காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் (அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்) எனப்போற்றும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். இச்சிவலிங்கம், காஞ்சி திருவேகம்பத்தின் முதல் பிரகார தென்பாகத்தில் அமைந்துள்ளது. மேலும், அகத்திய முனிவர் வழிப்பட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[ 1]
தல சிறப்பு
விந்திய மலையின் இறுமாப்பை அடக்க தேவர்கள் வேண்டியவாறு காசியில் வசித்திருந்த அகத்திய முனிவர் காஞ்சிக்கு வந்தபோது. அக்காஞ்சி சான்றோரையுடைத்தாய் இருக்கும் சிறப்பை நாடி இவ்விடத்தில் நாம் தேவர்கள் சொல்லியவண்ணம் வெளிபடுத்த வெண்ணியிருக்கும் இனிமையுடைய தாகிய தமிழை வெளியாக்கல் வேண்டும் என்று பூசித்தனர்.[ 2]
தல வரலாறு
விந்திய மலையின் செருக்கினை அடக்கிய அகத்தியர் , ஏகம்பத்திற்கு தென்பகுதியில் அகத்தியலிங்கம் (தன் பெயரில்) பிரதிட்டை செய்து தொழுதார் என்பது வரலாறாகும்.[ 3]
தல பதிகம்
பாடல் : (அகத்தியேச்சர வரலாறு)
பண்ணிசைந்த வரிச்சுரும்பர் பாடல் பயிலும் மலர் இலைஞ்சித்,
தண்ணிசைந்த சிவகங்கைத் தழங்குந் திரைநீர் குடைந்தாடிப்,
பெண்ணிசைந்த பெருவனப்பின் பிராட்டி
ஆங்குப் பிறங்கொளியால், கண்ணிசைந்த களிசிறப்ப அகத்தியேசங்
கண்டணைந்தாள்.
பண்ணமைந்த பாடல் வண்டு பாடுதற் கிடனாகிய பூக்களைக் கொண்ட
பொய்கையாகிய குளிர்ந்த சிவகங்கை எனும் ஒலிக்கும் அலைகளையுடைய
தீர்த்தத்தில் மூழ்கித் திளைத்து பெண்ணியல்பமைந்த பேரழகினையுடைய
பெருமாட்டியார் அங்கே விளங்கொளியால் கருத்திற்கியைந்த களி துளும்ப
அகத்தியர் அருச்சித்த அகத்தியே சத்தினைக் கண்டு நெருங்கினர்.[ 4]
அமைவிடம்
இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி திருவேகம்பத்தின் முதல் பிரகார தென்பாகத்தில் இச்சிவலிங்க மூர்த்தம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்ப அகத்தில் அகத்தீசுவர மூர்த்தம் தாபிக்கப்பட்டுள்ளது.[ 5]
போக்குவரத்து
வான்வழி: வானூர்தி சேவை இல்லை; உலங்கு வானூர்தி மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.
இரும்புத் தடம்: தொடருந்து மூலாமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து மூலமாகவும், தானியுந்து மூலமாகவும் சென்றடையலாம்.
சாலை வழி: பேருந்திலோ , அல்லது சீருந்துலோ , காஞ்சி வந்தடைய நான்கு திசையில் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து (75 கிலோமீட்டர்) திருப்பெரும்புதூர் வழியாகவும் ; தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து (40 கிலோமீட்டர்) வாலாசாபாத் வழியாகவும் ; வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து (80 கிலோமீட்டர்) வந்தவாசி வழியாகவும்; தென்மேற்கில், பெங்களுரிலிருந்து (275 கிலோமீட்டர்) வேலூர் வழியாகவும் இக்கோயில் நகரை வந்தடையலாம்.[ 6]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
வகை படுத்தப்பட்டவை பாடல்பெற்றவை பிற