நார்மாண்டியில் அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க வான்குடை படைப்பிரிவுகள் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சில் வான்வழியே தரையிறங்கின. பிரான்சு மீதான நேசநாட்டு கடல்வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. கடல்வழியே தரையிறங்கும் படைகளுக்குத் துணையாக பிரிட்டானிய மற்றும் அமெரிக்க வான்குடை படைப்பிரிவுகள் வான்வழியே பிரான்சில் தரையிறக்கப்பட்டன. அமெரிக்காவின் 101வது மற்றும் 82வது வான்குடை டிவிசன்களின் 13,100 படைவீரர்கள் ஜூன் 5ம் தேதி பின்னிரவில் வான்குடைகள் மூலமாகவும் ஜூன் 6ம் தேதி பகலில் 3,937 வீரர்கள் மிதவை வானூர்திகள் மூலமாகவும் நார்மாண்டிப் பகுதியில் தரையிறங்கினர். செர்போர்க் துறைமுகத்தைக் கைப்பற்ற அமெரிக்க 7வது கோருக்கு துணை செய்வது. யூடா கடற்கரையிலிருந்து நார்மாண்டியின் உட்பகுதிக்குச் செல்லும் சாலைகளைக் கைப்பற்றுதல், ஜெர்மானியப் படைகள் நார்மாண்டிக் கடற்கரையை அடையப் பயன்படுத்தும் சாலைகளை மறித்தல் ஆகிய இலக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இவை தவிர டூவ் ஆற்றை காரெண்டான் நகர் அருகே கடந்து, ஒமாகா கடற்கரையிலிருந்து முன்னேறி வரும் அமெரிக்க 5வது கோருடன் இணைந்து, யூடா மற்றும் ஒமாகா பாலமுகப்புகளை ஒன்றாக்கும் பொறுப்பும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்ட இடங்களில் படைகளின் தரையிறக்கம் நடைபெறவில்லை. இரு வான்குடை டிவிசன்களின் வீரர்களும் நார்மாண்டிப் பகுதியெங்கும் சிதறியதால் யூடா கடற்கரைச் சாலைகளை மூன்று நாட்கள் வரை அவற்றால் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் நார்மாண்டியிலிருந்த ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் பெரும் குழப்பத்திலிருந்ததால் அவற்றால் இதைப் பயன்படுத்தி யூடா கடற்கரையைத் தாக்க முடியவில்லை. ஒரு வாரத்துக்குள் அமெரிக்க வான்குடை படைகளின் இலக்குப் பகுதியிலிருந்த ஜெர்மானிய அரண்நிலைகள் கடும் சண்டைக்குப் பின் கைப்பற்றப்பட்டன. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia