ஜியார்ஜ் டி கிவிசி
ஜியார்ஜ் டி கிவிசி (ஆங்கிலம்:George de Hevesy, ஆகஸ்டு 1, 1885 – ஜூலை 5, 1966) முதன்முறையாக கதிரியக்க ஐசோடோப்புகளை குறியிகளாக (Tracer) பயன்படுத்திய அறிவியலாளர் ஆவார். இவரே முதலில் உயிரியலிலும் வேதியியலிலும் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்தியவர். அந்த வகையில் அவர் ஒரு அறிவியல் முன்னோடியாவார். ஆய்வு மாணவராக 1911 -ல் இருந்தபோது அவருக்கு இயற்கைக் கதிரியக்க தனிமங்களைப் பிரித்து எடுக்கும் பணி கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு போதிய வருவாய் இல்லாத நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளரிடமே உணவும் எடுத்துக்கொண்டார். அவருக்கு வீட்டுக்கார உரிமைப் பெண்மணி சில சமயங்களில் பழைய உணவையே மறுநாளும் பின்னரும் பரிமாறுவதாக ஐயம் ஏற்பட்டது. ஒரு நாள் பரிமாறிய உணவில் மீதமிருந்ததில், அம்மையாருக்குத் தெரியாமல் சிறிது கதிர் ஐசோடோப்புகளைக் கலந்து வீட்டார். அடுத்தடுத்த நாட்களில் உணவு பரிமாறப் பட்டபோது அவருக்குத் தெரியாமல் சிறிது உணவை எடுத்து, அப்போது அவரிடமிருந்த எளிய கருவிகளின் துணையுடன் ஆய்ந்த போது முன்பு வழங்கப்பட்டட அதே உணவு வழங்கப்பட்டு இருப்பது அறிந்து திடுக்குற்றார். நிகழ்ந்தது எதுவும் அம்மையாருக்குத் தெரியாது. ஆனால் கிவிசியின் ஐயம் தவறல்ல என்பது தெளிவாயிற்று. அவர் இதுபற்றி அம்மையாரிடம் கூற, அவர் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிலை உருவாயிற்று. இதுவே கதிரியக்க ஐசோடோப்புடன் செய்யப்பட்ட முதல் பயன்பாட்டுச் சோதனையாகும். 1943-ல் கதிர் ஐசோடோப்புகளை உயிரியலில் குறியி அணுக்களாகப் பயன்படுத்தியமைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1959-ல் அமைதிக்கு அணு என்னும் பரிசும் பெற்றார் மேற்கோள்கள்
ஆதாரம்
|
Portal di Ensiklopedia Dunia