மெதிலமீன் (Methylamine) என்பது CH3NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இந்த நிறமற்ற வாயுவானது அம்மோனியாவின் வழிப்பொருளாகும். அம்மோனியாவில் உள்ள ஒரு ஐதரசன் அணுவானது ஒரு மெதில் தொகுதியால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு இச்சேர்மம் பெறப்படுகிறது. இதுவே எளிய ஓரிணைய அமீன் ஆகும். இச்சேர்மம் மெத்தனால், எத்தனால், டெட்ராஐதரோஃப்யூரான் அல்லது நீர் இவற்றில் கரைக்கப்பட்டு கரைசல்களாகவோ அல்லது உலோக கொள்கலன்களில் அதிக அழுத்தத்தில் அடைத்து வைக்கப்பட்ட நீரற்ற வாயுக்களாகவோ விற்பனை செய்யப்படுகிறது. தொழில்முறையில் மெதிலமீனானது அழுத்தப்பட்ட தொட்டிலாரிகள் அல்லது சரக்குந்துகளில் அடைக்கப்பட்டு ஓரிடத்திலிருந்து மற்றொர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த வாயு மீனின் நாற்றத்தைக் கொண்டுள்ளது. மெதிலமீனானது வணிகரீதியாக கிடைக்கும் பல சேர்மங்களின் தொகுப்பு முறைக்கு ஒரு தொடக்க மற்றும் அடிப்படை அலகாகப் பயன்படுகிறது.
தொழிலக தயாரிப்பு
மெதிலமீனானது வணிகரீதியில் அலுமினோசிலிகேட்டு முன்னிலையில் அம்மோனியா மற்றும் மெத்தனால் வினைபுரிவதால் தயாரிக்கப்படுகிறது. டைமெதிலமீன் மற்றும் டிரைமெதிலமீன் ஆகியவை உபவிளைபொருட்களாக கிடைக்கின்றன; வினைவேகவியலும் வினைபடுபொருட்களின் விகிதங்களும் விளைபொருட்களின் விகிதாச்சாரத்தை தீர்மானிக்கின்றன. இந்த வினையில் மிகவும் சாத்தியமான விளைபொருளாக டிரைமெதிலமீன்உள்ளது.[1]
CH3OH + NH3 → CH3NH2 + H2O
இந்த முறையைப் பயன்படுத்தி 2005 ஆம் ஆண்டில், உத்தேசிக்கப்பட்ட 1,15,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆய்வகத் தயாரிப்பு முறைகள்
1849 ஆம் ஆண்டு சார்லசு அடால்ப் உர்ட்சு என்பவரால் முதன்முறையாக மெதிலமீன் பின்வரும் முறையில் தயாரிக்கப்பட்டது. இம்முறையில், மெதில்ஐசோசயனேட்டு மற்றும் அதனையொத்த சேர்மங்களின் நீராற்பகுப்பினை அடிப்படையாகக் கொண்டது.[2][3] இம்முறைக்கான உதாரணமானது மெதிலமீனை அசிட்டமைடு மற்றும் புரோமின் வாயு ஆகியவற்றைக்கொண்டு ஹாப்மேன் மறுஒழுங்கு செய்யும் வினை வழிமுறையை உள்ளடக்கியதாக உள்ளது.[4][5]
ஆய்வகத்தில், மெதிலமீன்ஐதரோகுளோரைடு வேறு பல முறைகளின் மூலமாகவும் எளிதில் தயாரிக்கப்படுகிறது. அவற்றில் ஒரு முறையானது பார்மால்டிஹைடை அம்மோனியம் குளோரைடுடன் வினைப்படுத்துவதாகும்.[6]
இவ்வாறு கிடைக்கும் நிறமற்ற ஐதரோகுளோரைடு உப்பானது சோடியம் ஐதராக்சைடைப் போன்ற ஒரு வலிமையான காரத்தினைச் சேர்க்கும் போது அமீனாக மாற்றப்படுகிறது:
[CH3NH3]Cl + NaOH → CH3NH2 + NaCl + H2O
மற்றொரு முறையானது நைட்ரோமீத்தேனை துத்தநாகம் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றின் மூலம் ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் செயல்முறையைப் பயன்படுத்திக் கொள்கிறது.[7]
மெதிலமீனைத் தயாரிப்பதற்கான மற்றுமொரு முறையானது கிளைசீனை ஒரு நீரில் காணப்படும் ஒரு வலிமையான காரத்துடன் வினைப்படுத்தி தன்னிச்சையான கார்பாக்சில் நீக்க வினையாகும்.
வினைபுரியும் திறம் மற்றும் பயன்பாடுகள்
மெதிலமீன் ஒரு சிறந்த கருக்கவர் காரணியாகவும், தடையேதுமில்லாத அமீனாகவும் இருக்கிறது.[8] ஒரு அமீனாக இச்சேர்மம் ஒரு வலிமை குறைந்த காரமாக கருதப்படுகிறது. கரிம வேதியியலில் இச்சேர்மத்தின் பயன் எங்கும் பரவியிருக்கிறதாக உள்ளது. சில எளிய வினைக்காரணிகளை உள்ளடக்கிய சில எளிய வினைகள்: பாஸ்ஜீன் வாயுவுடன் வினைபுரிந்து மெதில் ஐசோசயேனட்டைத் தரும் வினை, கார்பன் டை சல்பைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடுடன் சேர்ந்து சோடியம் மெதில்டைதயோகார்பமேட்டு, குளோரோபார்ம் மற்றும் காரத்துடன் சேர்ந்து மெதில் ஐசோசயனைடு எதிலீன் ஆக்சைடுடன் சேர்ந்து மெதில்எதனாலமீன்கள் தருவது ஆகியவை. திரவ மெதிலமீனானது திரவ அம்மோனியாவை ஒத்த கரைப்பான் பண்புகளைப் பெற்றுள்ளது.[9]
மருந்தியல் பொருட்களான எஃபெட்ரைன் மற்றும் தியோஃபிலின், பூச்சிக்கொல்லிகளான கார்போஃப்யூரான், கார்பரைல் மற்றும் மெத்தம் சோடியம், கரைப்பான்களான N-மெதில்-2-பிரோலிடோன், N-மெதில்பார்மமைடு ஆகியவை மெதிலமீனிலிருந்து பெறப்படும் சில குறிப்பிடத்தக்க வணிகரீதியான தொகுப்புப் பொருட்களாகும். பரப்பியங்கிகள் மற்றும் ஒளிப்பட மேம்படுத்திகளின் தயாரிப்பிற்கு மெதிலமீனானது கட்டமைக்கும் அலகாகத் தேவைப்படுகிறது.[2]
↑ 2.02.1Karsten Eller, Erhard Henkes, Roland Rossbacher, Hartmut Höke "Amines, Aliphatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a02_001
↑Charles-Adolphe Wurtz (1849) "Sur une série d'alcalis organiques homologues avec l'ammoniaque" (On a series of homologous organic alkalis containing ammonia), Comptes rendus … , 28 : 223-226. Note: Wurtz's empirical formula for methylamine is incorrect because chemists in that era used an incorrect atomic mass for carbon (6 instead of 12).
↑Debacker, Marc G.; Mkadmi, El Bachir; Sauvage, François X.; Lelieur, Jean-Pierre; Wagner, Michael J.; Concepcion, Rosario; Kim, Jineun; McMills, Lauren E. H. et al. (1996). "The Lithium−Sodium−Methylamine System: Does a Low-Melting Sodide Become a Liquid Metal?". Journal of the American Chemical Society118 (8): 1997. doi:10.1021/ja952634p.