பேரியம் செலீனேட்டு (Barium selenate) என்பது BaSeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். பேரியம் சல்பேட்டு சேர்மத்தின் வடிவமொத்த கட்டமைப்பைக் கொண்டுள்ள இச்சேர்மம் பேரியம் சல்பேட்டைக் காட்டிலும் 18 மடங்கு அதிகமான கரைதிறனையும் குறைவான நிலைப்புத் தன்மையையும் கொண்டுள்ளது.[3]
தயாரிப்பு
கரையக்கூடிய பேரியம் உப்பு ஏதாவதொன்றுடன் சோடியம் செலீனேட்டு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பேரியம் செலினேட்டைப் பெறலாம்.[1]
BaCl2 + Na2SeO4 → BaSeO4↓ + 2 NaCl
பண்புகள்
வெள்ளை நிறத்தில் திண்மப் பொருளாக உள்ள பேரியம் செலீனேட்டு தண்ணீரில் சிறிதளவு கரையும்.[4] 425 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கப்படும் போது, இச்சேர்மம் சிதைகிறது. மற்றொரு பேரியம் செலீனேட்டு சேர்மமான பேரியம் இருசெலீனேட்டு என்ற சேர்மமும் (BaSe2O7) அறியப்படுகிறது. இது Pnma இடக்குழுவில் (எண். 62) a = 8.993 Å, b = 5.675 Å, c = 7.349 Å என்ற அணிக்கோவை அளவுருக்களில் செஞ்சாய்சதுர வடிவ பேரைட்டு வகை படிகக் கட்டமைப்பில் படிகமாகிறது.[5]
பயன்கள்
கால்நடை தீவனப் பயிர்களை மேய்ச்சலில் செலினியம் மெதுவான வெளியீடு மூலமாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் மேய்ச்சல் விலங்குகளுக்கு செலினியம் வழங்குவதையும் இது உறுதிசெய்கிறது. சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தீவன கூட்டுசேர்க்கையாக இதை நேரடியாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.[6][7]ஐதரசன் ஓட்டத்தில் பேரியம் செலீனேட்டைச் சேர்த்து குறைத்தல் வினையின் மூலம் பேரியம் செலீனைடைப் பெறலாம்.:[8]