2007 ஏப்ரலில் தமவிபு கட்சியில் இடம்பெற்ற உள்ளக மோதலை அடுத்து, கருணா கட்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து, பிள்ளையான் கட்சித் தலைவரானார். 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரானார்.[2]
வாழ்க்கைச் சுருக்கம்
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை, பேத்தாழையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிள்ளையான் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயத்திலும் பின்னர் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் க.பொ.த. (சாதாரண தர) வகுப்பு (தரம் 11) வரை கல்வி பயின்றவர்.[3][4]
விடுதலை இயக்கத்தில் இணைவு
1990 ஏப்ரல் 4 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது 15வது வயதில் "பிள்ளையான்" என்ற இயக்கப் பெயரில் போராளியாக இணைந்தார்.[4] 1997 இல் முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்குதல், 2001 இல் ஆனையிறவு முகாம் தாக்குதல் ஆகியவற்றில் பங்கு பற்றினார்.[4]
2004 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அணியுடன் சேர்ந்து விலகி அவ்வமைப்பில் பதில் தலைவரானார்.[3] ஆனாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விசுவாசமான பல போராளிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்தனர். 2004 ஏப்ரலில் வெருகல் தாக்குதலில் கருணா அணி தோற்கடிக்கப்பட்டது.[5] அதன் பின்னர் கருணா அணி கிழக்கு மாகாணத்தில் சில சிறிய முகாம்களை அமைத்து இலங்கை ஆயுதப் படைகளின் உதவியுடன் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை சிறிய அளவில் மேற்கொண்டு வந்தது.[6] கருணாவின் சகோதரர் ரெஜி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிள்ளையான் அவ்வமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவரானார். 2006 நடுப்பகுதியில் புலிகளிக்கும் இராணுவத்தினருக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்ததை அடுத்து, இலங்கை அரசுப்படைகள் கிழக்கு மாகாணத்தில் புலிகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தது. இறுதியில், 2007 சூலையில், அரசுப்படைகளின் உதவியுடன் கருணா அம்மானின் துணை இராணுவக் குழு விடுதலைப் புலிகளின் முகாம்களை முழுமையாகக் கைப்பற்றியது.[6][7] 2007 ஏப்ரலில் இல் கருணா அணியில் இடம்பெற்ற உள்ளக மோதல்களைத் தொடர்ந்து கருணா இலண்டனுக்குத் தப்பி ஓடியதை அடுத்து அவ்வமைப்பின் தலைவரானார்.[8] 2004 இல் கருணா ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (தமவிபு) என்ற அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.[4]
உள்ளாட்சி சபைத் தேர்தல்
2008 மார்ச் 10 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் சந்திரகாந்தன் தலைமையிலான தமவிபு கட்சி போட்டியிட்டு அனைத்து சபைகளையும் கைப்பற்றியது.[9][10] இத்தேர்தலில், சந்திரகாந்தனின் தந்தை ஆறுமுகம் சிவனேசதுரை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[3][11][12]}}