இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் (Anti-Hindi imposition agitation) என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், பெரும்பாலும் சனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும். 1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல் முறையாக வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்க்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் பெரியார் ஈ. வெ. இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1,198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு 1939ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' பிப்ரவரி 1940ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார். பிரித்தானியாவிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு அரசியலமைப்பு சட்டமன்றத்தில் புதிய இந்தியக் குடியரசில் நிலவ வேண்டிய அலுவல் மொழி குறித்து நீண்ட விவாதம் நடந்தது. பற்பல உரையாடல்களுக்குப் பின்னர் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி அரசுப்பணி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய இந்திய அரசியலமைப்பு சனவரி 26, 1950 அன்று நடப்பிற்கு வந்தது. ஆகவே அரசியலமைப்பில் ஏற்றுக் கொண்டபடி 1965ஆம் ஆண்டிலிருந்து இந்தி மட்டுமே அரசுப் பணிமொழியாக விளங்க அரசு மேற்கோண்ட முயற்சிகள் இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலைகளை உண்டாக்கின. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது. இந்தக் கவலைகளை நீக்கும் விதமாக அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1963ஆம் ஆண்டில் கொண்டு வந்த அரசுப்பணிமொழி சட்டத்தில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் ஆங்கிலம் அரசுமொழியாக விளங்க வழி செய்தார். ஆயினும் அச்சட்டத்தின் உள்ளடக்கம் தி.மு.க விற்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அவரது வாய்மொழி வாக்குறுதிகள் பிந்தைய அரசுகளால் ஏற்கப்படாமல் போகலாம் என்ற அச்சத்தினை வெளியிட்டனர். 26 சனவரி,1965 நாள் நெருங்கிவந்த காலத்தில் தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலுக்கத் துவங்கியது. அவ்வாண்டு குடியரசு நாளைக் கருப்பு தினமாகக் கொண்டாட தி. மு. க அழைப்பு விடுத்திருந்தது. போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பெரிதும் ஈடுபட்டனர். மதுரையில் 25 சனவரியன்று அவர்களுக்கும் காங்கிரசு கட்சியினர் சிலருக்கும் இடையே எழுந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய இக்கலவரம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் அடுத்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. பரந்த அளவில் வன்முறை, தீவைப்பு எனப் போராட்டக்காரர்களும் தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் காவல் துறையினரும் மோதினர். இக்கலவரங்களில் இரு காவல்துறையினர் உட்பட 70 பேர்கள் (அதிகாரப்பூர்வமாக) இறந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர் போராட்டம் ஓய்ந்தது. 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது. 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க பெரும் வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் காங்கிரசால் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. 1967ஆம் ஆண்டு அமைந்த இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, அரசுப் பணிமொழிச் சட்டத்தில் என்றென்றும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளும் அரசுமொழிகளாக விளங்கும் வகையில் திருத்தம் கொண்டுவந்தது. பின்னணி![]() இந்தியக் குடியரசில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,635 தாய்மொழிகளும் 10,000 பேருக்கும் கூடுதலான பேசுபவர்களைக் கொண்ட 122 மொழிகளும் உள்ளதாக அறியப்பட்டது.[1] பிரித்தானிய ஆட்சியின்போது ஆங்கிலம் மட்டுமே அரசுமொழியாக விளங்கி வந்தது. இந்திய விடுதலை இயக்கத்தினர் இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளிலேயே இந்தியாவின் பல்வேறு மொழியினரையும் பிரித்தானியருக்கு எதிராக ஒன்றிணைக்க, உள்நாட்டு மொழி ஒன்றினைப் பொதுமொழியாக ஆக்கிட விருப்பம் கொண்டு இந்தியும் உருதுவும் கலந்த இந்துசுத்தானி என்ற மொழியை ஆதரித்தனர். இந்த அடிப்படையிலேயே 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தட்சிண பாரத் இந்திப் பிரச்சார சபா என்ற அமைப்பை உருவாக்கினார். இந்திய தேசிய காங்கிரசு 1925ஆம் ஆண்டு முதல் தனது நிகழ்வுகளை இந்துஸ்தானியில் மேற்கொள்ளத் துவங்கியது.[2] காந்தி மற்றும் நேரு இருவருமே இந்துஸ்தானியை இந்தி பேசாத மாநிலங்களில் பரப்புவதில் விருப்பமுடையவர்களாக இருந்தனர்.[3][4][5] இம்முயற்சி தமிழரை வட இந்தியர்களுக்கு அடிமையாக்குவதாகக் கருதிய பெரியார் ஈ.வெ.ராவிற்கு, இந்தி அல்லது இந்துஸ்தானியைப் பொதுமொழியாக்குவதில் உடன்பாடில்லை.[6] 1937ல் முதலாம் எதிர்ப்பு போராட்டங்கள்1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்கு ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியது ), முதலமைச்சராக ராஜாஜி 14 சூலை 1937ஆம் நாள் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே இந்தி பயிலவேண்டியதின் தேவையை விளக்கி வந்தார். அரசுப்பணிகள் குறைவாகவே இருக்கும். தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார் துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத் தேவையானது என (சுதேசமித்திரன் பத்திரிகையில் மே 6, 1937) எழுதியிருந்தார்.[7].அதன்படியே தாம் பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார்[8].[7] 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப் போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது.[9] 1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன.[2]. ராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே ராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.[10] சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.[7] 1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோர் சிறைப்பட்ட நிலையிலேயே இறந்தனர். பிற்பாடு இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்றழைக்கப்பட்டனர். பெரியார் உட்பட 1,200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது. பொது மக்கள் கருத்துஇந்தி கட்டாயப்பாடமாகத் திணிக்கப்பட்ட அப்போதைய காலகட்டத்தில் நாட்டுப்புற மாணவ மாணவியருக்கு ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி மட்டுமே கிடைத்தது. நகர்புறத்திலோ மூன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலமும் சொல்லித்தரப்பட்டது. தாய்மொழி வழிக் கல்வி மட்டுமே கற்று ஐந்தாம் வகுப்பு முடிந்து, நகர்ப்புறத்து உயர்நிலைப் பள்ளிகளில் சேரச்செல்லும் போது மூன்றாம் வகுப்பிலேயே இக்குழந்தைகள் சேர்க்கப்பட்ட சூழ்நிலையும் இருந்துவந்தது. கிராமத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு ஆறாம் வகுப்பு பயிலச் செல்லும் நாட்டுப்புறக் குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி என இரு புதிய மொழிகளைக் கற்பதில் சிரமம் எழும். அதே சமயம் நகர்ப்புறக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆங்கில மொழிப் பரிச்சயம் இருப்பதால் கிராமத்துக் குழந்தைகளை விட முன்னேறிச் செல்லும் சூழல் ஏற்படும். எனவே இந்தி மொழித் திணிப்பு கிராமத்தினரை முன்னேற விடாமல் தடுக்கும் சூழலை ஏற்படுத்துவதாக பொது மக்கள் கருதினர். [11] போராட்டத்திற்குப் பேராதரவுஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, முடியரசன், இலக்குவனார் போன்றோர் ஆதரவளித்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். மூவலூர் ராமாமிருதம், நாராயணி, வ.