia