சப்தஸ்தானக் கோயில்கள்

சப்தஸ்தானக் கோயில்கள் என்பது ஏழு கோயில்கள் என்று பொருள்படும். தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானம் எனப்படும் ஏழு இடங்களும், தொடர்புடைய ஏழு கோயில்களும் உள்ளன.

பெயர் விளக்கம்

சப்த + ஸ்தானம் என்றால் ஏழு புனித இடங்கள் எனப்படுகிறது. புனிதத் தலங்கள், சப்தஸ்தானத் தலங்கள், சப்தஸ்தானக் கோயில்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

திருவையாறு சப்தஸ்தானக் கோயில்கள்

திருவையாற்றைத் தலைமைக் கோயிலிடமாகக் கொண்டு, உள்ள கட்டடக் கலைச் சிறப்புடன் உள்ள இக்கோயில்கள் ஏழூர்க்கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இக் கோயில்கள் ஏழு முனிபுங்கவர் (சப்தரிஷி) ஆசிரமங்களாகப் போற்றிப் புகழப்படுகின்றன. [1] சப்தரிஷிகளான காசியபர் (கண்டியூர்), கௌதமர் (பூந்துருத்தி), ஆங்கிரசர் (சோற்றுத்துறை), குத்ஸர் (பழனம்), அத்திரி (திருவேதிகுடி), பிருகு (நெய்த்தானம்), வசிட்டர் (ஐயாறு) ஆகியோர் இங்கு ஆசிரமங்கள் அமைத்து இறைவனை வழிபட்டதாகக் கூறுவர். ஐயாறப்பர், நந்திதேவர்-சுயசாம்பிகை தம்பதியை அழைத்துக் கொண்டு, அவர்கள் முனிவர்களின் ஆசியைப் பெற வேண்டி இவ்வேழு ஆசிரமங்களுக்கும் சென்றதாகக் கூறுவர். [2]

நந்திதேவர் விழா

நந்திதேவர் திருமண விழா

சப்தஸ்தான விழாவிற்கு முன்னதாக நடைபெறுவது நந்திதேவர் விழா ஆகும். இது முக்கியத்துவம் வாய்ந்தது. சிலாதமுனிவரின் புதல்வராய்த் தோன்றியவர் திருநந்தி தேவராவார். அவருக்கு திருமழமாடியில் தோன்றிய சுயசாம்பிகையை திருமணம் செய்துவைக்க திருவையாற்றிலிருந்து ஐயாறப்பரும், தர்மசம்வர்த்தினியும் பங்குனி மாதம் புனர்பூசத்தன்று திருமழபாடிக்கு பல்லக்கில் செல்வர். அன்று இரவே புதுமணத் தம்பதியரோடு கொள்ளிடத்தைக் கடந்து திருவையாற்றை அடைவர். [3]

ஏழூர்த் திருவிழா

ஏழூர் விழா நிறைவாக பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும் சப்தஸ்தான விழா அல்லது ஏழூர்த் திருவிழா தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவாகும். [4] முதன்மைக் கோயிலான திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்டப் பல்லக்கில் இறைவனும், இறைவியும் உலாக் கிளம்பி, தொடர்புடைய ஆறு தலங்களுக்கும் செல்வர். அவ்வாறு பிற தலங்களுக்குச் செல்லும்போது அந்தந்த கோயிலைச் சேர்ந்த இறைவனும், இறைவியும் உள்ள பல்லக்குகள் இப்பல்லக்குடன் இணைந்துகொள்ளும்.[3] தில்லைஸ்தானம் கோயிலின் அருகில் காவிரியாற்றில் வாணவேடிக்கை நடைபெறும். ஏழு பல்லக்குகளும் அந்தந்த இறைவன்,இறைவியருடன் வருவதை பக்தர்கள் கண்டுகளிப்பர். பின்னர் பூச்சொரிதல் எனப்படுகின்ற நிகழ்வு நடக்கும். அப்போது ஒரு பொம்மை அந்தந்த பல்லக்குகளில் உள்ள இறைவன், இறைவியருக்கு பூப் போடும். இந்நிகழ்விற்குப் பின் அனைத்துப் பல்லக்குகளும் தத்தம் கோயிலுக்குத் திரும்பும். [5][6]

பிற சப்தஸ்தானக் கோயில்கள்

திருவையாற்றை மையமாகக் கொண்டு திருவையாறு சப்தஸ்தானக் கோயில்கள் உள்ளதைப் போல தமிழ்நாட்டில் சக்கராப்பள்ளி சப்தஸ்தானம், மயிலாடுதுறை சப்தஸ்தானம், கும்பகோணம் சப்தஸ்தானம், கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம், திருநல்லூர் சப்தஸ்தானம், திருநீலக்குடி சப்தஸ்தானம், கஞ்சனூர் சப்தஸ்தானம், நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற சப்தஸ்தானங்கள் உள்ளன. [7] கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தொடர்புடைய சப்தஸ்தான விழாவிற்கான பழைய பல்லக்கு முற்றிலும் பழுதடைந்த நிலையில் இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. பல்லக்கு சீர்செய்யப்பட்டு, வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. [8] 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா நடைபெற்றது. [9] அண்மைக்காலமாக நடைபெறாமல் கரந்தட்டாங்குடி சப்தஸ்தான விழா 35 ஆண்டுகளுக்குப் பிறகு 2023இல் நடைபெற்றது. [10]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. ஏழூர்த் தலச் சிறப்பு
  2. சித்ரா மூர்த்தி, வேலவன் வில்லேந்தியது ஏன்?, ஆன்மிகம்
  3. 3.0 3.1 கோவை.கு.கருப்பசாமி, சப்தஸ்தான விழா சிறப்புகள், தினமணி, 17 ஏப்ரல் 2018
  4. சப்தஸ்தானத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
  5. "'Sapthasthanam' festival begins". The Hindu. 21 April 2019. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/sapthasthanam-festival-begins/article26904458.ece. 
  6. Venkatraman, Sekar (2019). Temples of Forgotten Glory: A Wide Angle Exposition. Notion Press. p. 182. ISBN 9781645876250.
  7. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
  8. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம், தினமணி, 8 பிப்ரவரி 2016
  9. ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் ஏழூர் பல்லக்கு பெருவிழா, மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி, தினமணி, 22 ஏப்ரல் 2016
  10. 1400 ஆண்டுகள் பழமையான கோயிலில் திருவிழா, 35 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் கண்ணாடிப் பல்லக்கு ஊர்வலம், காமதேனு, 11 மே 2023

வெளியிணைப்புகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya