சிரீசியஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை சிரீசியஸ் (Pope Siricius) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் திசம்பர் 384 முதல் நவம்பர் 26, 399 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 38ஆம் திருத்தந்தை ஆவார்[1]. வரலாற்றுக் குறிப்புகள்திருத்தந்தை சிரீசியஸ், திருச்சபையின் தலைமைப் பதவிக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தையாகிய முதலாம் தாமசுஸ் நாடுகடத்தப்பட்டிருந்தபோது அப்பதவிக்கு உரிமைகொண்டாடிய உர்சீனுஸ் என்னும் எதிர்-திருத்தந்தையின் ஆதரவாளர்கள் சிரீசியசுக்கும் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தனர். அப்போது பேரரசனாக இருந்த இரண்டாம் வாலன்டீனியன் திருத்தந்தை பதவிக்கு சிரீசியஸ் மக்களின் முழு ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். அவரும் சிரீசியசை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு ஆதரவு தெரிவித்தார். கிறித்தவ நம்பிக்கைக்கு எதிரான கொள்கைகள் கண்டிக்கப்படல்திருத்தந்தை முதலாம் தாமசுசைப் போலவே, திருத்தந்தை சிரீசியசும் கிறித்தவ நம்பிக்கைக்கு எதிராக எழுந்த கொள்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். இருந்தாலும், தப்பறைக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டு, மனமாற்றம் பெற்று, மீண்டும் சபையோடு இணைந்தவர்களை அவர் கனிவோடு நடத்தினார்.
எதிர்ப்புதிருத்தந்தை சிரீசியசை ஒருசில காரியங்களில் சில திருச்சபைத் தலைவர்கள் எதிர்த்தார்கள். அவர்களுள் புனித ஜெரோம் என்பவரும் புனித நோலா பவுலீனுஸ் என்பவரும் முக்கியமானவர்கள். ஜெரோம் உரோமை நகரிலிருந்து வெளியேற்றப்பட்டபோது சிரீசியஸ் அதற்கு இசைவு தெரிவித்தார். பவுலீனுஸ் பார்வையில் சிரீசியஸ் ஆணவத்தோடு அதிகாரம் செலுத்தினார். இவ்வாறு இரு பெரும் புனிதர்கள் சிரீசியசுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் முதல் நூற்றாண்டுகளில் சிரீசியசின் பெயர் புனிதர் பட்டியலில் இடம்பெறவில்லை. பிற்காலத்தில், 1748ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் என்பவர் சிரீசியசின் பெயரைப் புனிதர் பட்டியலில் சேர்த்தார். சிறப்புப் பணிகள்திருத்தந்தை சிரீசியஸ் சட்டப்பூர்வமாக வெளியிடப்படும் அரசு ஆணைகள் போன்ற ஆவணங்களை முதல்முறையாக வெளியிட்ட திருத்தந்தை ஆவார். அவர் 385ஆம் ஆண்டு, பெப்ருவரி 11ஆம் நாள் வெளியிட்ட தீர்வு ஆணை காலத்தால் அழிந்துபடாமல் காக்கப்பட்டு வந்துள்ளது. அது தேராகோனா நகர் ஆயர் இமேரியுஸ் என்பவருக்கு எழுதப்பட்டது. இமேரியுஸ் கேட்ட கேள்விகளுக்கு சிரீசியஸ் அந்த ஆவணத்தில் பதில் தருகிறார். அந்த ஆவணத்தின் சுருக்கம் இதோ: உரோமை ஆயராம் திருத்தந்தை என்பவர் புனித பேதுருவின் வாரிசாக வருபவர் என்பதால், அவரிடத்தில் பேதுருவின் அதிகாரம் நிலைத்துள்ளது. தப்பறைக் கொள்கைகளுக்காக சபைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்கும்போது அவர்களுக்கு இன்னொரு முறை திருமுழுக்கு அளிக்க வேண்டிய தேவை இல்லை. குருக்களும் திருத்தொண்டரும் மணத்துறவைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட வயதும் தகுதிகளும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு வெளியிட்ட அந்த ஆவணத்தை மக்களுக்கு வாசித்து அறிவிக்குமாறு சிரீசியஸ் ஆப்பிரிக்கா, எசுப்பானியா, பிரான்சு நாட்டின் ஆயர்களைக் கேட்டுக்கொண்டார். 386, சனவரி மாதத்தில் சிரீசியஸ் வெளியிட்ட ஆவணத்தில், எந்தவொரு ஆயரையும் திருப்பொழிவு செய்யுமுன் உரோமை ஆயரின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று விதிமுறை அளித்தார். இறப்பும் திருவிழாவும்சிரீசியஸ் 399ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள் இறந்தார். அவருடைய உடல் புனித பிரிசில்லா கல்லறைத் தோட்டத்துக்கு அருகே இருந்த புனித சில்வெஸ்தர் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய திருவிழா நவம்பர் 26ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
References |
Portal di Ensiklopedia Dunia