தக்குமா நிசிமுரா
தக்குமா நிசிமுரா (ஆங்கிலம்; மலாய்: Takuma Nishimura; சப்பானியம்: 西村 琢磨; சீனம்: 西村琢磨); (12 செப்டம்பர் 1889 - 11 சூன் 1951) என்பவர் மூத்த சப்பானிய இராணுவ அதிகாரி ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது, மலாயாவில் சப்பானிய படையெடுப்பின் போது, சப்பானிய இராணுவத்தின் தளபதி; மற்றும் சிங்கப்பூர் சப்பானிய ஆக்கிரமிப்பில் தீவிரமாக இருந்தவர் ஆவார். சப்பான் சரணடைந்த பிறகு, சூக் சிங் படுகொலைகளில் அவரின் பங்கிற்காக பிரித்தானிய சிங்கப்பூரில் ஒரு போர்க் குற்றவாளியாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு, பாரிட் சூலோங் படுகொலை தொடர்பான விசாரணைக்காக அவர் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீதான போர்க் குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டு, 1951 சூன் 11-ஆம் தேதி, அப்போதைய ஆஸ்திரேலியப் பிரதேசமான பப்புவா நியூ கினி, மானுசுத் தீவில் தூக்கிலிடப்பட்டார்.[1] இராணுவ வாழ்க்கைசப்பான், புகுவோகா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிசிமுரா, 1910-இல் சப்பானிய அரச இராணுவக் கல்லூரியின் 22-ஆவது வகுப்பில் பட்டம் பெற்றார். பின்னர் இராணுவப் பொறியியல் பள்ளியில் பயின்றார். 1920-இல் இராணுவ உயர்க் கல்லூரியின் 32-ஆவது வகுப்பில் பட்டம் பெற்றார். அவர் தம் தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை சப்பானிய அரச இராணுவப் பொதுப் பணிகளிலும்; மற்றும் நிர்வாகப் பதவிகளிலும் பணியாற்றினார். 1936 முதல் 1938 வரை, நிசிமுரா 9-ஆவது சப்பானியத் தரைப்படைப் பிரிவின் தளபதியாக இருந்தார். மேலும் 1938 முதல் 1939 வரை 1-ஆவது சப்பானியப் பீரங்கித்துறைக்குத் தலைமை தாங்கினார். பின்னர் 1939 முதல் 1940 வரை சப்பானியக் கிழக்குப் பாதுகாப்பு இராணுவத்திற்குத் தலைமைத் தளபதியானார்.[2] 1940-இல் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார். 1940-இல் பிரெஞ்சு இந்தோசீனா மீதான படையெடுப்பில் சப்பானிய இராணுவத்தின் தளபதியாக இருந்தார். 1941-இல் உயர்த் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இரண்டாம் உலகப் போர்1941-ஆம் ஆண்டில், நிசிமுரா 21-ஆவது சப்பானியத் தற்சார்பு படைப்பிரிவுக்கும்; பின்னர் மலாயா நடவடிக்கையின் போது அரச இராணுவப் பிரிவுக்கும் தளபதியானார். மூவார் போரின் போது, 155 ஆஸ்திரேலிய மற்றும் இந்தியப் போர்க் கைதிகளை, சப்பானியர்கள் பாரிட் சூலோங் படுகொலை என்று அழைக்கப்பட்ட துர்நிகழ்வில் கொன்றனர். சிங்கப்பூரில் நேச நாட்டுப் படைகள் சரணடைந்ததைத் தொடர்ந்து, சூக் சிங் படுகொலை நடந்த காலக்கட்டத்தில், சிங்கப்பூர் தீவின் கிழக்குப் பகுதிக்கு நிசிமுரா பொறுப்பாளராக இருந்தார். அத்துடன் சப்பானிய இராணுவத்தின் 25-ஆவது பிரிவின் மூத்த தளபதியான தோமோயுகி யமாசிதாவுடன் அடிக்கடி முரண்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். சில வேளைகளில் நிசிமுரா வேண்டும் என்றே தோமோயுகி யமாசிதாவை அவமதிக்கும் செயல்களிலும் ஈடுபட்டார்.[3] இதன் விளைவாக, நிசிமுராவின் இராணுவப் பிரிவுக்கு சப்பானியப் பேரரசரின் வெற்றிச் சான்றிதழும் (Emperor's Victory Citation) மறுக்கப்பட்டது. அத்துடன் நிசிமுரா சப்பானுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்; மற்றும் ஏப்ரல் 1942-இல் அவர் கட்டாய ஓய்வு பெற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. சூன் 1943 முதல் பிப்ரவரி 1944 வரை, வடக்கு மியான்மரில் உள்ள சான் மாநிலங்களின் ஆளுநராக நிசிமுரா நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மார்ச் 1944 முதல், சுமத்ரா தீவிற்கு சப்பானிய இராணுவ ஆளுநராக நியமிக்கப்பட்டார். போர் முடியும் வரையில் அவர் அந்தப் பதவியில் இருந்தார். போர்க் குற்றங்களுக்கான விசாரணைகள்இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு, சிங்கப்பூரில் உள்ள பிரித்தானிய இராணுவ நீதிமன்றம் சூக் சிங் படுகொலை நிகழ்வுக்காக நிசிமுராவை விசாரணை செய்தது. நிசிமுரா ஒரு போர்க் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி; அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. நான்கு ஆண்டுகள் சிங்கப்பூரில் தம் சிறைத்தணடனையை அனுபவித்தார். அவரின் தண்டனை முடியும் கட்டத்தில் தோக்கியோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். நிசிமுரா சப்பானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டபோது, அவரை ஆங்காங்கில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ஆஸ்திரேலிய இராணுவப் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி கைது செய்தனர். தொடர்ந்து அவரை பப்புவா நியூ கினி, மானுசு தீவிற்கு கொண்டு சென்றனர். அங்கு ஆஸ்திரேலிய இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு; பாரிட் சூலோங் படுகொலை தொடர்பான நிகழ்வுகளுடன் விசாரணை செய்யப்பட்டார். பாரிட் சூலோங் படுகொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தவும், போர்க் கைதிகளின் உடல்களை அழிக்கவும் நிசிமுரா உத்தரவிட்டார் என்பதற்கான சான்றுகள் மெய்ப்பிக்கப்பட்டன. நிசிமுரா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 11 ஜூன் 1951-இல் மானுசு தீவில் தூக்கிலிடப்பட்டார். மேலும் காண்கமேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia