குரோமியம்(III) நைட்ரேட்டு (Chromium(III) nitrate) என்பது Cr(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இதனுடைய ஒன்பதுநீரேற்று [Cr(H2O)6](NO3)3•3H2O என்ற வாய்பாட்டால் விவரிக்கப்படுகிறது. பொதுவாக குரோமியம்(III) நைட்ரேட்டு சேர்மம் குரோமியம், நைட்ரேட்டு மற்றும் மாறுபட்ட அளவு நீரைக் கொண்ட பல கனிம சேர்மங்களை விவரிக்கிறது. இவற்றில் மிகவும் பொதுவானது அடர் ஊதாநிறத்தில் நீருறிஞ்சும் தன்மை கொண்ட திண்மநிலையில் இருக்கும் சேர்மம் குரோமியம்(III) நைட்ரேட்டு ஆகக் கருதப்படுகிறது. நீரற்ற பச்சை வடிவமும் அறியப்படுகிறது. குரோமியம்(III) நைட்ரேட் சேர்மங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட வணிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவை சாயமிடும் தொழிலில் சில பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.[2] குரோமியம் ஒருங்கிணைப்பு அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்காக கல்வி ஆய்வகங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
கட்டமைப்பு
ஒப்பீட்டளவில் சிக்கலான [Cr(H2O)6](NO3)3•3H2O என்ற வாய்பாடு இந்த வேதிப் பொருளின் எளிமையான கட்டமைப்பைக் காட்டுகிறது. குரோமியம் மையங்கள் ஆறு நீர் ஈந்தணைவிகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இத்திடப்பொருளின் மீதமுள்ள பருமனளவு மூன்று நைட்ரேட்டு எதிர்மின் அயனிகளாலும் மூன்று நீர் மூலக்கூறுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.[3]
பண்புகள்
நீரற்ற உப்பு பச்சை நிறப் படிகங்களாக உருவாக்குகிறது. இது தண்ணீரில் மிகவும் நன்றாகக் கரையக்கூடியதாகும். ஆனால் நீரற்ற குரோமியம்(III) குளோரைடு இதற்கு மாறனதாகும். அது சிறப்பு நிலைமைகளைத் தவிர்த்து நீரில் மிக மெதுவாக கரையும். 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் குரோமியம்(III) நைட்ரேட்டு சிதைவடையும். சிவப்பு-ஊதா நீரேற்றும் தண்ணீரில் அதிகம் கரையும். கார உலோகமற்ற வினையூக்கிகளிலும் ஊறுகாய் தயாரிப்பிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.