பா.தாமரைக்கண்ணி, முன்னகர் அழகியார், டாக்டர். தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதாம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில மகளிராவர்.[13] 13 நவம்பர் 1938ல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் கூட்டப்பட்டது.[14][15] போராட்டக்காரர்களின் பிராமணர் எதிர்ப்பு உணர்வுகளுக்கிடையிலும் காஞ்சி ராஜகோபாலாச்சாரியார் போன்ற சில பிராமணர்களும் போராட்டத்திற்குத் துணை நின்றனர்.[16] தமிழ் பேசும் இசுலாமியர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; ஆயினும் உருது பேசிய இசுலாமியர் அரசிற்கு ஆதரவளித்தனர். திருச்சியைச் சேர்ந்த பி. கலிஃபுல்லா என்ற முசுலீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் "நான் ஓர் இராவுத்தர். எனது தாய்மொழி தமிழ் என்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை; பெருமையே கொள்கிறேன். இந்தியை ஏன் இந்தியாவின் பொதுமொழியாகக் கொள்ளவேண்டும் என்று எவரும் எங்களுக்கு விளக்கவில்லை" என்று கூறினார்.[7] போராட்டத்திற்கான மக்களாதரவைக் கண்ட மாநில ஆளுநர் சூலை 2, 1938 அன்று அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்)க்கு இவ்வாறு எழுதினார் : "கட்டாய இந்தி இம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றும் அது பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறானது".[7] உண்ணாநோன்புகள்![]() மே 1, 1938 அன்று ஸ்டாலின் ஜகதீசன் என்ற இளைஞர் ஒருவர் கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து உண்ணாநோன்பு இருக்கலானார். அவர் போராட்டக்காரர்களின் சின்னமாக விளங்கினார். விடுதலை இதழில் வெளியான நேர்முகமொன்றில் "தமிழ்த்தாய்க்கு இன்னும் உண்மையான மகன்கள் இருக்கிறார்கள்" என்று கூறினார். அவரைத் தொடர்ந்து சூன் 1 முதல் பொன்னுசாமி என்பவரும் ராஜாஜியின் வீட்டின் முன்னர் உண்ணாநோன்பைத் துவங்கினார். இத்தகைய போராட்ட வடிவை பெரியார் ஆதரிக்காதபோதும் அவரது மற்ற தலைவர்கள் உண்ணா நோன்பு இருப்பவர்களை ஓர் எடுத்துக்காட்டாக அறிவித்தனர். கா. ந. அண்ணாதுரை இந்தி எதிர்ப்பு போராட்டக் கூட்டமொன்றில் "இன்று ஜகதீசன் இறந்தால் அவரிடத்தை நிரப்ப நான் பத்து பேருடன் அமருவேன். அவர் இறந்தால் நீங்களும் இறக்கத் தயாராகுங்கள்" என முழக்கமிட்டார். ஜகதீசன் உண்ணா நோன்பைப் பத்து வாரங்களில் நிறுத்திக்கொண்டார்.[17] தமிழர் படைஆகஸ்ட்-செப்டம்பர் 1938 காலகட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினரும் முசுலீம் லீக்கும் இணைந்து ஓர் எதிர்ப்புப் பேரணியை நடத்தினர். திருச்சியிலிருந்து பெரியாரும் காலிபுல்லாவும் இதனைக் கொடியசைத்து துவக்கினர். நடைப்பயணம் மேற்கொண்டவர்கள் 'தமிழர் படை' என அழைக்கப்பட்டனர். திருச்சியிலிருந்து ஆகஸ்டு 1 அன்று குமாரசாமி பிள்ளை மற்றும் மூவலூர் ராமாமிருதம் அம்மாள் தலைமையில் பேரணி புறப்பட்டது. அடுத்த 42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்திப் பரவலான ஆதரவைத் திரட்டினர். அவர்கள் 11 செப்டம்பர் 1938 அன்று சென்னை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் அரசு அலுவலகங்களில் மறியல் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களது நடைப்பயணத்தால் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இந்தி எதிர்ப்பு மற்றும் தமிழாதரவு உணர்வுகள் பரவின.[2][7][10] நடராசனும் தாளமுத்துவும்![]() போராட்டக் காலத்தில் மரணமடைந்த இருவர் மொழிப்போர் தியாகிகள் என போராட்டக்காரர்களால் போற்றப்பட்டனர். அவர்களது மரணம் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்தது. நடராசன் என்ற இளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். அவர் 30 திசம்பர், 1938 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 15 சனவரி 1939 அன்று மரணமடைந்தார். 13 பிப்ரவரி 1939 அன்று தாளமுத்து நாடார் என்பவர் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாகப் பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு அவரது உடல்நிலைக்குறைவும் கடும் வயிற்றுப்போக்குமே காரணம் என்று அரசு கூறியது. சட்டமன்றத்தில் இவ்விறப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது இராசாசி அவற்றை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறுத்தார். இத்தகைய அரசின் போக்கு போராட்டக்காரர்களை மேலும் கோபமுறச் செய்தது. சென்னையில் நடந்த அவர்களது இறுதிச்சடங்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்; அரசுக்கெதிரான ஆவேசப்பேச்சுகள் நடந்தேறின. இவ்விருவரையும் விடுவிக்க முன்னரே அரசு இணங்கியபோதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பைக் கைவிட்டுவிடவேண்டுமென்ற அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்ததால் சிறையில் அடைபட்டிருந்தனர்.[17][18][19] பிராமண எதிர்ப்புஇந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தினர், தமிழ் மீது இந்தி மற்றும் சமசுகிருத திணிப்பை மேற்கொள்ள பிராமணர்கள் செய்த முயற்சியாக கட்டாய இந்திக் கல்வி சட்டத்தைக் கருதினர்.[20] இராசாசி முன்னர் இயற்பியல் பாடப்புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்கையில் அதிகமான சமசுகிருத மொழிச்சொற்களைப் பயன்படுத்தியதை அவரது சமசுகிருதச் சாய்வுக்குச் சான்றாகக் காட்டினர். போராட்டக்காரர்கள், பிராமணர் நிரம்பிய தமிழ்நாடு காங்கிரசு கட்சியை வடநாட்டு இந்தி ஆதிக்கவாதிகளின் கைக்கூலிகள் என்றனர். தமிழிலிருந்து சமசுகிருதச் சொற்களை விலக்க பிராமண தமிழ் அறிஞர்களின் தயக்கம் தமிழ் மொழியைச் சிதைக்கப் பிராமணர்களின் சதி என்பதற்குக் காட்டாக அமைந்தது.[21] இராசாசி தமிழரின் எதிரியாகப் பார்க்கப்பட்டார். திராவிட தமிழ் நாளிதழ்கள் தங்கள் நகைச்சித்திரங்களில் இராசாசி தமிழ்த்தாய் மீது கத்தி வீசுவது போன்றும் அவளது சீலையைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்துவது போன்றும் காட்டின. தங்களது பேரணிகளிலும் அத்தகைய படங்களைச் சுமந்து சென்றனர். ஆகத்து 1938ஆம் ஆண்டு நடந்த ஓர் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்ட கூட்டமொன்றில் பாவலர் பாலசுந்தரம் பிராமணர்களைத் தமிழ்த்தாயின் கொலைகாரர்கள் என்று வர்ணித்தார். நடராசனைக் குறித்த சட்டமன்ற உரையாடலில் இராசாசியின் அசட்டையான எதிர்வினை தமிழர்கள் தங்கள் வீரனுக்காக கண்ணீர் சிந்தும்போது ஆரியர்களின் சிரிப்பு என்று கண்டிக்கப் பட்டது. இராசாசி பதிலுக்குப் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களைச் சாதிக் குறியீடுகளைக் கொண்டு வசைபாடுவதாகக் குற்றஞ்சாட்டினார். நவம்பர் 1938ல் சென்னையில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணியொன்றில் வன்முறை வெடித்துப் பிராமணர்கள் தாக்கப்பட்டனர்.[2][22] அரசின் எதிர் நடவடிக்கை![]() இந்திப் பிரச்சினையில் ஆளும் காங்கிரசு கட்சியிலும் பிளவு இருந்தது. இராசாசியும் அவரது ஆதரவாளர்களும் இதில் உறுதியாக இருந்தபோதும் சத்தியமூர்த்தியும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனும் இதற்கு எதிராக இருந்தனர். அவர்கள் இந்தியை விருப்பப்பாடமாகவோ அல்லது பெற்றோர்கள் தம் சிறுவர்களை இந்திப் பாடத்திலிருந்து விலக்கிக்கொள்ள அனுமதி கோரும் விதிகளைக் கொண்டதாகவோ திருத்தக் கோரினர். சத்தியமூர்த்தி போராட்டக்காரர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்ட திருத்தம்,1932 படி நடவடிக்கை எடுப்பதையும் எதிர்த்தார்.[23] அவர் காந்திக்கு சூலை 7,1938 அன்று எழுதிய கடிதத்தில்:
எனக் குறிப்பிட்டிருந்தார். இராசாசி தமது செய்கைகளை 14 சூன் 1938 அரசாணையில் இவ்வாறு விளக்கியிருந்தார்:
அவர் போராட்டக்காரர்களின் குறைகளைக் கேட்க மறுத்தார். அவர்கள் தங்கள் "ஆரிய எதிர்ப்பு சாய்வு"களாலும் "காங்கிரசு வெறுப்பினாலும்" தூண்டப்பட்டவர்களாக இருப்பதாகக் கூறினார்.[2] 1,198 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்;அவர்களில் 1,179 பேர் தண்டிக்கப்பட்டனர். சிறைத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 73 பேர் மகளிராவர். அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளுடன் (32 குழந்தைகள்) சிறை சென்றனர்.[13]). பெரியாருக்கு ஓராண்டு கடும் உழைப்பு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[24] போராட்டக்காரர்களின் கூட்டங்களுக்கு எதிராக இராசாசி இந்துஸ்தானி ஆதரவு கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.[7] ஆணை மீட்பு29 அக்டோபர் 1939 அன்று இராசாசியின் காங்கிரசு கட்சி ஆட்சி இரண்டாம் உலகப்போரில் இந்தியா ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்து பதவி விலகியது. மாநில ஆட்சி, ஆளுனரின் மேற்பார்வையில் அமைந்தது. 21 பிப்ரவரி 1940 அன்று ஆளுனர் 'எர்ஸ்கின்' கட்டாய இந்திக்கல்வியை விலக்கி விருப்பப் பாடமாகக் கற்கும் வகையில் இதழ்க் குறிப்பொன்றை வெளியிட்டார்.[25] விளைவுகள்பெரியார் சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை ஏற்படுத்தியபோது அதனால் ஈர்க்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயண் ஈரோட்டிற்கு வந்திருந்து பெரியாரோடு கலந்துரையாடினார். பெரியாரை அனைத்திந்திய சமதர்மக் கட்சியில் சேர்ந்து பணிபுரிய அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதன்பின் ஏற்பட்ட இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், தமிழக முற்போக்காளர்களும் வட இந்திய முற்போக்காளர்களும் ஒரே அணியில் இருந்து செயல்பட முடியாதபடி பிளவை ஏற்படுத்தி விட்டது.[26] 1940-1950 காலகட்டங்களில்1940-46 ஆண்டுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வைத் திராவிடர் கழகமும் பெரியாரும் உயிரூட்டி வந்தனர். அரசு இந்திக்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கத் துணியும்போதெல்லாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி அதனைத் தடுப்பதில் வெற்றி கண்டனர்.[27] இந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான போராட்டம் 1948-49 ஆம் ஆண்டுகளில் நடந்தது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலைமையிலான புதிய இந்திய அரசு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி சென்னை மாகாணத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது. பெரியாரின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த ம. பொ. சிவஞானம் மற்றும் திரு.வி.க தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர்.[2][14][28] ஜூலை 17, 1948ல் திராவிடர் கழகம் (தி.க) ஒரு அனைத்துக் கட்சி இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1937-40ல் நடந்தது போலவே பேரணிகள், கருப்புக் கொடி போராட்டங்கள்]], அடைப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த இராசாசி ஆகஸ்ட் 23ம் தேதி சென்னை வந்த போது திராவிடர் கழகத்தினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர். இதற்காக அண்ணாதுரை, பெரியார் உட்பட பல தி.க.வினர் ஆகஸ்ட் 27 அன்று கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி பெரியார் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; அரசும் அவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்னர் இந்திப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் இந்தி வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.[29] இந்திய அரசியலமைப்பில் மொழிகள்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் திசம்பர் 9, 1946ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. மொழிகளைக் குறித்த விவாதம் இம்மன்றத்தில் தீவிரமாக நடைபெற்றது. அரசியலமைப்பை எந்த மொழியில் எழுதுவது, மன்றத்தின் நடவடிக்கைகள் நடத்தப்படவேண்டிய மொழி, புதிய குடியரசுக்கான “தேசியமொழி” போன்ற விஷயங்கள் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டன.[30] ஒரு பக்கம் இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு ராய் சாஸ்திரி, ஆர்.வி. துலேகர், பாலகிருஷ்ண சர்மா, புருசோத்தம் தாஸ் டாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத் குகா (பீகார்), அரி வினாயக் படஸ்கர் (மும்பை), சேத் கோவிந்த் தாஸ் (மத்திய மாகாணம்) ஆகியோர் பல இந்தி ஆதரவு மசோதாக்களைக் கொண்டுவந்து இந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர்.[31][32] 10 திசம்பர் 1946 அன்று துலேகர் "இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துஸ்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்று முழங்கினார்.[30][33] இந்தி ஆதரவாளர்களிடையே இரு பிரிவினர் இருந்தனர்: 1) தூய இந்தி ஆதரவாளர்கள்:- டாண்டன், கோவிந்த் தாஸ், சம்பூர்ணானந்த், ரவிசங்கர் சுக்லா மற்றும் கே. எம். முன்ஷி ஆகியோர் 2) உருது கலந்த இந்துஸ்தானி ஆதரவாளர்கள்:- ஜவஹர்லால் நேரு மற்றும் அபுல் கலாம் ஆசாத் ஆகியோர்[34] இந்தி தேசியமொழியாவதைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த டி.டி.கே, ஜி. துர்காபாய், டி. ஏ. ராமலிங்கம் செட்டியார், என். ஜி. ரங்கா, என். கோபாலசாமி ஐயங்கார் (அனைவரும் சென்னை மாகாணம்), எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் (மைசூர்) ஆகியோர் எதிர்த்தனர். இவர்கள் ஆங்கிலமே அரசு மொழியாக நீடிக்க வாதிட்டனர்.[34][35] அவர்களது வாதத்தின் சாரமாக டி.டி.கேவின் பின்வரும் பேச்சினைக் குறிப்பிடலாம்:
மூன்று ஆண்டுகள் தீவிரமான வாதங்களுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு மன்றம் ஓர் இணக்கமான முடிவுக்கு வந்தது.[4][37] அது முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு (கே. எம். முன்ஷி மற்றும் கோபாலசாமி ஐயங்கார் ஆகியோரால் உருவாக்கப்பட்டது) என்று அழைக்கப்பட்ட அத்தீர்வில் அனைத்து குழுக்களின் தேவைகளும் சமநிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.[38][39] இந்திய அரசியலமைப்பின் பகுதி XVII இத்தீர்வின் அடிப்படையில் இயற்றப்பட்டது. அப்பகுதியில் எங்கும் தேசிய மொழி என்பதே வரையறுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒன்றியத்தின் அலுவலக மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டன.[35][40] தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாக தேர்வு செய்யப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் அனைத்து அலுவலக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் (உட்பிரிவு 343). ஐந்து ஆண்டுகள் கழித்து இந்தியை வளர்க்கவும் ஆங்கிலத்தைப் படிப்படியாக விலக்கவும் வழிவகை காண ஒரு மொழி ஆணையம் ஏற்படுத்தப்படும் (உட்பிரிவு 344). மாநிலங்களுக்கிடையேயான தொடர்புகளும் மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் இடையேயான தொடர்புகளும் ஒன்றியத்தின் அலுவலக மொழியில் அமையும் (உட்பிரிவு 345). ஆங்கிலம் அனைத்து சட்ட நடிவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் - நீதிமன்றங்கள், சட்டங்கள், மசோதாக்கள், விதிகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் (உட்பிரிவு 348). இந்தியின் பரவலையும் பயன்பாட்டையும் வளர்ப்பது ஒன்றியத்தின் கடமையாகும்.(உட்பிரிவு 351). இந்தியா 15 ஆகத்து 1947 ல் விடுதலை பெற்றது. இந்திய அரசியலமைப்பு 26 சனவரி 1950 நாளிலிருந்து நடப்புக்கு வந்தது. மொழி ஆணையம்இந்தியுடன் ஆங்கிலமும் இணை அலுவலக மொழியாக விளங்கியதை இந்தி ஆதரவாளர்கள் குறை கூறி வந்தனர்; பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் 'சியாமா பிரசாத் முகர்ஜி' இந்தி மட்டுமே தேசியமொழியாக வேண்டும் என்று கோரினார்.[32] இந்தியக் குடியரசு 1950, சனவரி 26-இல் நிறுவப்பட்டப்பின்னர், இந்தியை அலுவலக மொழியாகப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1952 ஆம் ஆண்டு மத்திய கல்வித்துறை, விருப்பமாக இந்தி பயிலும் திட்டத்தைத் துவக்கியது. 27 மே, 1952ல் நீதிமன்ற பிடியாணைகளில் இந்தி அறிமுகப்படுத்தப்பட்டது. 1955ஆம் ஆண்டு அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் இந்தி பயிலும் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 3 திசம்பர் 1955 முதல் அரசு ஒன்றியத்தின் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு இந்தியை (ஆங்கிலத்துடன்) பயன்படுத்தத் துவங்கியது."[41] அரசியலமைப்பின் 343வது உட்பிரிவில் வரையறுக்கப்பட்டவாறு, முதல் அலுவலக மொழி ஆணையத்தை பி. ஜி. கேர் என்பவர் தலைமையில் சூன் 7, 1955ல் நேரு அமைத்தார். ஆணையம் தனது அறிக்கையை 31 சூலை, 1956 அன்று அளித்தது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக் கொணர ஆணையம் பல வழிகளைக் குறிப்பிட்டிருந்தது (ஆணையத்தின் இரு இந்தி பேசாத உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து பி. சுப்பராயன், மேற்கு வங்காளத்திலிருந்து சுனிதி குமார் சாட்டர்ஜி, ஒப்புமை இல்லா குறிப்புகள் அளித்திருந்தனர்.[42]).[43] கேர் ஆணைய அறிக்கையை ஆய்வு செய்ய கோவிந்த் வல்லப் பந்த் தலைமையிலான அரசுமொழிக்கான நாடாளுமன்றக் குழு செப்டம்பர் 1957ல் அமைக்கப்பட்டது. அக்குழு இரு ஆண்டுகள் விவாதித்து 8 பிப்ரவரி 1959ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்டது. அது இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை துணைமொழியாகவும் பரிந்துரைத்தது. கேர் மற்றும் பந்த் அறிக்கைகள் இரண்டுமே சுனிதி சாட்டர்ஜி, சுப்பராயன், பிராங்க் அந்தோணி போன்ற இந்தி பேசாத அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1956ஆம் ஆண்டு நடந்த ஒரு மாநாட்டில் 'தெலுங்கு அகாதெமி' இந்தி மட்டும் அலுவலக மொழியாவதை எதிர்த்தது. முன்பு தீவிரமாக இந்தியை ஆதரித்த ராஜாஜி இவ்வமயம் ஆங்கில மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக, தமிழ், தெலுங்கு, மலையாளம், அசாமி, ஒரியா, மராத்தி, கன்னட மற்றும் வங்காள மொழியினரைக் கொண்ட அனைத்திந்திய மாநாடு ஒன்றை 1958ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நடத்தினார். அப்போது "இந்தி ஆதரவாளர்களுக்கு எவ்வாறு ஆங்கிலம் அந்நிய மொழியோ அதேயளவில் இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே என முழங்கினார்."[34][42][44] இந்தித் திணிப்பு எதிர்ப்பு வலுத்து வந்த நேரத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாதவர்களின் கவலையைப் போக்குவதற்கு முயன்றார். 'பந்த் குழு அறிக்கை' மேலான நாடாளுமன்ற விவாதத்தில், செப்டம்பர் 1959இல் கீழ்வரும் உறுதிமொழியைக் கொடுத்தார்.[41]:
இந்த உறுதிமொழி தென்னிந்தியர்களுக்கு சற்றுகாலம் ஆறுதல் அளித்தது.[46] தி.மு.க வின் இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கைதிராவிடர் கழகத்திலிருந்து 1949ஆம் ஆண்டு பிரிந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகம் இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கையையும் வரித்துக் கொண்டது. அதன் நிறுவனர் அண்ணாதுரை 1938-40களில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றவர். திமுகவினர் சூலை 1953ஆம் ஆண்டு டால்மியாபுரம் என்ற ஊரின் பெயரைத் தமிழில் கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். டால்மியாபுரம் என்னும் பெயர் தென்னாட்டின் மீது வட இந்தியா செலுத்தும் ஆதிக்கத்தை நினைவு படுத்துவதாக அவர்கள் கூறினர்.[47][48] 15 சூலை 1953 அன்று மு. கருணாநிதியும் பிற திமுக தொண்டர்களும் டால்மியாபுரம் தொடர்நிலையப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்து இருப்புப் பாதையில் படுத்து வண்டிப் போக்குவரத்தைத் தடுத்தனர். அப்போது காவலர்களுடன் நடந்த கைகலப்பில் இருவர் மரணமடைந்தனர். கருணாநிதி உட்பட ஏனையவர் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர்.[49] 1950களில் திமுக தனது திராவிடஸ்தான் பிரிவினை கோரிக்கையுடன் இந்தித் திணிப்பு எதிர்ப்பும் தொடர்ந்து வந்தது. 28 சனவரி 1956 அன்று இராஜாஜி, பெரியார், அண்ணாதுரை மூவரும் 'தமிழ்ப் பண்பாடு அகாதெமி' நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புமை வழங்கி ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர ஆதரவளித்தனர்.[50][51] 21 செப்டம்பர் 1957 இல் திமுக இந்தித் திணிப்பை எதிர்த்து மாநாடு நடத்தியது. 13 அக்டோபர் 1957ஆம் நாளை இந்தித் திணிப்பு எதிர்ப்பு நாளாக அறிவித்தது.[52][53] 31 சூலை 1960 அன்று மற்றொரு திறந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை சென்னை கோடம்பாக்கத்தில் நடத்தியது.[54] நவம்பர் 1963ஆம் ஆண்டு இந்திய சீனப் போர் மற்றும் அரசியலமைப்பின் 16வது திருத்தமாக இயற்றப்பட்ட பிரிவினை தடுப்புச்சட்டத்தின் பின்னணியில் திமுக பிரிவினை கோரிக்கையைக் கைவிட்டதாயினும் தனது இந்தித் திணிப்பு எதிர்ப்பு நிலையைத் தொடர்ந்தது. 1963ஆம் ஆண்டு அலுவல்மொழிச் சட்டம், 1963 நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைந்தது.[55] இந்தி பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்ற கூற்றுக்கு அண்ணாதுரை பதிலுரை:
அலுவல்மொழிச் சட்டம் 1963இந்தியை முதன்மை அலுவல்மொழியாக மாற்றிட அரசியலமைப்பின் பகுதி XVII குறிப்பிட்ட வரையறை நெருங்கும் வேளையில் நடுவண் அரசு இந்தியின் பயன்பாட்டை அரசு செயல்பாடுகளில் கூடுதலாக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியது. 1960இல் அரசு அலுவலகங்களில் இந்தி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டன. அதே ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பந்த் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, இந்தி கலைச்சொற்கள் மொழிபெயர்ப்பு, அரசு நடவடிக்கை மற்றும் சட்ட ஆவணங்களின் மொழிபெயர்ப்பு, நடுவண் அரசு அலுவலகங்களில் இந்திக் கல்வி மற்றும் இந்தி மொழியைப் பரப்புவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றிற்கு வழி செய்யும் ஆணை ஒன்றை வெளியிட்டார்.[41] 1959ஆம் ஆண்டு நேரு கொடுத்த வாக்குறுதிக்கு சட்ட ஏற்பு கொடுக்கும் வண்ணம் அலுவல்மொழி சட்டம் 1963ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.[58] இதை மன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது நேரு "கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் இருத்தி, அரசியலமைப்பில் 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆங்கிலத்தைத் தொடர்வதில் உள்ள தடங்கல்களை நீக்கும் வண்ணம் இந்த வரைவுச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. இது அந்த கட்டுப்பாட்டை நீக்கும்" என்று கூறினார்.[34] 1963ஆம் ஆண்டு சனவரி 21 அன்று இந்த வரைவுச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. திமுக உறுப்பினர்கள் வரைவுச்சட்டத்தின் மூன்றாம் அங்கத்தில் ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் என்றிருப்பதனை எதிர்த்து ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் என மாற்ற வேண்டும் என திருத்தம் கொணர்ந்தனர். தொடரலாம் என்பதைப் பின்வரும் அரசினர் தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளதாக வாதிட்டனர். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் போகலாம் என்றும் கூறினர். ஜவஹர்லால் நேரு ஆங்கிலச் சொல்லான may மற்றும் shall இச்சட்டத்தின் சூழலில் ஒன்றே என வாதிட்டார். விவாதத்தை முன்னெடுத்து நடத்திய மாநில அவை உறுப்பினரும் கட்சித்தலைவருமான அண்ணாதுரை, ஜவஹர்லால் நேரு சொல்வது போல் இருசொற்களின் பொருளும் ஒன்றே என ஒப்புக்கொண்டால் அரசிற்கு shall என்று மாற்றுவதில் என்ன தயக்கம் என வினவினார். அவர் ஆங்கிலம் காலவரையற்று தொடரவேண்டுமெனக் கோரினார். அப்போதுதான் அனைவருக்கும் கடினமோ எளிமையோ சமநிலைப்படுத்தப்படும் என்றும் வாதாடினார். ஆனால் திருத்தங்கள் எதுவும் இன்றி ஏப்ரல் 27, 1963 அன்று சட்டம் நிறைவேறியது. அண்ணாதுரை தாம் முன்னரே எச்சரித்தபடி, மாநிலம் முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் துவங்கினார்.[34][55][59][60] நவம்பர் 1963இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் அரசியலமைப்பின் XVII பகுதியை எரித்ததற்காக அண்ணாதுரை தமது 500 தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.[61] ஜவஹர்லால் நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக ஆக்குவதன் தீவிர ஆதரவாளர்கள். சாஸ்திரி நேருவின் 1959 மற்றும் 1963 ஆண்டுகளின் வாக்குறுதிகள் காக்கப்படும் என்று கூறியபோதும் சிறுபான்மை மொழியினருக்கு அச்சம் ஏற்பட்டது.[60] நடுவண் அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும், குடியியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்படும், பள்ளிகளில் பயிலூடகம் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாகக் கூடும் என்ற அச்சங்களும் கவலைகளும் மாணவர்களை இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க உந்தியது.[62] மார்ச் 7, 1964 அன்று, மாநில சட்டப்பேரவையில் முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தைப் (ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில் கற்க முன்மொழிந்தார்.[63] மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தித் திணிப்பு எதிர்ப்பினை அதிகரித்தது.[46] இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965![]() சனவரி 26க்கு முந்தைய நிகழ்வுகள்இந்தி தன் அலுவல் மொழியாக மாறும் நாளான சனவரி 26 நெருங்க நெருங்க தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு அச்சங்கள் மேலோங்கி எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கை பெருகி போராட்டச் சூழல் உருவானது. சனவரி மாதம் அனைத்து இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்க தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.[34][64] அதன் உறுப்பினர்களாகத் தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்கத் தலைவர்கள் 18 பேர் இருந்தனர். அவர்களில் சிலர் கவிஞர் நா. காமராசன்,விருதுநகர் பெ. சீனிவாசன், கா. காளிமுத்து, பா. செயப்பிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர் சு. துரைசாமி, சேடப்பட்டி ஆர். முத்தையா, துரை முருகன் (சென்னை பச்சையப்பன் கல்லூரி சார்பில்), கே. ராஜா முகமது, நாவளவன், எம். நடராஜன், எல்.கணேசன், உலோ. செந்தமிழ்க்கோதை, சி. ப. வேந்தன் (கிண்டிப் பொறியியல் கல்லூரி சார்பில்) ஆகியோர் ஆவார்.[65] மாணவர்களின் அச்சங்களைக் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது பிப்ரவரி 6, 1965 தலையங்கத்தில் இவ்வாறு கூறியது (தமிழாக்கம்):
இந்தி திணிப்பை எதிர்த்து பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அவற்றுக்குத் தொழிலதிபர்கள் ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்றோர் நிதியுதவி அளித்தனர்.[46] 17 சனவரி அன்று, திருச்சியில் சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இராஜாஜி (சுதந்திராக் கட்சி), வி. ஆர். நெடுஞ்செழியன் (திமுக), பி. டி. ராஜன் (நீதிக்கட்சி), ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார், சி. பா. ஆதித்தனார் (நாம் தமிழர்), முகமது இஸ்மாயில் (முஸ்லிம் லீக்) ஆகியோர் பங்கு கொண்டனர்.[34][67] இராஜாஜி அரசியலமைப்பின் XVII பகுதியைக் "கிழித்து அரபிக்கடலில் போட வேண்டும்" என்று முழங்கினார்.[57] 16 சனவரி அன்று அண்ணாதுரை எதிர்வந்த குடியரசு நாளைத் துக்கநாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். முன்னதாக அவர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழக மக்கள் குடியரசு நாளைக் கொண்டாட ஏதுவாக மொழி மாற்ற நாளை ஒருவாரம் தள்ளிப்போடுமாறு கோரியிருந்தார். அதற்குப் பிரதமர் ஒப்பாதது மோதலுக்கு வழி செய்தது. "துக்கநாள் "சென்னை மாநில முதல்வர் எம். பக்தவத்சலம் குடியரசு நாளை அவமதிப்பதை அரசு அனுமதிக்காது என்றும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். திமுக துக்கநாளை ஒருநாள் முன்னதாக சனவரி 25 க்கு முன்னேற்றியது. 25 சனவரியன்று கா. ந. அண்ணாதுரையும் 3000 திமுக தொண்டர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.[68] மதுரை நிகழ்வு25 சனவரி அன்று காலை மதுரை மாணவர்கள் பெ. சீனிவாசன்,கவிஞர் நா. காமராசன், கா. காளிமுத்து தலைமையில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திலகர் திடலுக்கு ஊர்வலம் சென்றனர். அவர்கள் முடிவில் அரசியலமைப்பின் பதினேழாம் பகுதியை பொதுவெளியில் எரிக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்தி அரக்கியின் கொடும்பாவியை எரித்து "இந்தி ஒழிக", "Hindi Never, English Ever" என்ற கோஷங்கள் இட்டவாறு சென்று கொண்டிருந்தனர். வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரசு மாவட்ட அலுவலகம் அருகே ஊர்வலம் வந்தபோது ஜீப் ஒன்றில் வந்த காங்கிரசு தொண்டர்கள் ஊர்வலத்தினரை அவமதித்து ஆபாசமொழியில் திட்டினர். பதிலுக்கு மாணவர் தரப்பிலிருந்து செருப்புகள் வீசப்பட்டன. கத்திகளுடன் காங்கிரசார் மாணவர்களைத் தாக்கினர். இதில் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்தனர். கொதித்தெழுந்த மாணவர்கள் காங்கிரசு அலுவலகத்தின் முன்னர் குடியரசுதின கொண்டாட்டங்களுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலைத் தீயிட்டுக் கொளுத்தினர். இந்தச் செய்தி எங்கும் பரவி மதுரையிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன. மதுரை நகரெங்கும் காங்கிரசு கொடிக்கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.[46][65] இரண்டு வார கலவரங்கள்கலவரங்கள் பரவிட, காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இது நிலமையை மேலும் மோசமாக்கியது. தீவைப்பு, கொள்ளை மற்றும் பொதுச்சொத்து அழிவு எனப் பெருகியது. தொடர்வண்டி நிலையங்களில் தொடர்வண்டிப் பெட்டிகள், இந்தி பெயர்ப்பலகைகள் கொளுத்தப்பட்டன. முதல்வர் இதனைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவத்தினரை அழைத்தார். காவலர்களின் கடும் நடவடிக்கைகளால் மேலும் ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல் இரு காவலர்களைத் தீயிட்டுக் கொன்றது. ஐந்து போராட்டக்காரர்கள் (சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி) தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மூவர் (தண்டாயுதபாணி, முத்து, சண்முகம்) விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இரு வார கலவரங்களில் 70 பேர் இறந்தனர் (அதிகாரபூர்வ தகவலில்). ஆனால் 500க்கும் கூடுதலானவர் இறந்திருக்கலாம் என்று அதிகாரமற்ற தகவல்கள் கூறுகின்றன.கவிஞர் நா. காமராசன் சட்ட நகலை எரிக்க இருந்த சமயத்தில் போலீசாரல் கைது செய்து காலில் விலங்கிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல்லாயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சொத்துகளுக்கான இழப்பு ஒரு கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது.[17][46][60][62][65][69][70][71] 28 சனவரி முதல் சென்னை பல்கலைக்கழகத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வகுப்புகள் காலவரையன்றி மூடப்பட்டன. காங்கிரசிற்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உருவாயின. சனவரி 31, 1965 அன்று மைசூரில் கருநாடக முதல்வர் எஸ். நிஜலிங்கப்பா, வங்காள காங்கிரசு தலைவர் அதுல்ய கோஷ், மத்திய அமைச்சர் நீலம் சஞ்சீவ ரெட்டி, காங்கிரசு கட்சித்தலைவர் காமராஜர் ஆகியோர் ஒன்றுகூடி இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணித்தால் அது நாட்டுப் பிரிவினைக்கு அடிகோலும்; எனவே இந்தித் திணிப்பை விலக்கிக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். மொரார்ஜி தேசாய் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முன்னரே அலுவல்மொழியாக அறிவிக்கப்படாத நிலையில் இதனை நிராகரித்தார். மொரார்ஜி தமிழக காங்கிரசார் மக்களிடையே நிலையை விளக்கி பிராந்திய உணர்வுகளுக்கு இடம் கொடுக்காது நாட்டு ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றார்.[60] மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா தமிழக முதல்வர் பக்தவத்சலம் சிறப்பாக நிலைமையைக் கையாள்வதாக அவரது கல் போன்ற உறுதிக்குப் பாராட்டும் தெரிவித்தார்.[72][73] கலவரங்கள் பிப்ரவரி முதல் வாரம் முழுவதும் தொடர்ந்தன. பிப்ரவரி 6 அன்று மாணவர் தலைவர்கள் தீர்வு காண முதல்வரைச் சந்தித்தனர். ஆனால் பேச்சுக்கள் முறிந்து வன்முறை தொடர்ந்தது. ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள், பொது வேலைநிறுத்தங்கள், இந்திப் புத்தகங்கள் எரிப்பு, இந்திப் பலகைகள் அழிப்பு, அஞ்சலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் என்பன வழமையாயிற்று. 11 பிப்ரவரி அன்று மத்திய ஆய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் ஆங்கிலம் அலுவல்மொழியாக விளங்க சட்டப் பாதுக்காப்பு கோரினார். அவரது தீர்வு ஏற்றுக்கொள்ளப்படாததால் தன்னுடைய உடன் அமைச்சர் அழகேசனுடன் பதவி விலகினார்.[34][62][70] 1965 போராட்டத்தின் தாக்கம்உடனடி தாக்கம்தமது அமைச்சரவையில் வெளிப்பட்ட திறந்த எதிர்க்குரலுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி பின்வாங்கி பிப்ரவரி 11 அன்று அனைத்திந்திய வானொலியில் உரையாற்றினார். கலவரங்களைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்து ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியைப் பேண உறுதி கூறினார். தவிர, மேலும் நான்கு வாக்குறுதிகள் கொடுத்தார்:[60]
பின்னர் ஐந்தாவதாக: இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்.[60] அவரது வாக்குறுதிகள் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவியது. 12 பிப்ரவரியில் மாணவர் சங்கம் தங்கள் போராட்டத்தைக் காலவரையின்றித் தள்ளி வைத்தது.[74] மேலும் 16 பிப்ரவரியன்று சி.சுப்பிரமணியனும் ஓ. வி. அழகேசனும் தங்கள் பதவி விலக்கத்தை மீட்டுக் கொண்டனர். இருப்பினும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பும், வன்முறையும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. மார்ச் 7 அன்று மாநில அரசு மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் மீளப் பெற்றது. 14 மார்ச்சில் மாணவர் சங்கம் தனது போராட்டத்தைக் கைவிட்டது.[75]. லால் பகதூர் சாஸ்திரியின் பின்வாங்கல் வட இந்தியாவில் இந்தி ஆதரவாளர்களின் கோபத்தைக் கிளறியது. ஜன சங் தில்லியின் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆங்கில பெயர்ப்பலகைகளைத் தார் கொண்டு அழித்தது.[76] 1967 தேர்தலில் தாக்கம்மார்ச் மாதம் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டாலும் தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்ட சங்கம் தொடர்ந்து மும்மொழித் திட்டத்தைக் கைவிடவும் அரசியலமைப்புப் பகுதி பதினேழை நீக்கிட திருத்தம் கொண்டுவரவும் போராடி வந்தது. 11 மே அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்த மூன்று பேர் கொண்ட மாணவர் குழு பிரதமரைச் சந்தித்தது.[77] மெதுவாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் பொதுவான காங்கிரசு எதிர்ப்பு இயக்கமாக, 1967ஆம் ஆண்டு பொதுதேர்தலில் அதனைத் தோல்வியடையச் செய்யும் நோக்கத்தோடு மாறியது.[65] 20 பிப்ரவரி 1966இல் சங்கத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற இராஜாஜி மாணவர்களைக் காங்கிரசின் தோல்விக்காக உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.[78] 1967 தேர்தலில் மாணவர் தலைவர் பெ. சீனிவாசன் காமராஜருக்கு எதிராக விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விருதுநகர் வந்து சீனிவாசனுக்காகப் பிரசாரம் செய்து பெரும் வெற்றியைத் தேடித் தந்தனர். மாநில அளவில் திமுக பெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது.[35][79][80] அலுவல்மொழிகள் (திருத்தம்) சட்டம் 1967சட்டத் திருத்தத்திற்கான முயற்சிகள் (1965)பிப்ரவரி 1965இல் லால் பகதூர் சாஸ்திரியின் வாக்குறுதிகளுக்கிணங்க அலுவல் மொழிகள் சட்டத்தைத் திருத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் இந்தி ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்க்கப்பட்டன. 16 பிப்ரவரியன்றே எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதை பொதுமேடையில் எதிர்த்தனர். 19 பிப்ரவரியில் மகாராட்டிரம் மற்றும் குசராத்தைச்சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவற்றையடுத்து 25 பிப்ரவரியன்று 106 காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இதனை விவாதிக்காது 12 மார்ச் அன்று பிரதமரைத் தனியாக சந்தித்தனர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சிகளுக்குள் உள்ள பிரிவுகள் பொதுமக்களுக்கு வெளிப்படும் என்ற அச்சத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்பவில்லை. 22 பிப்ரவரியில் காங்கிரசு செயற்குழுக் கூட்டத்தில் கட்சித்தலைவர் காமராஜர் சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவர வற்புறுத்தியபோது உடனேயே மொரார்ஜி தேசாய், ஜகஜீவன் ராம், ராம் சுபாக் போன்றவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். பின்னர் செயற்குழு இந்தி அமலாக்கத்தை மிதப்படுத்தும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் மும்மொழித் திட்டத்தைத் தீவிரமாக அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுச் சேவை தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆங்கிலத்தின் வீச்சைக் குறைக்க தீர்மானம் இயற்றியது. இந்த முடிவுகள் 24 பிப்ரவரியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.[81] மும்மொழித் திட்டம் தென்னிந்தியாவிலோ பிற இந்தி பேசும் மாநிலங்களிலோ முறையாகப் பின்பற்றப்படவில்லை. பொதுச்சேவை தேர்வுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு ஒவ்வாததாக அரசு அலுவலர்கள் கருதினர். தென்னகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரே சலுகை அலுவல்மொழி சட்டம் திருத்தப்படும் என்பதே. எனினும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஏப்ரல் 1965இல் குல்சாரிலால் நந்தா, ஏ. கே. சென், சத்தியநாராயண் சின்கா, மகாவீர் தியாகி, எம். சி. சாக்ளா மற்றும் எஸ்.கே.பாட்டீல் அடங்கிய அமைச்சரவை துணைக்குழு (இந்த துணைக்குழுவில் தென்னிந்திய உறுப்பினர்கள் எவருமில்லை) விவாதித்து எந்த ஒரு முடிவிற்கும் வர இயலாமல், ஆங்கிலமும் இந்தியும் இணையாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று பரிந்துரைத்தது. இக்குழு பொதுச்சேவை தேர்வுகளில் இடவொதுக்கீடு அல்லது மண்டல மொழிகள் தீர்வுகளுக்கு ஆதரவளிக்கவில்லை. நேருவின் வாக்குறுதியை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அலுவல்மொழி சட்டத்தில் மாற்றங்களுக்கான வரைவைத் தயாரித்தனர். இந்த வரைவில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை மாநிலங்களிடையே மற்றும் மாநில மத்திய அரசுகளிடையே இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை தொடர உத்திரவாதம் அளிக்கப்பட்டது. ஆகத்து 25 அன்று அவைத்தலைவரால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது நடந்து கொண்டிருந்த பஞ்சாப் பிரிவினைப் போராட்டங்கள் மற்றும் காசுமீரப் பிரச்சினைகளின் இடையே இத்திருத்தம் கொண்டுவர சரியான நேரம் இல்லையென அறிமுகப்படுத்தப்படவில்லை.[81] 1967 ஆண்டு திருத்த மசோதாலால் பகதூர் சாஸ்திரி சனவரி 1966ல் உருசியாவில் நடந்த அமைதிப் பேச்சுகளின்போது மரணமடைந்தார். அவரை அடுத்து இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்றார். 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரசிற்கு குறைந்த பெரும்பான்மையே கிடைத்தது. தமிழ்நாட்டில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. நவம்பர் 1967இல் புதியதாக சட்டத்திருத்தம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 27 நவம்பரில் [62] நாடாளுமன்றத்தில் வரைவுச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; 16 திசம்பர் அன்று நிறைவேற்றப்பட்டது. (ஆதரவு-205, எதிர்ப்பு - 41)[82] குடியரசுத்தலைவரின் ஒப்புதலை சனவரி 8, 1968ல் பெற்று நடைமுறைக்கு வந்தது.[83] இந்த சட்டத்திருத்தம்[84] 1963ஆம் ஆண்டு சட்டத்தின் பகுதி மூன்றை மாற்றி அனைத்து அலுவல் நடவடிக்கைகளிலும் காலவரையின்றி மெய்நிகர் இருமொழிக் கொள்கையை (ஆங்கிலம் மற்றும் இந்தி)[82] கடைப்பிடிக்க உறுதி செய்தது.[85] 1968 ஆண்டு போராட்டம்1967ஆம் ஆண்டின் சட்டதிருத்தம், மும்மொழித் திட்டத்தினைக் குறித்த கவலைகளை நீக்காததால் தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் திருப்தியடையவில்லை. ஆயினும் திமுக ஆட்சியில் இருந்ததால் மீண்டும் தங்கள் போராட்டங்களைத் துவக்கத் தயங்கினார்கள். தமிழ்நாடு இந்தி எதிர்ப்புப் போரட்டச் சங்கம் பல பிரிவுகளாகப் பிளவுபட்டது. மிதவாதிகள் அண்ணா துரையின் அரசை ஆவன செய்ய விடவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். தீவிரவாத பிரிவுகள் போராட்டத்தை மீண்டும் துவக்கின. மும்மொழித் திட்டத்தைக் கைவிட வேண்டும்; இந்திக் கல்வியை நீக்க வேண்டும்; தேசிய மாணவர் படையில் (NCC) இந்தி ஆணைகள் இடுவது நிறுத்தப்பட வேண்டும்; இந்தித் திரைப்படங்கள், பாடல்கள் தடை செய்யப்பட வேண்டும்; தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்ப நிறுவப்பட்ட தட்சிண இந்தி பிரசார சபை மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தில் இறங்கினர். 19 திசம்பர் 1967 அன்று போராட்டம் துவங்கியது. 21 திசம்பர் அன்று போராட்டம் வன்முறையாக மாறியது. அண்ணாதுரை நிலமையைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றார்.[62][86] 23 சனவரி 1968 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்க்கண்ட முடிவுகள் இதில் உள்ளடங்கியிருந்தன:[87]
இந்த நடவடிக்கைகளால் இந்தி எதிர்பாளர்கள் அமைதியடைந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியது.[62] 1986 ஆண்டு போராட்டம்1986 ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.[88] இந்தக் கொள்கை நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் நிறுவிட வழி செய்தது. திமுக இப்பள்ளிகளில் இந்தி கற்பது கட்டாயமாக்கப்படும் என்று கூறியது.[89] அந்த நேரம் திமுகவிலிருந்து பிரிந்து உருவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தார். திமுக முதன்மை எதிர்க்கட்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி போராட்டம் துவக்கினார். நவம்பர் 13 அன்று மாநில சட்டப்பேரவை ஒருமனதாக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியை நீக்கவும் ஆங்கிலத்தை ஒன்றியத்தின் ஒரே அலுவல்மொழியாக அங்கீகரிக்கவும் தீர்மானம் இயற்றியது.[90][91][92] ஆயினும் 17 நவம்பர் 1986 அன்று திமுக உறுப்பினர்கள் கல்விக்கொள்கைக்கெதிராக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியைத் தீயிலிட்டனர்.[90] கருணாநிதி உட்பட 20,000 திமுக தொண்டர்கள் கைதாயினர்.[92] 21 நபர்கள் தம்மைத் தாமே கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர்.[93] கருணாநிதிக்குப் பத்து வாரங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. க. அன்பழகன் உட்பட பத்து திமுக பேரவை உறுப்பினர்களை அவைத்தலைவர் பி. எச். பாண்டியன் அவையிலிருந்து வெளியேற்றினார்.[90] தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராஜீவ் காந்தி இந்தி கட்டாயமாக்கப்படாது என்று வாக்குறுதி கொடுத்தார்.[94] இதன் பின்னணியில் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது, நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமேயாகும்.[95] தாக்கம்1937-40ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் சென்னை மாகாண அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அந்நாள் வரை இந்திய தேசியக் காங்கிரசுக்கு மாகாணத்தில் முக்கிய அரசியல் மாற்றாக இருந்து வந்த நீதிக்கட்சி, போராட்டத்தின் போது ஈ. வே. ராமசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. திசம்பர் 29, 1938ல் அவர் நீதிக்கட்சியின் தலைவரானார்.[96] 1944ல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியது. கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி போன்ற பல திராவிட இயக்கத் தலைவர்களை இப்போராட்டங்களே பொதுவாழ்வுக்கு அறிமுகப்படுத்தின. இப்போராட்டங்கள் சென்னை மாகாணத்தில் இந்தி கட்டாயப் பாடமாவதைத் தடுத்து விட்டன.[2][17] 1960களில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், 1967 தேர்தலில் காங்கிரசு தோற்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி உருவாகுவதற்கு வழிவகுத்தன. 1967க்குப் பின் திராவிடக் கட்சிகளே தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் திமுக, அதிமுக, மதிமுக போன்ற அரசியல் கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் பல தலைவர்கள், இப்போராட்டங்களில் மாணவர் தலைவர்களாகப் பங்கேற்றவர்கள். மேலும் திராவிட இயக்கத்தை பிராமண-ஆரிய எதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிக்கொணர்ந்து அதன் வெகுஜன ஆதரவைப் பெருக்கவும் இப்போராட்டங்கள் உதவின. ”தமிழ் மட்டும்” என்ற திராவிட இயக்கத்தின் கொள்கை இறுக்கத்தை சற்றுத் தளர்த்தி, இந்திக்கு எதிராக ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தன. தற்சமயம் தமிழகத்தில் நடப்பில் இருக்கும் இருமொழி கல்விக் கொள்கை இப்போராட்டங்களால் உருவானதே. டியூக் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் சுமதி இராமசாமியின்[97] வார்த்தைகளில்:
இறுதியாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களால் தான் இந்திய அலுவல் மொழிகள் சட்டம் 1963ம் அதன் 1967ம் ஆண்டு சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டன. இந்தியக் குடியரசின் தற்போதைய காலவரையற்ற மெய்நிகர் இருமொழிக் கொள்கை (இந்தி மற்றும் ஆங்கிலம்) இப்போராட்டங்களால் தான் உருவானது. 2014 ல் இந்தித் திணிப்புசமூக வலைத்தளங்களில்நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியின் போது 2014 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தித் திணிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது தொடர்பான அறிக்கையில்,
இந்த ஆணையை எதிர்த்து வைகோ, இந்தி மொழியை மத்திய அரசு நிர்வாகத்திலும், மாநிலத்திலும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக் கேடாக முடியும் என அறிக்கை வெளியிட்டார்.[99] கருணாநிதி, அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன் முறையாக முடிவெடுத்துள்ளதாகவும், ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது என்றார்.[100] சமஸ்கிருத திணிப்புஜூலை 2014 மாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு (2014) சமஸ்கிருத மொழி வாரத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதம் தாயாக விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் அந்த மொழியை கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றும்படி அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வினை தமிழ் மற்றும் திராவிட அமைப்புகள் எதிர்த்தன. இதுகுறித்து தமிழக முதல்வரான அ.தி.மு.கவினை சார்ந்த ஜெயலலிதா நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கண்டனத்தை தெரிவித்தார். அதில்
என கேட்டுக்கொண்டார்[101] . மேலும் ஆசிரியர் தினமான செப்டெம்பர் 5 ஐ "குரு உத்சவ்" என கொண்டாடும்படி அனைத்து பள்ளிகளுக்கும் நடுவண் அரசு ஆகஸ்ட்-2014 இல் சுற்றறிக்கை அனுப்பியது. இதனை சமஸ்கிருத திணிப்பு என்று தமிழகத்தில் உள்ள திராவிட மற்றும் தமிழ் அமைப்புகள் கடுமையாகக் கண்டித்தன.[102] மேலும் தி.மு.கவின் மு.கருணாநிதி ஒரு திருமண விழாவில் கீழ்க் கண்டவாறு கூறினார்:
இதுபோன்ற நிகழ்வுகள் சமஸ்கிருதம் மூலம் இந்தியை திணிப்பதாக தமிழக தலைவர்கள் கருதினர். கல்லூரிகளில் இந்தி கட்டாயம்செப்டெம்பர் 2014 இல் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் நடுவண் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது . அத்துறையின் சார்பு செயலாளர் குல்விந்தர் குமார் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையின் மூலமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் இந்தியும், ஆங்கிலமும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும் மேலும் பட்டப்படிப்புகளில் சட்டம், வணிகவியல் ஆகிய பாடங்களை இந்தி வழியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடபட்டிருந்தது. [103] இதற்கும் தமிழக முதலமைச்சர் மற்றும் பல்வேறு திராவிட,தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியது. கடுமையான எதிர்ப்புகள் காரணமாக அந்த அறிக்கையை நடுவண் அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் வேத பிரகாஷ் கூறியதாவது:–
இவற்றையும் காண்க
(ஏன் வேண்டாம் இந்தி ?) http://srguruprasandh2022.blogspot.com/2023/02/blog-post.html பரணிடப்பட்டது 2023-02-01 at the வந்தவழி இயந்திரம் மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia