பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)
திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (இலத்தீன்: Benedictus XV; 21 நவம்பர் 1854 – 22 ஜனவரி 1922, இயற்பெயர்: ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 செப்டம்பர் 1914 முதல் 1922இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் முதல் உலகப் போரின் அரசியல், சமுதாயம் மற்றும் மனித நேய விளைவுகளின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது. 1914இல் ஐரோப்பிய நாகரிகத்தின் தற்கொலை என அழைக்கப்பட்ட முதல் உலகப் போர் துவங்கி சில மாதங்களில் இவர் திருத்தந்தையாக தேர்வுசெய்யப்படார்.[2] இப்போரின் தாக்கங்களை தடுப்பதே இவரின் பெரும் பணியாக அமைந்திருந்தது. இப்போரில் திருப்பீடம் எப்பக்கத்தையும் சாராது நடுநிலைவகிக்கும் என அறிவித்தார். 1916 மற்றும் 1917இல் இவர் அமைதி பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். சீர்திருத்தத் திருச்சபையினர் அதிகம் இருக்கும் செருமனி இதனை ஏற்கவில்லை. பிரெஞ்சுக்காரர்கள் இது தங்களுக்கு எதிரான முயற்சியாக கண்டனர்.[3] அமைதி முயற்சிகள் தோல்வியுற்றதால் இவர் போரின் பாதிப்பினை குறைக்க முனைந்தார். உணவு போன்ற அவசிய பொருட்களை ஐரோப்பாவுக்கு கொடையாக அளித்தார். இவர் போர்க் கைதிகளை சிறையிலேயே சந்தித்தார். போருக்குப்பின்பு பிரான்சு மற்றும் இத்தாலியோடு உறவினை வளுபடுத்த முயன்றார். 1917இல் திருத்தந்தை பத்தாம் பயஸினால் வெளியிடப்பட்ட திருச்சபைச் சட்டத் தொகுப்பினை திருத்தி வெளியிட்டார். இது இறையழ்ழைத்தலை தூண்டியது என்பர்.[4] முதல் உலகப் போரினால் மறைபரப்பு பணிகள் பெரிது பாதிப்படைந்ததை உணர்ந்து இவர் மறைபரப்பில் சீர்திருத்தங்கள் கொணர்தல் உட்பட பலவற்றை எடுத்தியம்பும் Maximum Illud என்னும் அப்போஸ்தலிக்க சுற்றுமடலை எழுதினார். இவரின் ஆட்சியின் இறுதி காலம் சோவியத் உரசிய புரட்சியின் விளைவாக கத்தோலிக்க திருச்சபை துன்புறுத்தப்பட்டதாலும், புரட்சியினை தொடர்ந்து வந்த பஞ்சத்தாலும் நிறைந்திருந்தது. இவர் தூய கன்னி மரியாவிடம் அதிகம் பக்தி கொண்டவர். மரியா எல்லா இறையருளுக்கும் பரிந்துரையாளர் (Mary Mediator of all Graces) என்னும் கோட்பாட்டை இவர் ஆமோதித்தார். அப்பெயரில் மரியாவுக்கு விழா ஒன்றை ஏற்படுத்தினார்.[5] இவர் ஏழுவருடம் திருத்தந்தையாக பணியாற்றியப்பின்பு 22 ஜனவரி 1922 நுரையீரல் அழற்சியினால் இறந்தார். புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.[4] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia