சீரியம்(III) கார்பனேட்டு(Cerium(III) carbonate) என்பது Ce2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். சீரியம்(III) நேர்மின் அயனிகளும் கார்பனேட்டு எதிர்மின் அயனிகளும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. இதனுடைய தூய வடிவம் இயற்கையில் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சீரியத்தைக் கொண்டிருக்கும் கார்பனேட்டுகள், குறிப்பாக பாசிட்னசைட்டு குழு கனிமங்கள் மோனசைட்டுடன் சீரியத்தின் தாதுவாகக் கிடைக்கிறது.
மூலக்கூறு எடை
சீரியம்(III) கார்பனேட்டு சேர்மத்தின் மூலக்கூற்று எடை 460.2587 கி/மோல் ஆகும்[1].
வெவ்வேறு பெயர்கள்
ஐயுபிஏசி முறையில் இதற்கு சீரியம் டிரைகார்பனேட்டு என்று பெயராகும்[2]. டைசீரியம் டிரைகார்பனேட்டு, சீரியம்(III) கார்பனேட்டு, சீரியம் கார்பனேட்டு, சீரசு கார்பனேட்டு, டைசீரியம்(3+) அயனி டிரைகார்பனேட்டு என்பன இதன் வேறு வேதியியல் பெயர்களாகும்.
பயன்
சீரியம்(III) குளோரைடு தயாரிப்பில் சீரியம்(III) கார்பனேட்டு பயன்படுகிறது. மேலும் வெள்ளொளிர் விளக்குகளிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள்[3].