2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (2012 Summer Olympics), அலுவல் முறையில் 30வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXX Olympiad) அல்லது இலண்டன் 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் சூலை 27, 2012 முதல் ஆகஸ்டு 12, 2012 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலண்டன் மாநகரத்தில் நடைபெற்றது. தற்கால உலக ஒலிம்பிக் விளையாட்டை மூன்றாவது முறையாக நடத்தும் பெருமையை இலண்டன் மாநகரம் பெற்றிருக்கின்றது.[2][3]. 1908 மற்றும் 1948 ஆண்டுகளில் இருமுறை இங்கு இவ்விளையாட்டுக்கள் நடத்தப்பட்டுள்ளன.[4][5]
1944 ஆண்டு இங்கு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி இரண்டாவது உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நாடுகள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் நான்கு முறை (1904, 1932, 1984, 1996) ஒலிம்பிக் நடத்திய அமெரிக்கா உள்ளது. ஜெர்மனி (1936, 1972), ஆஸ்திரேலியா (1956, 2000), பிரான்ஸ் (1900, 1924), கிரேக்கம் (1896, 2004) ஆகிய நாடுகள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தி உள்ளன.
இதுவரை லண்டன் (இங்கிலாந்து), லாஸ் ஏஞ்சலஸ் (ஐக்கிய அமெரிக்கா), பாரிசு (பிரான்ஸ்), ஏதென்ஸ் (கிரேக்கம்) ஆகிய நகரங்கள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளன. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நகரம் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. ஆனால் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு பின் லண்டன் நகரம் முதலிடத்தை தனித்துப் பிடித்துள்ளது.
இந்த விளையாட்டுக்களுக்கான நிதிநிலை பரிசீலனைகள் மிகுந்த சர்ச்சைக்கு இடமளித்தன[7][8] எனினும் இலண்டனின் பல்வேறு பகுதிகள் பேண்தகு வளர்ச்சி நோக்கத்துடன் மேம்படுத்தப்படுவதால்[9] வரவேற்பும் இருந்தன. விளையாட்டுக்களின் முகனையான குவியமாக புதியதாக கட்டமைக்கப்பட்ட ஒலிம்பிக் பூங்கா உள்ளது. இது கிழக்கு இலண்டனில் ஸ்ட்ராஃபோர்டில் முன்பு தொழிற்பேட்டையாக விளங்கிய 200 எக்டேர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[10] ஏலத்திற்கு முன்பே இருந்த விளையாட்டரங்கங்களை ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்ட்டது.
மே 182004 அன்று பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) இவற்றிலிருந்து தேர்வுக்கான நகரங்களை ஐந்தாகக் குறைத்தது: இலண்டன், மாட்ரிட், மாஸ்கோ, நியூ யார்க் மற்றும் பாரிசு.
பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தணிக்கைக் குழு 2005ஆம் ஆண்டின் பெப்ரவரி-மார்ச்சு மாதங்களில் இந்த ஐந்து நகரங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினர். இக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு சூன் 62005 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் எந்த தரவரிசையோ புள்ளிகளோ தரப்படாவிடினும் மதிப்பீடுகளின்படி பாரிசு முதல்நிலையிலும் இலண்டன் இரண்டாமிடத்திலும் இருந்தன.
இதன்படியும் அண்மைக் காலத்தில் இது பாரிசின் மூன்றாவது முயற்சி என்பதாலும் பாரிசே தேர்ந்தெடுக்கப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 2004இன் ஆகத்தில் இலண்டனுக்கும் பாரிசிற்கும் சமநிலை இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.[11]
சிங்கப்பூரில்சூலை 62005 அன்று ராஃபிள்சு நகர கருத்தரங்கு மையத்தில் வெற்றி பெற்ற நகரம் அறிவிக்கப்பட்டது. முதலாவதாக வெளியேறிய நகரம் மாஸ்கோவாகும். தொடர்ந்து நியூயார்க், மாட்ரிட் வெளியேறின. நான்காவது சுற்றின் இறுதியில் பாரிசுக்கு 50 வாக்குகளும் இலண்டனுக்கு 54 வாக்குகளும் கிடைத்து 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திட இலண்டன் உரிமை பெற்றது.[12] அறிவிக்கப்பட்ட 24 மணி நேரங்களுக்குள்ளேயே சூலை 7, 2005இல் இலண்டன் தொடர் வண்டிப் போக்குவரத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடையாக அமைந்தது.[13]
204 தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 இற்கும் அதிகமானோர் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்பட்டது.[14] 2010 ஆம் ஆண்டில் நெதர்லாந்து அண்டிலிசு கலைக்கப்பட்டதை அடுத்து 2011 சூன் மாதத்தில் இடம்பெற்ற பன்னாட்டு குழுவின் 123வது மாநாட்டில் அந்நாட்டின் தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்புரிமை திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், இந்நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கொடியுடன் 2012 போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றனர். 2011 ஆம் ஆண்டில் உருவான தெற்கு சூடானுக்கு தேசிய ஒலிம்பிக் குழு இல்லாததால் அந்நாட்டின் ஒரேயொரு விளையாட்டு வீரர் குவோர் மாரியல் ஒலிம்பிக் கொடியுடன் போட்டிகளில் பங்கேற்றார்.[15]
இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏழு விளையாட்டுக்களில் 31 சாதனை அளவைகள் எட்டப்பட்டன. மிகக் கூடுதலாக நீச்சற் போட்டிகளில் 9 சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இவற்றில் ஆறு அமெரிக்க விளையாட்டாளர்களால் நிகழ்த்தப்பட்டன.
இந்தப் போட்டிகளுக்கான பாதுகாப்பை 10,000 பேர் கொண்ட காவல்துறை மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கு உதவியாக 13,500 பேர் கொண்ட பிரித்தானிய படைத்துறையினரும் வான்படை மற்றும் கடற்படையினரும் அமர்த்தப்பட்டுள்ளனர். தேம்சு ஆற்றில் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன; ஐரோஃபைட்டர் வானூர்திகள், தரையிலிருந்து வான் தாவும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புச் செலவுகள் £282 மில்லியனிலிருந்து £553 மில்லியனாக உயர்ந்துள்ளது.[59] இந்த ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்கான ஒத்திகை சனவரி 19, 2012 அன்று நடத்தப்பட்டது.[60]
இலண்டனின் பௌ பகுதியில் லெக்சிங்டன் கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் தண்ணீர் தொட்டி மீது ஏவுகணை அமைப்புகள் நிறுவப்படும் என துண்டறிக்கைகள் வழங்கியது.[61][62] இதற்கு சிலர் மிக்க கவலை தெரிவித்தனர்.[61][62] அமைச்சகம் இது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.[61][62]
சூலை 2012இல் ஒலிம்பிக்சிற்கு பாதுகாப்பு அலுவலர்கள் வழங்கவேண்டிய ஜிஎஸ்4 என்ற வேலைவாய்ப்பு நிறுவனம் தன்னால் வேண்டிய அளவிற்கு பணிக்கமர்த்த இயலவில்லை என்று கைவிரித்த நிலையில் மேலும் 3500 படைத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊடகங்களில் இதனை விமரிசித்து பல கட்டுரைகள் வெளியாகி உள்ளன.
சின்னம்
இலண்டன் ஒலிம்பிக்சிற்கான சின்னம் உல்ஃப் ஓலின்சால் வடிவமைக்கப்பட்டு சூன்4, 2007 அன்று வெளியிடப்பட்டது.[63] இந்தச் சின்னம் 2012 எண்ணைக் குறிப்பதாகவும் ஒலிம்பிக் வளையங்களை சூன்யத்தில் உள்ளடக்கியும் உள்ளது.[64]