காபோல்டு ஆணையம் (ஆங்கிலம்: Cobbold Commission; மலாய்: Suruhanjaya Cobboldஇந்தோனேசியம்: Komisi Cobbold) என்பது வடக்கு போர்னியோ (சபா) மற்றும் சரவாக் மாநிலங்களில் வாழும் மக்கள் மலேசியா கூட்டமைப்பு (Federation of Malaysia) உருவாக்கத்தை ஆதரிக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ஓர் ஆணையம் (Commission of Enquiry) ஆகும்.[1]
1963-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா உருவாவதற்கு முன்னர் மலேசிய அரசியலமைப்பு (Constitution of Malaysia) வரைவு தயாரிப்பிற்கும் இந்த ஆணையம் பொறுப்பு வகிக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது. இந்த ஆணையத்திற்கு இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் காபோல்டு பிரபு தலைமை தாங்கினார்.[2]
உறுப்பினர்கள்
ஆணையத்தின் உறுப்பினர்கள்:
காபோல்டு பிரபு (Cameron Cobbold), இங்கிலாந்து வங்கி, முன்னாள் ஆளுநர், ஆணையத்தின் தலைவர்
ஓங் பாவ் நீ (Wong Pow Nee), பினாங்கு முதலமைச்சர்
கசாலி சாபி (Ghazali Shafie), மலேசிய வெளியுறவுத் துறை நிரந்தர செயலாளர்
அந்தோனி அபெல் (Anthony Abell), சரவாக் முன்னாள் ஆளுநர்
டேவிட் வாதர்சுடன் (David Watherston), மலாயாவின் முன்னாள் தலைமைச் செயலாளர்
அறிக்கை
காபோல்டு ஆணையம் அதன் கண்டறிதல்கள், அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை 1962 ஆகத்து 1-ஆம் தேதி வெளியிட்டது. மலேசியாவின் உருவாக்கம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆணையம் முடிவு செய்தது.
எவ்வாறு ஆயினும், அனைத்துக் கட்சிகளும் சம பங்காளிகளாகக் கூட்டமைப்பிற்குள் இணைய வேண்டும் என்றும் காபோல்டு பிரபு வலியுறுத்தினார். காபோல்டு பிரபு 21 ஜூன் 1962-இல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் அரோல்டு மேக்மில்லனுக்கு (British Prime Minister Harold Macmillan) தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இருந்தார்:
"சிங்கப்பூரும் சேரும் என்ற அனுமானத்தில் நான் மலேசியா உருவாக்கத்தை ஆதரித்தேன் ... சிங்கப்பூர் வெளியேறினால் ... மலாயா மற்றும் போர்னியோ பிராந்தியங்களுக்கு இடையிலான ஒரு கூட்டமைப்பில் ... சிங்கப்பூர் இல்லாவிட்டால் ... ஈர்ப்பு இருக்காது."
காபோல்டு ஆணைய அறிக்கை சுருக்கம்
ஒவ்வொரு பிரதேசத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அதிக அக்கறை கொள்ளாமல், முன்கூட்டியே உணர்ந்து கொள்வதைத் தவிர்த்து; மலேசியா உருவாக்கப் படுவதை வலுவாக ஆதரிக்கின்றனர்.
மூன்றில் இரண்டாவது பகுதியினர், மலேசியா அமைப்புத் திட்டத்திற்குச் சாதகமாக உள்ளனர். இருப்பினும் பல்வேறு அளவிற்கு வலியுறுத்தல்கள்; எதிர்பார்ப்புகள்; பாதுகாப்புகளைக் கோருகின்றனர்.
மீதமுள்ள மூன்றாவது பகுதியினர், மலேசியா உருவாக்கப்படுவதற்கு முன்பு சுதந்திரத்தை வலியுறுத்துகிறார்கள். பிரித்தானிய ஆட்சி இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றும் வலுவாக விரும்புகின்றார்கள். அவர்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகள் கணிசமாக நிறைவேற்றப்பட வேண்டும்.