ரால்ஃப் ஸ்டைன்மன்
ரால்ஃப் ஸ்டைன்மன் (Ralph Marvin Steinman, சனவரி 14, 1943 – செப்டம்பர், 2011) என்பவர் கனடாவைச் சேர்ந்த நோய்த்தடுப்பாற்றல் மருத்துவரும் உயிரியலாளரும் ஆவார்[2]. இவர் 1973 ஆம் ஆண்டில் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுப் போது கிளைவடிவ உயிரணுக்களைக் (dendritic cells) கண்டுபிடித்தார்.[3]. இவருக்கும் அமெரிக்காவின் புரூஸ் பொய்ட்லர், சூல்ஸ் ஹொஃப்மன் ஆகியோருக்கும் 2011 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[4]. "கிளைவடிவ உயிரணுக் கண்டுபிடிப்புக்காகவும், புதிய அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது" என்பதைக் கண்டுபிடித்தமைக்காகவும் ஸ்டைன்மனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது[5]. இவருக்கான நோபல் பரிசு 2011 அக்டோபர் 3 திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அவர் மூன்று நாட்களுக்கு முன்னர் செப்டம்பர் 30 இல் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். ஆனாலும், "நல்லெண்ணத்தின் அடிப்படையில், அவர் உயிரோடு உள்ளார் என்ற நம்பிக்கையிலேயே பரிசு அறிவிக்கப்பட்டது," என பரிசுக் குழு தெரிவித்தது. இதனால், அறிவிக்கப்பட்ட பரிசை மீளப் பெறுவதில்லை என நோபல் பரிசுக் குழு தீர்மானித்தது[6]. மொத்த நோபல் பரிசுத் தொகையின் அரைவாசி இவருக்கும், மீதமான பகுதி மற்றைய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பபட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia