நந்தினி என்பது சன் தொலைக்காட்சியில் சனவரி 23, 2017 முதல் டிசம்பர் 22, 2018 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கும் மறுஒளிபரப்பு காலை 10.30 மணிக்கும் ஒளிபரப்பான திகில் மற்றும் கற்பனை காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சித் தொடராகும். இந்த தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 4 ( தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) மொழிகளில் தயாரான தொடராகும். தென் இந்தியாவில் அதிக பொருள் செலவில் செய்த தொடரில் முதல் இடத்திலும், இந்தியா அளவில் 2ஆம் இடத்திலும் உள்ளது.
இந்த தொடரை சன் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இயக்குநர் சுந்தர் சி, குஷ்பூவின் அவனி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜ்கபூர் இயக்கினார். தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட இந்த தொடர் மலையாளம், தெலுங்கு, வங்காளம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[2]
இந்த தொடரின் 2 ஆம் பாகம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 25 பெப்ரவரி 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடரின் வழித் தொடரான ஜோதி என்ற தொடர் 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.
இந்த தொடரின் கதை தன் குடும்பத்தை அழித்ததற்காக ராஜசேகர் குடும்பத்தை பழிவாங்க துடிக்கும் நந்தினி என்ற பாம்பும், தனது கணவனின் குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஜானகி என்ற ஆவிக்கும் நடக்கும் யுத்தம், இதில் யார் ஜெயித்தார்கள் என்பதுதான் கதை.