மிக்கைல் செர்கேவிச் கொர்பச்சோவ் (Mikhail Sergeyevich Gorbachev; உருசியம்: Михаи́л Серге́евич Горбачёв, ஒ.பெ மிஃகயீல் சிர்கேவிச் கர்பச்சோவ், பஒஅ: [mʲɪxɐˈil sʲɪrˈɡʲejɪvʲɪdʑ ɡərbɐˈtɕɵf](கேட்க);[1][2][3] 2 மார்ச் 1931 – 30 ஆகத்து 2022) என்பவர் சோவியத், மற்றும் உருசிய அரசியல்வாதி ஆவார். இவர் சோவியத் ஒன்றியத்தின் 8-ஆவது, கடைசி அரசுத்தலைவர் ஆவார். 1985 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியில் இருந்தார். 1988 முதல் 1991 வரை அரசுத் தலைவராகவும், 1988 முதல் 1989 வரை சுப்ரீம் சோவியத் தலைமைப் பீடத்தின் தலைவராகவும், 1989 முதல் 1990 வரை சுப்ரீம் சோவியத்தின் தலைவராகவும் பதவியில் இருந்தார். கருத்தியல் ரீதியாக, கொர்பச்சோவ் தொடக்கத்தில் மார்க்சியம்-லெனினிசக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், பின்னர் 1990களின் முற்பகுதியில் சமூக சனநாயகத்தை நோக்கிச் சென்றார். இவரது சில சீர்திருத்தக் கொள்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன எனப்படுகிறது. இவருக்கு 1990இல்அமைதிக்கானநோபல் பரிசு வழங்கப்பட்டது.[4]
கொர்பச்சோவ், உருசியாவில்இசுத்தாவ்ரப்போல் பிரிவில் பிரிவல்னோயே என்ற நகரில்[5] உருசிய, உக்ரைனிய ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.[6]யோசப் இசுத்தாலினின் ஆட்சியில் வளர்ந்தவர், தனது இளமைப் பருவத்தில் பொதுவுடைமைக் கட்சியில் சேருவதற்கு முன்பு ஒரு கூட்டுப் பண்ணையில் கூட்டு அறுவடை இயந்திரங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டார்.[7]மாசுக்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில்சட்டம் படிக்கும் போது, 1953 இல் சக மாணவியான ரைசா தைத்தாரென்கோவை மணந்தார்.[8] 1955 இல் சட்டப் படிப்பை முடித்து இசுத்தாவ்ரப்போலுக்குச் சென்ற அவர்,[9] கொம்சோமால் இளைஞர் அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார்.[10] 1953 இல் இசுத்தாலினின் இறப்பிற்குப் பிறகு, சோவியத் தலைவர் நிக்கித்தா குருசேவின் இசுத்தாலினியத்திற்கு எதிரான சீர்திருத்தங்களுக்குத் தீவிர ஆதரவாளரானார்.[11] 1970 இல் இசுத்தாவ்ரப்போல் பிராந்தியக் குழுவின் கட்சியின் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[12] 1978 இல், கட்சியின் மத்திய குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டு மாஸ்கோ சென்றார்.[13] 1979 இல் கட்சியின் ஆளும் பொலித்பியூரோவில் சேர்ந்தார்.[14] சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் இறந்த மூன்று ஆண்டுகளுக்குள், யூரி ஆந்திரோப்பொவ், கான்சுடன்டீன் செர்னென்கோ ஆகிய தலைவர்களின் சுருக்கமான ஆட்சியைத் தொடர்ந்து, பொலித்பியூரோ 1985 இல் கொர்பச்சோவை கட்சியின் பொதுச் செயலாளராகவும், நடைமுறைப்படியான அரசுத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.[15]
சோவியத் அரசையும் அதன் சோசலிசக் கொள்கைகளையும் பாதுகாப்பதில் உறுதியாக இருந்த போதிலும், குறிப்பாக 1986 செர்னோபில் பேரழிவிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் அவசியம் என்று கோர்பச்சோவ் நம்பினார். சோவியத்-ஆப்கான் போரில் இருந்து விலகி, அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும், பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அமெரிக்க அரசுத்தலைவர் ரொனால்ட் ரேகனுடன் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். உள்நாட்டில், கிளாஸ்னோஸ்த் ("திறந்த தன்மை") என்ற அவரது கொள்கையானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்த அனுமதித்தது. அதே நேரத்தில் அவரது பெரெஸ்த்ரோயிக்கா ("மறுசீரமைப்பு") கொள்கை அதிகாரப் பரவலாக்கல் மூலம் பொருளாதார முடிவெடுத்து செயல்திறனை மேம்படுத்த முயன்றது. அவரது சனநாயகமயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் காங்கிரசின் உருவாக்கம் ஆகியவை ஒரு கட்சி அரசுக்கு சவாலாக அமைந்தது. 1989-1990-இல் பல்வேறு கிழக்கு ஐரோப்பிய சோவியத் உறுப்பு நாடுகள் மார்க்சிய-லெனினிய ஆட்சியைக் கைவிட்டபோது கொர்பச்சோவ் இராணுவ ரீதியாக தலையிட மறுத்துவிட்டார். உள்நாட்டில், வளர்ந்து வந்த தேசியவாத உணர்வு சோவியத் ஒன்றியத்தை உடைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மார்க்சிய-லெனினியக் கடும்போக்குவாதிகள் 1991 ஆகத்து மாதத்தில் கோர்பச்சேவுக்கு எதிராக நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதி தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து, கொர்பச்சோவின் விருப்பத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியம் கலைந்ததை அடுத்து அவர் தனது பதவியைத் துறந்தார். பதவியை விட்டு வெளியேறிய பிறகு, அவர் தனது கொர்பச்சோவ் அறக்கட்டளையைத் தொடங்கினார். உருசிய அரசுத்தலைவர்கள் போரிஸ் யெல்ட்சின், விளாதிமிர் பூட்டின் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தார். உருசியாவின் சமூக-சனநாயக இயக்கத்திற்காக பிரச்சாரம் செய்தார்.
20-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவராகப் பரவலாகக் கருதப்பட்ட கொர்பச்சோவ் தொடர்ந்து சர்ச்சைக்குரியவராகக் காணப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசு உட்படப் பலதரப்பட்ட விருதுகளைப் பெற்ற இவர், பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும், சோவியத் ஒன்றியத்தில் புதிய அரசியல், பொருளாதார சுதந்திரங்களை அறிமுகப்படுத்தியதிலும், கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் மார்க்சிய-லெனினிய நிர்வாகங்களின் வீழ்ச்சியை சகித்துக்கொள்வதிலும், செருமானிய மீளிணைவிலும் முக்கிய பங்காற்றியதற்காகப் பரவலாகப் பாராட்டப்பட்டார். ஆனால் சோவியத் கலைப்பை விரைவுபடுத்தியதற்காகவும், இந்த நிகழ்வால் உருசியாவின் உலகளாவிய செல்வாக்கில் சரிவைக் கொண்டு வந்து பொருளாதார சரிவைத் தூண்டியமைக்காகவும் உருசியாவிலும் முன்னாள் சோவியத் நாடுகளிலும் இவர் அடிக்கடி விமரிசிக்கப்பட்டு வந்தார்.
மறைவு
கொர்பச்சோவ் 2022 ஆகத்து 30 அன்று மாஸ்கோ, மத்திய மருத்துவமனையில் தனது 91-ஆவது அகவையில் காலமானார்.[16][17] மருத்துவமனைத் தகவலின் படி, அவர் "கடுமையான, நீடித்த நோயால்" இறந்தார். 2020 முதல் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.[18][19][20] அவரது விருப்பப்படி, கொர்பச்சோவின் டல் மாஸ்கோவில் நோவதேவிச்சி சேமக்காலையில் அவரது மனைவியின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.[21][22]
உருசியாவின் அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் வாழ்ந்த தலைவர் கொர்பச்சோவ் ஆவார்.[23]
எதிர்வினைகள்
கொர்பச்சோவின் இறப்பு குறித்து பல உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்தனர்.[24]
உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின், கோர்பச்சேவ் இறந்ததை அடுத்து அவரது "ஆழ்ந்த இரங்கலை" தெரிவித்தார், மேலும் அவர் கொர்பச்சோவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் அனுப்புவதாக அறிவித்தார்.[25] நாடாளுமன்றத் துணைத்தலைவர் வித்தாலி மிலோனொவ், கோர்பச்சேவ் "உருசியாவிற்கு இட்லரை விட மோசமானவர்" என்று கூறினார்.[24]
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரசு, கொர்பச்சோவ், "வரலாற்றின் போக்கை மாற்றிய ஒரு அரசியல்வாதி, உயர்ந்த உலகளாவிய தலைவர், பலதரப்பு மற்றும் அமைதிக்காக அயராது வாதிட்டவர்" என்று கூறினார். அமெரிக்காவின் முன்னாள் அரசுச் செயலர் யேம்சு பேக்கர் பனிப்போரின் முடிவின் பின்னணியில் "மிகைல் கொர்பச்சோவ் தனது மாபெரும் தேசத்தை சனநாயகத்தை நோக்கி வழிநடத்திய ஒரு மாபெரும் வீரராக வரலாறு நினைவுகூரும்" என்று கூறினார். முன்னாள் கனடியப் பிரதமர் பிரையன் மல்ரோனி, "அவர் சமாளிக்க மிகவும் இனிமையான மனிதர்" என்றும் "வரலாறு அவரை ஒரு மாற்றும் தலைவராக நினைவுகூரும்" என்றும் கூறினார்.[27]
குறிப்புகள்
↑1991 ஆகத்து 19 முதல் 21 வரை ஆகத்து புரட்சியின் போது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
↑இந்தப் பதவி 1991 திசம்பர் 25 இல் அகற்றப்பட்டு, அதிகாரங்கள் உருசிய அரசுத்தலைவர் போரிசு யெல்ட்சினுக்கு மாற்றப்பட்டது. சனாதிபதியின் செயற்பாடுகள் குடியரசுத் தலைவர்கள் பேரவை மற்றும் விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாய நாடுகளின் நிர்வாகச் செயலாளர்களுக்கு சென்றன.
↑1990 மார்ச் 14 இல், சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பின் 6 வது பிரிவில் இருந்து பொதுவுடைமைக் கட்சியின் ஏகபோக அதிகாரம் நீக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின், பல கட்சி அமைப்பு அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது, பொதுவுடைமைக் கட்சி அரசு எந்திரத்தின் ஒரு பகுதி என்ற ஏகபோகமும் நிறுத்தப்பட்டது.
↑கொர்பச்சோவ் 2001 நவம்பர் 24 வரை உருசியாவின் ஐக்கிய சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், 2007 அக்டோபர் 20 வரை உருசிய சமூக சனநாயகக் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
↑"Gorbachev". Random House Webster's Unabridged Dictionary.